கிருபை பெருகக்கடவது
தேவநிழல் வாக்குத்தத்த செய்தி | செப்டம்பர் 2020
தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிகிற அறிவினால் உங்களுக்குக்
கிருபையும் சமாதானமும் பெருகக்கடவது (2 பேதுரு 1:2)
இந்த ஆண்டின் ஒன்பதாவது மாதத்திற்குள் அடியெடுத்துவைத்துள்ளோம். நாட்கள், வாரங்கள் மற்றும் மாதங்கள் கிடுகிடுவென்று
கடந்துபோனாலும், நம்மை சுற்றியுள்ள அநிச்சயம்
மட்டும் கடந்தபாடில்லை. கொரானா எனும் அழையா
விருந்தாளியின் பிரியாவிடை இவ்வாண்டின் இறுதியிலாவது இருக்குமோ?
பழைய ஏற்பாட்டில் காணப்படும் பிரபலமான வாக்கியம். யூதர்கள் இதனை
அவ்வப்போது சொல்லி ஒருவரை ஒருவர் வாழ்த்துவார்கள். இதனை நாம் அதிகமாய் சங்கீதங்களின்
புத்தகத்தில் காண்கிறோம்:கர்த்தர் நல்லவர் அவருடைய கிருபை என்றுமுள்ளது. காலங்கள்,பருவங்கள் மாறினாலும் தேவனுடைய நன்மை, இரக்கம்,
தயவு நம்முடைய வாழ்க்கையில் மாறாதது என்பதை
மறக்காமல் நினைவுகூரவே இப்படி சொல்லுவார்கள்.. ஒரு ஆங்கில மொழிப்பெயர்ப்பு இதனை அவருடைய
அன்பு விட்டுச்செல்வதில்லை என்று குறிப்பிடுகிறது.
நம்முடைய விசுவாசம், நம்முடைய ஜெபம், நம்முடைய ஆராதனை, நம்முடைய கொடுத்தல், ஏன் தேவன்பால் நாம் வைத்திருக்கும்
அன்பும் மங்கிடலாம், தணியலாம். ஆனால் அவர்
நம்மேல் வைத்த அன்பு முடிவில்லாதது, நிறுத்தமுடியாதது.
அவருடைய அன்பு மற்றும் அவருடைய இரக்கம் மட்டுமல்ல. புதிய ஏற்பாட்டில்
கிருபை
எனும் ஓர் புதிய பதம், புதிய வார்த்தை அறிமுகமாகிறது. ஒருவேளை இந்த வார்த்தை பழைய ஏற்பாட்டில் காணப்பட்டாலும், அன்பு, இரக்கம், தயவு போன்ற சொற்களின்
இணைச்சொல்லாக அறியப்பட்டிருந்தாலும், கிருபை
என்ற வார்த்தையின் பொருள் தனித்துவமானது. பிரமாணத்திற்கு கிழாக வாழ்ந்த பழைய ஏற்பாட்டு மக்கள்
தேவனுடைய அன்பு மற்றும் இரக்கத்தை அறிந்திருந்தார்கள். தலைதலைமுறைகளுக்கு தம் ஜனத்தை கனிவுடனே நடத்தும் மேய்ப்பர் என்பதை
அவர்கள் அறியாமல் இல்லை. ஆனாலும் கிருபை~அதன்
முழுமையான வடிவில்~இன்னும் வெளிப்படவில்லை.
கிருபையின் உருவம்
இந்த கிருபையில் அப்படி என்ன அதிசயம்?
