Sunday, May 31, 2020

உம்முடைய செட்டைகளின் நிழலில் | வாக்குத்தத்த வார்த்தை | ஜூன் 2020

உமது செட்டைகளின் நிழலிலே…

 

எனக்கு இரங்கும், தேவனே, எனக்கு இரங்கும்; உம்மை என் ஆத்துமா அண்டிக்கொள்ளுகிறது; விக்கினங்கள் கடந்துபோகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன் (சங்கீ 57:1)

பரிசுத்த வேதத்தில் உள்ள பல்வேறு புத்தகங்கள், வேதபகுதிகளில நமக்கு மிகவும் பிடித்த, நாம்  அதிகமாய் வாசிக்க விரும்புகின்ற, நம் வாழ்க்கை சூழல்களை வெகுவாய் பிரதிபலிக்ககூடிய, நம் பிர்ச்சனைகளுக்கான விடையளிக்கக்கூடிய ஒரு புத்தகம் இருக்குமானால் அது சங்கீதங்களின் புஸ்தகமாகத்தான்  இருக்கும். 

சங்கீதங்கள் புஸ்தகம் ஒரு பாடல்கள், கவிதைகள், கீதங்களின் தொகுப்பாகவே காணப்படுகிறது.   தேவனோடுள்ள உறவில் நாம் பெலப்பட, வளர, சோதனைகளை மேற்கொள்ள, நம்பிக்கையில் நிலைத்துநிறக, எல்லாவற்றிற்ற்கும் மேலாக தேவனுக்கு நன்றிகளையும் துதிகளையும் படைக்க  பாடல்கள் மிகவும் துணைபுரிகின்றன.

சந்தோஷம், குதூகலம், உற்சாகம், துக்கம், வருத்தம், வேதனை, நஷ்டம், பயம் போன்ற பற்பல மனித உணர்வுகளின் பிரதிபலிப்புகளை சங்கீதங்கள் நமக்கு அழகாக படம்பிடித்துகாட்டுவதோடு,  உணர்ச்சிப் போராட்டங்களின் நடுவில்  தேவன் நமக்கு எத்தகைய ஆறுதல், தேறுதல், விடுதலை, உயர்வு, மேன்மை போன்ற செம்மையான ஆசீர்வாதங்களை வைத்துள்ளர் என்பதையும் அது நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

இவைகள் மனிதனின் கவிகளேயானாலும்,  இவைகள் ஒவ்வொன்றிலும் தேவன் தம் ஆவியை புதைத்து வைத்துள்ளார் என்பதை நாம் மறுக்கமுடியாது.  ஒவ்வொரு பாடலும் தேவனுடைய மகத்துவத்தை நமக்கு எடுத்துசொல்லும் ஒரு பொக்கிஷம் என்றால் அது மிகையாகாது. 

தேவ ஆவியானவரின் வழிநடத்துதலின்படி, ஜூன் மாதத்தின் தியானத்திற்கு நாம் சங்கீதம் 57-ஐ தியானிக்கவுள்ளோம்.  இந்த வேதபகுதியில் கர்த்தர் நமக்கு வைத்துள்ள அவருடைய ஆசீர்வாதமான தீர்க்கத்தரிசன வார்த்தைகளை நாம் ஜெபத்துடன் கவனிப்போம். தேவன் தாமே உங்களோடு இடைபடுவாராக.

ஓடி ஒளிந்தவனின் ஓலம்

சங்கீதம் 57  தன்னை கொல்ல வகைதேடும் மாமனின் கையிலிருந்து தப்பிப் பிழைத்து குகைக்குள் ஒளிந்துகொண்ட ஒரு தேவமனிதனின் கவி.  கவிஞனுக்கு எதிராக வந்தது ஒரு கரடியோ, சிங்கமோ அல்லது ஒரு இராட்சதனோவன்று. அவைகளை அவன் ஏற்கனவே துவம்சம் செய்தவன். ஆனால், இப்போது இவன் மனிதனுக்கு பயந்து ஓடுகிறான்.  சொந்தங்களுக்கு தப்பி ஒளிகிறான்.  பலசமயங்களில், நம் வாழ்க்கையிலும் நம் வீட்டாரே சத்துருவாக மாறுவது உண்மைதானே.. ணவனுக்கு எதிராக மனைவி, மனைவிக்கு எதிராக கணவன், தகப்பனுக்கு விரோதமாக பிள்ளை, பிள்ளைக்கு விரோதமாக தகப்பன், மாமிக்கு விரோதமாக மருமகள், மருமகளுக்கு விரோதமாக மாமி,  அண்ணனுக்கு விரோதமாக தம்பி, தம்பிக்கு விரோதமாக அண்ணன் என்று உறவுகளுக்கு இடையே காணப்படும் பகை கொடுமையானது.  அன்புகூரவேண்டிய உறவுகள் ஒருவரையொருவர் அடித்துக்கொள்ளலாமா? தம்பியை பகைக்கும் அண்ணன் அவனை கொன்றேபோடுகிறான். மரணமும் சாபமும் குடும்பத்தை வந்தடைகிறது. அந்த சந்ததியின் வழியே வந்த நாமும் கூட சில சமயம் இப்படிப்பட்ட பகைமையின் பாதிப்பை சந்திக்கிறோம்.  ஆபேல் நீதிமான் தான்.  ஆனாலும், அவன் தன் சொந்த சகோதரனால் பகைக்கப்பட்டான்.                                                                                                                       சொல்லால் கொள்ளும் பந்தங்கள் (வச 3, 4, 6)