யோவான் 1:17-ல் வேதாகமம், கிருபையும் சத்தியமும் இயேசு கிறிஸ்துவின் மூலம் வெளிப்பட்டது என காண்கிறோம். யோவான் 1:14-ல் இயேசுவானவர் "கிருபையினாலும் சத்தியத்தினாலும்" நிறைந்தவராக நமக்குள்ளே
வாசம்பண்ணினார் என்றும் வாசிக்கிறோம். வேறுவிதத்தில் சொன்னால், இயேசுவானவர் கிருபையை
வெளிப்படுத்தினவர் மட்டுமல்ல. அவரே கிருபையின்
உருவமாக இருந்தார். யோவான் சுவிசேஷத்தில் இயேசுவானவரின் புகழ்பெற்ற "ஏழு நானே"
வாக்கியங்களை பார்க்கிறோம். அவ்வெழு குறிப்புகளும் இயேசுவானவரின் தெய்வீகத்
தன்மையை, அவருடைய நோக்கத்தை நமக்கு பலவிதத்தில் வெளிப்படுத்துகின்றன. இயேசுவானவர் சத்தியத்தை பேசினார் என்றில்லை. இயேசு தாமே சத்தியமாக இருந்தார். அதேபோல் இயேசு
கிருபையை வெளிப்படுத்தினார் என்றில்லை, இயேசு தாமே கிருபையானார். இயேசுவானவரின் மற்ற
அநேக குணநலன்களோடுகூட அவருடைய தன்மையை ஒரே வாக்கியத்தில் குறிப்பிடவேண்டுமானால் அவர்
வேறு யாருமல்ல, மனித உருவில் வெளிப்பட்ட தேவனுடைய
கிருபை. ஒருவேளை வியப்பாக தோன்றினாலும்,
உண்மையில், தேவனுடைய இந்த மகத்துவமான தன்மையின் பரிபூரணம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின்
வருகை மட்டுமாக வெளிப்படவில்லை.
பிரமாணமும் கிருபையும்
மோசேயின் பிரமாணத்தை கைகொள்ளுவதில் கண்ணுங்கருத்துமாக இருந்த
மக்களால் இயேசுவின் மூலம் வெளிப்பட்ட கிருபையினால்
வரும் இரட்சிப்பை கிரகிக்கமுடியவில்லை. கிரியைகள்
இல்லாத ஒரு மீட்பினை, விடுதலையை யாரால் கொடுக்கமுடியும்? அவர்களுக்கு அது சாத்தியமில்லாத ஒன்றாகவே தோன்றியது. ஆனாலும், தேவன் மக்களுக்கு பிரமாணத்தின் வழியாக
இரட்சிக்காமல், இயேசுவானவர் சிலுவையில் செய்து முடித்த கிரியையினால் இரட்சிப்பினை இலவசமாக
ஈந்தருளினார். அதுவே கிருபையின் மகத்துவம். ஒருவிதத்தில், தேர்வினை
எழுதாமலேயே ஒரு மாணவன் தேர்ச்சி பெறுவதை போன்றது தான் இதுவும். கற்பனை செய்யுங்கள். ஒரு மாணவன் தேர்வெழுத அறைக்கு
வருகிறான். ஆனால், அந்த ஆசிரியர் அவனுடைய விடைத்தாள்
ஏற்கனவே கொடுக்கப்பட்டுவிட்டது, அவன் தேர்ச்சி
பெற்றுவிட்டான் என்று சொன்னால் எப்படியிருக்கும்.
அதுபோல் தான் இதுவும். இயேசுவானவர்
இதனை நமக்காக செய்துள்ளார்.
கிருபையை சுமப்பவர்கள் !
பலசமயங்களில் நாம் இயேசுவே "வழியாகவும் சத்தியமாகவும்" உள்ளார் என்று பறைசாற்ற வைராக்கிய்ம் கொள்கிறோம். அவரே மெய்யான தேவன், அவரே மெய்யான வழி, அவர் தான்
நமக்கு ஜீவனை தருபவர்ர் என்று சொல்லி திரிகிறோம்.
உண்மைதான். சந்தேகமில்லை. சத்தியத்திற்காகவே
(அல்லது வசனத்திற்காகவே) நாம் வாழ்கிறோம் என்று சொல்லிகொள்வதிலும் பெருமிதம் கொள்கிறோம். நம்முடையது
"மதமன்று" , அது ஒரு "சத்திய மார்க்கம்" என்று புளகாங்கிதமடைகிறோம். சந்தேகமில்லை!
கர்த்தருடைய வசனமாகிய "உடனபடிக்கை பெட்டியை" நாம் நம்முடைய வாழ்க்கையில்
சுமந்தவர்களாக இருக்கிறோம் என்று சொல்கிறோம்.
முற்றிலும் உண்மை! ஆனால், என்னை நானே
கேட்க விரும்பும் ஒரு கேள்வி, கிறிஸ்தவர்களாகிய நாம், வார்த்தையை (சத்தியத்தை) எவ்வளவாய்
சுமக்கவேண்டும் என்று வாஞ்சிக்கிறோமோ, அவ்வளவாய்
கிருபையையும் சுமக்கவேண்டும் என்று நினைக்கிறோமா? வரிசையை நோக்குங்கள். கிருபையும் சத்தியமும். இரண்டுமே முக்கியம் என்றாலும், சத்தியம் கிருபையை
பின்தொடருகிறது. சொல்லப்போனல, கிருபையை வெளிபடுத்தாத சத்தியம் கிறிஸ்துவின்
பிரதிபலிப்பாக இருக்கமுடியாது. இயேசுவே கிருபை
மற்றும் சத்தியத்தின் உருவமென்றால், இயேசுவை நம்முடைய இருதயங்களில் ஏற்றுக்கொண்டவர்களாகிய
நாம், அவரை எல்லாவகையிலும் பின்பற்றும்படி அழைக்கப்பட்டவர்கள், அவரைப் போல் மாறவேண்டும்
என்ற விருப்பம் உள்ளவர்கள், கிருபை மற்றும்
சத்தியத்தின் பிரதிநிதிகளாக இருக்கவேண்டுமேயொழிய, செய்தியாளர்களாய அன்று!
கிருபை பரிசோதனை!
இந்த 2020-ஆம் ஆண்டினில், பாஸிடிவ் என்ற வார்த்தையே மிகவும் பயப்படும் சொல்லாக மாறிவிட்டது. ஒருவருடைய கோவிட்-19 பரிசோதனை பாஸிடிவாக வரக்கூடாது
என்று வேண்டிக்கொள்வோம். அது நெகடிவ் என்று வருமானால், ஒரு சந்தோஷ பெருமூச்சுதான். ஆவிக்குரிய அளவுகோளில், அது தலைகீழ். ஒருவர் கொரோனாவுக்கு அல்ல, அவர் கிருபைக்கு
பாஸிடிவ் என்று அறியப்படவேண்டும். அவர்கள்
சொல்வது என்னவென்றால், இந்த வைரஸ் கிருமி மனிதனுடைய
மூக்கு அல்லது வாயின் வழியாக நம்முடைய தொண்டை அல்லது நுரையீரலுக்குள் நுழையுமானால், அது நம்முடைய சுவாசத்திற்கு கேடாக மாறி, அது நம்முடைய
உயிருக்கே ஆபத்தாகவும் முடியக்கூடும். ஆனால்
கிருபையை பொறுத்தவரையில், அதன் எதிர்மறை தான் உண்மை. இந்த கொரோனா நோய்தொற்று தீவிரமடையும்போது, நம்மை
சுற்றியிருப்பவர்களை பாதிப்பது மட்டுமல்ல, நம்மையும் மரணத்திற்கு நேராக நடத்திடும். மாறாக, கிருபையின் பரவுதல், ஜீவனை கொண்டுவரும். உங்களுக்கும், பிறருக்கும். நித்திய ஜிவன்! ஏனெனில் இயேசு ஜீவனாக உள்ளார். அவர் எங்கெல்லாம சென்றாரோ, அங்கெல்லாம் ஜீவன் உதித்தது. அதேபோல் நீங்கள் எங்கெல்லாம் செல்கிறீர்களோ, எங்கெல்லாம் போகிறீர்களோ, நீங்கள் ஜீவனை பரப்பவேண்டும், மரணத்தை
அன்று. சரி, இந்த கிருபை பரிசோதனையை எப்படி
செய்வது?
அறிகுறிகள்
காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசப் பிரச்சனைகளெல்லாம் உங்களுக்கு
தொற்று ஏற்பட்டுள்ளதற்கான 'பெரும் அறிகுறிகளாக' அறியப்பட்டாலும், அறிகுறிகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. நபருக்கு நபர் இந்த அறிகுறிகள் வேறுபடவும் செய்கிறது. ஆகையால், அறிகுறியுடன் காணப்படும் மக்கள் ஒன்று
பரிசோதனை எடுக்க தீர்மானிக்கிறார்கள் அல்லது சுய-மருத்தவத்தின் மூலம் அதனை மேற்கொள்கிறார்கள். அதே சமயம், இது சிலருக்குள் எந்தவித வெளிப்படையான
அறிகுறி இல்லாமலும் காணப்படுமாம். ஆச்சரியாக
உள்ளது!
ஆனால் கிருபையின் அறிகுறிகள் நிச்சயமாக தென்படும். அறிகுறியின்றி
ஒருவரிடம் கிருபை உள்ளது நாம் சொல்லமுடியாது. நம்முடைய பேச்சு, நம்முடைய நடத்தை, நம்முடைய பரிவர்த்தனை
என்ற ஒவ்வொன்றும் கிருபையை வெளிப்படுத்திவிடும்.
இதன் எதிர்மறையும் சரியே! அதாவது,
கிருபை பெற்றவன் (அல்லது பெற்றவள்) என்று சொல்லிக்கொண்டு
கிருபையின் குணாதிசயத்திற்கு மாறாக தங்கள் வாழ்க்கையில் நடந்துகொள்ளமுடியாது.
பரிசோதனை முடிவு
கிருபை என்ற வார்த்தை கிரேக்கத்தில் கேரிஸ் என்று அழைக்கப்படுகிறது. அதன் பொருள் "இருதயம் மற்றும் வாழ்க்கையின்
ஒவ்வொரு பகுதியிலும் காணப்படும் தெய்வீக தாக்கம்". வேறு வார்த்தையில் சொன்னால், தேவனுடைய தனிப்பட்ட சுபாவம் மனித வாழ்க்கையில் வெளிப்படுவது. கிருபையை தகுதியில்லாதவனுக்கு
காட்டப்படும் தயவு என்றும் சொல்வதுண்டு. கருணைக்கு தகுதியே இல்லாத மக்கள் மேல் தயவை பொழிவது. சொல்லப்போனால், இந்த கட்டுரையின் பக்கங்களுக்குள்
கிருபையை விளக்க நினைப்பது, ஒரு சிறிய பக்கெட்டிற்குள்
சமுத்திரத்தையே அடக்குவதற்கு சமம். கிருபை
ஒரு பெரிய தலைப்பு. கிருபை அனுபவிக்கவேண்டிய ஒன்று. அது விவரிக்கவேண்டிய வார்த்தையன்று. தன்னுடைய எல்லா
நிருபங்களிலும் அப்போஸ்தலனாகிய பவுல் இதனை வெகுவாக விவரித்துள்ளார். ஒரு நபர், தன்னுடைய சாதனைகள் அனைத்தையும் தாண்டி, அது நானல்ல, எனக்கருளப்பட்ட கிருபை என்கிறார் (
1 கொரி 15:10)
வாய்ச்சொல்லும், வாழ்க்கை அனுபவமும்
மேலும், நீங்கள் எல்லாவற்றிலும்
எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக,
தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார் (2 கொரிந்தியர்
9:8)
நவயுக கிறிஸ்தவர்கள் தேவகிருபையை பரவசமூட்டும் பாடல்கள் மற்றும்
பக்திகமழும் செய்திகளின் வழியாக போற்றுவதில் ஆர்வம் காட்டுவதைபோல், அதனை அனுதின வாழ்க்கையின்
ஒரு அங்கமாக மாற்றும் முயற்சியில் அக்கறை காட்டுவதில்லை. நம்முடைய வாழ்க்கையில் கிருபையின் முழுமை வெளிப்படாமல்,
கிருபையை பற்றி நீண்ட உரைகள், நெகிழ்ச்சியூட்டும் அறிக்கைகளினால் ஒரு பயனுமில்லை. இது கிருபையை செயல்படுத்துவதற்கான நேரம். பவுல் தன்னுடைய எல்லா நிருபங்களிலும், தேவமக்கள்
கிருபையை பெறவேண்டும், கிருபையில் ஸ்திரப்படவேண்டும், கிருபையில் பெருகவேண்டும் என்று
இதற்காக வேண்டிக்கொள்கிறார் (உதா ரோமர் 16:24, 1 கொரி 16:23, கலாத் 1:3)
மறுரூபமாக்கும் அறிவு
தன்னைச் சிருஷ்டித்தவருடைய
சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிறீர்களே
(கொலோசேயர் 3:10)
வேதத்தின்படி அறிவு என்பது தேவனைப் பற்றிய தகவல் களஞ்சியமன்று. வேதாகமம் அறிவு என்ற வார்த்தையை இன்னும் மிகவும்
குறிப்பாக சொல்லுகிறது. ஆதாம் ஏவாளை அறிந்தான்,
காயீன் பிறந்தான் (ஆதி 4:1). அறிவு என்றால்,
தேவனை தனிப்பட்ட, நெருக்கமான விதத்தில் அறிந்துகொள்வதாகும். தேவனை நான் அறிந்திருக்கிறேன் என்று சொல்லியும், அந்த அறிவின் விளைவால் என்னிலிருந்து ஒன்றும் பிறக்கவில்லை
என்றால், நான் அவரை உண்மையில் அறியவில்லை என்று
தான் அர்த்தம். பேதுரு தன்னுடைய நிருபத்தில்
(2 பேது 1:2) குறிப்பிடுவது போல், நாம் எவ்வளவாய் அவரை அறிந்திருக்கிறோமோ, அவ்வளவாய்
அவருடைய கிருபையில் வளருவோம், கனிகொடுப்போம்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோ நமக்குள்ள்
ஒரு மெய்யான, உண்மையான, நிலைத்திருக்கும் ஒரு நெருங்கின உறவு. கிருபையில் வளர்வதற்கு மதரீதியிலான கிறிஸ்தவம் சற்றேனும்
உதவிடாது. ஆனால், கிறிஸ்துவோடு உள்ள உறவு கிருபையினால் உங்களை நிரப்பிடும். அவரோடுகூட
நீங்கள் அதிக நேரம் செலவிடுவீரானால், நீங்கள் அவரை அறிந்துகொள்வீர்கள். அவரை நீங்கள் அதிகமாக கேட்பீரானால், அவரை அதிகமாய அறிந்துகொள்வீர்கள். அது உங்களுடைய வாழ்க்கையில்
நிறைவேறும்போது, உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு
பகுதியிலும் நீங்கள் கிருபை பெற்றவர்களாகவே வாழ்வீர்கள்.
இந்த செய்திலும், உங்களுடைய ஆழமான தியானத்திற்கு உதவ, நம்முடைய வாழ்க்கையின் காணப்படும் மூன்று முக்கியமான
பகுதிகளில் வெளிப்படவேண்டிய கிருபையை உங்களுக்கு சுட்டிகாட்ட விரும்புகிறேன். அவைகள் நாம் சற்றே உன்னிப்புடன் கவனித்து மதிப்பிடுவோம். இந்த பகுதிகளில் நான் கிருபை பாஸிடிவா அல்லது கிருபை
நெகடிவா? கிருபையின் விஷயத்தில் பாஸிடிவ் அன்று,
நெகடிவ் உங்கள் ஆத்துமாவுக்கு கேடாக அமைந்துவிடும்.
(1) அகமகிழ கிருபை
என்னுடைய சந்தோஷம் உங்களில்
நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச்
சொன்னேன்.(யோவான் 15:11)
இயேசு சொன்னார்: "நான் ஜீவனை கொடுக்கவும், அது பரிபூரணப்படவும்
வந்தேன்". ஒரு செம்மையான வாழ்வை நமக்கு தந்திடவே இயேசு இப்பூமிக்கு வந்தார். நமக்கு பொன்னையோ, பொருளையோ, செல்வத்தையோ தருவதாக
இயேசு வாக்களிக்கவில்லை. ஆனால் அதே சமயம்,
அவர் நாம் தரித்திரராகவோ, பிச்சைகாரர்களாகவோ இருக்கவேண்டும் என்றும் சொல்லவில்லை. அவர் நமக்கு தரும் வாழ்வு வித்தியாசமானது. ஆவிக்குரிய ஐஸ்வர்யவான்களாக நாம் மாறவேண்டும் என்று
அவர் விரும்பினார். அவருடைய வாக்குத்தத்தம்
என்னவென்றால், நாம் முதலில் தேவனுடைய இராஜ்ஜியத்தை
தேடுவோமானால், மற்றவைகள் கூட (multiplied)
கொடுக்கப்படும் என்பதே. வேறொரு தருணத்தில்,
இயேசு சந்தோஷத்தை பற்றி பேசினார். அவருடைய
சொந்த சந்தோஷம். அவருடைய சந்தோஷம் நம்மில்
நிலைத்திருக்கவேண்டும் என்று விரும்பினார்.
இன்றைக்கும் உங்கள் வாழ்க்கை எப்படி உள்ளது? வேதனை, வருத்தம், வெறுப்பு, கசப்பு,
புலம்பல், எரிச்சல், பகை, வைராக்கியம் போன்றவைகளால் நிரம்பியுள்ளதா? அப்படியானால் கிருபை
பரிசோதனையில் உங்கள் ரிசல்ட் நெகடிவ். கொரோனா பெருந்தொற்று எப்படி எளிதில் மற்றவர்களை
பாதிக்குமோ, அதுபோல், கிருபையில் நெகடிவ் என்று உறுதிசெய்யப்பட்டவர்களும் அதே எதிர்மறை
எண்ணங்களை மற்றவர்களுக்கும் பரப்புவார்கள்.
கிருபையினால் நிரம்பின வாழ்க்கையில், எந்தவொரு எதிர்மறையான, காயப்படுத்தும்
உணர்வுகளுக்கு இடமேயில்லை. *இந்த கிருபை
உங்களில் பெருகக்கடவது*!
(2) அன்புகூர கிருபை
நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய
சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள் என்றார் (யோவான் 13:35)
இயேசுவானவர் பழைய ஏற்பாட்டின் பிரமாணத்தை இரண்டே வரியில் அடக்கினார். தேவனில் அன்புகூருங்கள். உங்களில் நீங்கள் அன்புகூருவது போல் பிறரிலும் அன்புகூருங்கள். எல்லாமே *அன்பு* எனும் வார்த்தைக்குள் அடங்கும். அன்பு ஒரு உணர்வன்று; அது ஒரு செயல்வினை. இயேசுவானவர் தம்முடைய அன்பை போதனைகள் மற்றும் பிரசங்கத்தின்
மூலம் வெளிப்படுத்தவில்லை. தம்முடைய ஜீவனை நமக்காக தந்து அதனை நிரூபித்தார். அப்படியானால், நம்முடைய அன்பினை நிரூபிக்க நாம்
நம்மை நாமே கொல்லவேண்டுமா? இல்லை. அன்பை நிரூபிக்க
மக்கள் தங்களையே மாய்த்துகொள்ளவேண்டும் என்று இயேசு சொல்லவில்லை. இல்லை.
மக்கள் தங்கள் சுயத்திற்கு மரிக்கவேண்டும். உலகத்திற்கு சாகவேண்டும். பாவத்திற்கு சாகவேண்டும். பவுல் சொல்லுகிறார், நாம் அனுதினமும் மரிக்கிறோம். நாம் நம்முடைய சுயத்திற்கு மரிக்கும்போது, மற்றவர்களின்
தேவைகள் (உணர்வு, சரீர) நம்முடைய தேவைகளை முந்திக்கொள்ளும். நல்ல சமாரியன் கதையில் ஒரு லேவியன், ஒரு ஆசாரியனுக்கு
அவனுடைய பணி, அவனுடைய ஊழியம், குற்றுயிரும்
குலையுயிருமாய் கிடந்த மனிதனை காட்டிலும் முக்கியமாய்
தோன்றியது. ஆனால் ஒரு சமாரியனுக்கோ, அந்த மனிதனுக்கு உதவிசெய்வது முக்கியமாய் பட்டது. வேதம் சொல்லுகிறது அவன் மனதுருகினான் என்று. வேறு விதத்தில் சொன்னால், வசதியற்ற சூழ்நிலையிலும்
அன்புகூர அவனுக்குள் ஒரு கிருபை இருந்தது.
குறைவுகளின் மத்தியிலும் அவன் அன்புகூர்ந்தான். உங்களுடைய அன்பின் அளவுகோள் எப்படி உள்ளது? சமாரியன் அன்றைக்கு செய்த அதே காரியத்தை இயேசுவானவர்
நாம் செய்யவேண்டும் என்று விரும்புகிறார்.
இரக்கத்தை காண்பித்தல் (லூக்கா
10:37) . ஒருவேளை நீங்கள், நான் காயப்பட்டேன்,
என்னால் அவரிடம் பேசமுடியாது என்று சொல்வீர்களானால், உங்கள் கிருபை பரிசோதனையின் முடிவு
நெகடிவ். அன்பு என்று சொல்லப்படும் கிருபையின் நோய்-எதிர்ப்பு ஆற்றல், உங்களுக்குள்
காணப்படவேண்டும். உங்களை வேதனைபடுத்திவிட்டார்கள்
என்ற ஒரு காரணத்திற்காக உங்களால் ஒருவரில் அன்புகூரமுடியவில்லையா? கிருபை
உங்கள் வாழ்க்கையில் பெருகக்கடவது.
(3) அவிழ்த்துவிட கிருபை
நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன் வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று
சொல்லி..(மத்தேயு 18:33)
கிறிஸ்தவர்களாகிய நமக்கு கர்த்தருடைய ஜெபம் அத்துப்படி. அது கர்த்தரின் ஜெபமன்று. சீடர்களாகிய
நமக்கு அவர் சொல்லிக்கொடுத்த ஒரு ஜெபத்தின் மாதிரி. நம்முடைய ஆராதனை வேளைகளில், நம்முடைய தனி ஜெபங்களில்,
நம்முடைய குழு கூடுகைகளில் நாம் இந்த ஜெபத்தை ஏறெடுக்கிறோம். ஆனாலும் நம்மில் இந்த
ஜெபத்தில் ஒரு நிபந்தனை குறிப்பு உண்டென்பதை நம்மில் எத்துனை பேர் கவனிக்கிறோமோ தெரியவில்லை. மத்தேயு 6 :14, 15 வசனங்களில் இயேசு அதனை நமக்கு
மிகவும் தெளிவுபடுத்துகிறார். அநீதியுள்ள
(மன்னிக்காத) வேலைக்காரனை பற்றி உவமையில்,
அதனை விளக்கிகாட்டுகிறார். தன் கடனை
தன்னுடைய எஜமான தள்ளுபடிசெய்தாலும், தனக்கு
கடன்பட்டவனிடம் கழுத்தை நெறித்து கடனை திரும்பத் தரும்படி கேட்கிறான். இதனை கேள்விப்பட்ட அவனுடைய எஜமான், அவனுக்கு கொடுத்த
தள்ளுபடியை ரத்து செய்ததோடு, அநீதியாக நடந்துகொண்ட
தன் வேலைக்காரனை கொடிய தண்டனைக்கு உட்படுத்துகிறான். இயேசு எச்சரிக்கிறார், ஒருவர்
தன் சகோதரனுக்கு இரக்கம் காட்ட தவறினால், அவன் அனுபவித்த இரக்கமும் பறிபோகும். ஒரு
மொழிபெயர்ப்பு இப்படியாக சொல்லுகிறது, "நிபந்தனைகளின்றி உங்களிடத்தில் இரக்கத்தை கேட்பவர்களுக்கு நீங்கள்
மன்னிப்பை அருளாவிட்டால், உங்கள் பரமபிதாவும்
உங்களுக்கு அப்படியே செய்வார் (கொடிய தண்டனை).
நம்முடைய இருதயத்தில் நாம் ஒருவரை மன்னிக்காமல் போகும்போது, நாம் அவருடைய கழுத்தை சுற்றி ஒரு கயிறை கட்டி இழுக்கிறோம். அப்படியிருக்கலாகாது. பிசாசை தவிர நாம் ஒருவரையும் நம்முடைய வாழ்க்கையில்
கட்டிவைக்கக்கூடாது. தேவனுடைய விலையேறப்பெற்ற
கிருபையை பெற்றுக்கொண்ட நாம், பிறருக்கு எதிரான எந்த ஒரு மனந்தாங்களையோ, காழ்ப்புண்டர்ச்சியையோ
பாரட்டக்கூடாது. கிருபை கட்டுவதற்கல்ல, விடுவிக்க
கொடுக்கப்பட்டுள்ளது. *இந்த கிருபை உங்களில் பெருகக்கடவது*
நிறைவுரை
தேவனுடைய கிருபையை நீங்கள் விருதாவாய்ப் பெறாதபடிக்கு, உடன்வேலையாட்களாகிய
நாங்கள் உங்களுக்குப் புத்திசொல்லுகிறோம்.(2 கொரிந்தியர் 6:1)
தேவகிருபையின் அருட்பொழிவு நம்முடைய ஒருவேளை இரட்சிப்புக்கு
உதவிசெய்யும்படி அனுப்பட்டதன்று. தேவனானவர்
நம்மை அனுதினமும் அவருடைய கிருபையினால் நிரப்ப, எறியூட்ட விரும்புகிறார். ஏன்? அதனை
பிறருடன் பங்கிட்டுகொள்வதற்கு. கிறிஸ்துவின்
ஜீவியத்தை நாம் வாழாவிட்டால், கிறிஸ்து நம்மில்
அன்புகூர்ந்ததுபோல் நாமும் அன்புகூராவிட்டால், கிறிஸ்து விடுவித்தது (மன்னித்தது) போல்
நாமும் மன்னிக்காவிட்டால், இந்த தேவகிருபை விருதாவாய் போகும். இப்பேர்ப்பட்ட விலையேறப்பெற்ற கிருபையை நாம் எப்படி
நம்முடைய வாழ்க்கையில் இழக்கமுடியும்? கிருபையும் ஒரு வரமே.
என்னுடைய ஜெபமும், உங்களுடைய
ஜெபமும் , பேதுரு மற்றும் பவுலின் ஜெபமாக மாறட்டும். கிருபை பெருகவேண்டும் என்று ஜெபியுங்கள். கிருபை
பெருகும்போது சமாதானமும் தானாக பெருகும்.
ஒரு ஜெபமாக மட்டுமில்லை.
இதனை ஒரு வாக்குத்தத்த வார்த்தையாகவே நீங்கள் சுதந்தரிக்கவேண்டும் என்று உங்களை
உற்சாகப்படுத்துகிறேன். செப்டம்பர் மாதத்திற்கு மட்டுமன்று, இனிவரும் மாதங்களுக்கும். இனிவரும் ஆண்டுகளுக்கும்.
நம்முடைய தேவன் நிச்சயமாக அகமகிழ, அன்புகூர, அவிழ்த்துவிட கிருபையை பெருகப்பண்ணுவார் என்பதில் சந்தேகமில்லை.
கிருபையும் சமாதானமும் பெருகுவதாக!
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!
எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்
கிறிஸ்துவுக்குள் உங்கள் அன்பு சகோதரன்
வினோத் குமார்
தேவநிழல் ஊழியங்கள்
9840011374, 9840995057