அவர்கள் பற்கள் ஈட்டிகளும் அம்புகளும், அவர்கள் நாவு கருக்கான பட்டயமுமாயிருக்கிறது    (வச 4)    

வாளால் ஒருவரை கொன்றால் அவன் அன்றே மரிப்பான். ஆனால், வாயால் (சொல்லால்) ஒருவரை கொன்றால் அவன் அனுதினமும் மரிப்பான். இது நம்மில் அநேகர் கடந்துபோகும் பாதை. தேவப்பிள்ளைகளாகிய நாம், கிறிஸ்துவுக்காக, ஊழியப் பாதையில் பாடனுபவிக்க ஒருவேளை சளைக்கமாட்டோம்.  ஆனால் கிறிஸ்துவுக்குள் இருக்கிறேன் என்று சொல்லி தனிமனித நிந்தனை, அவமானம், எதிர்பேச்சு, தூஷனம், அவதூறு, பொய் குற்றச்சாட்டு போன்ற ஆயுதங்கள் நம்மேல் எய்யப்படும்போது நாம் அதனை சந்தோஷம் என்று எண்ணாமல் (மத் 5:11) உடனடியாக நம் கோபத்தை, வைராக்கியத்தை, அழுகையை, வேதனையை, விம்மலை  வெளிப்படுத்துகிறோம்.  சிங்கத்தின் வாயை கிழித்த தாவீது இங்கு மனிதனின் பற்கள் ~ மனிதனின் பேச்சை கேட்டு ~ வாயினால் தீயை வாரியிறைக்கும் உறவுகளை கண்டு ~ சோர்ந்துபோகிறான்.  தீயினால் சுட்ட புண் உள்ளாரும். ஆறாது நாவினால் சுட்ட வடு என்ற குறளைப் போல் இங்கு, இவர்களுடைய நாவு கருக்கான பட்டயத்தை போல் இவனை கிழிக்கிறது. தாவீது சந்தித்த விக்கினம் ஒரு பேரிடரோ, வாதையோ  அல்லது ஒரு கொள்ளைநோயோ வன்று,  அது மனிதரால், சொந்தங்களால் வந்த சூழ்ச்சியாகவே உள்ளது. (வச 2, 3, 6). ஒருவேளை நீங்களும் இப்படிப்பட்ட உறவுகளின் வார்த்தை, செயல், சிந்தனை, நாசமோசம், பகை போன்ற காரியங்களின் நிமித்தம் நொந்துபோயிருக்கலாம். சிலசமயம், எங்கேயாவது ஓடிபோயிடலாமா என்றும் நினைத்திருக்கலாம்!  சங்கீதம் 57-ன் தலையங்கம் தாவீது கெபியை நோக்கி ஓடினான் என்று சொல்லுகிறது. நீங்கள் எந்த கெபி அல்லது குகையை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்?

கெபியிலிருந்து செட்டைகளுக்குள்

விக்கினங்கள் கடந்துபோகுமட்டும் உமது செட்டைகளின் நிழலிலே வந்து அடைவேன் (57:1)

தாவீது தஞ்சம் புகுந்தது ஒரு குகைதான் என்றாலும், அவன் குகை மனிதனாக இருக்கவில்லை.  இருள் அவனை சூழ்ந்திருந்தாலும், தேவன் அவனுக்கு வெளிச்சமாகயிருந்தார். (சங்கீ 18:28). குகைக்குள் சென்றவன் ஆண்டவனை அண்டிக்கொள்கிறான்.  குகையல்ல தன் உண்மையான அடைக்கலம் தேவனே என்று உணருகிறான். இங்குமட்டுமல்ல, தன் வாழ்க்கையின் எப்பொழுதெல்லாம நெருக்கடி வந்துள்ளதோ அப்பொழுதெல்லாம் அவருடைய செட்டையின் நிழலை நாடினவன் சங்கீதக்காரன் தாவீது. ஒரு கழுகு அல்லது ஒரு பறவை எப்படி தன் குஞ்சுகளை தன் சிறகுகளில் நிழலிலே, செட்டையின் மறைவிலே பத்திரமாக பாதுக்காக்குமோ அப்படியே தன்னையும் தான் நேசிக்கும் தேவன் தன்  செட்டையின் மறைவியில் பாதுகாப்பார் என்று நிச்சயிக்கிறான். தாவீதின்  தன் அனுபவத்தில் தேவனுடைய செட்டையின் நிழலில் கண்டது….

1.தேவ பாதுகாப்பு (சங்கீ 17:8)

2.தேவ கிருபை (சங்கீ 36:7)

3.தேவ அடைக்கலம் (சங்கீ 57:1)

4,தேவனால் உண்டாகும் மகிழ்ச்சி(சங்கீ 63:7)

இந்த பட்டியல் முழுமையானதன்று. அவருடைய் செட்டையின் தஞ்சம் புகுந்தால் இன்னும் பல மேன்மையான அனுபவங்களை நீங்கள் பெறுவீர்கள் என்பதில் ஐயமில்லை. ஆம். தாவிதைப் போல் இந்த நொடியே கெபியிலிருந்து வெளியேறி அவருடைய செட்டைகளுககுள் புகுந்துவிடுங்கள்.

தொய்ந்தவன் தீர்மானிக்கிறான்

என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது; தேவனே, என் இருதயம் ஆயத்தமாயிருக்கிறது..(சங்கீ 57:7)

சொல்லடிபட்டு நொந்தவன், கெபியில் ஓளிந்துகொள்ள விரைகிறான்.    கெபியில் இருந்தவன், என் அடைக்கலம் இந்த இருண்ட குகையன்று, மகாதேவனின் செட்டைகள் என்பதை உடனே உணருகிறான். பறவையின் செட்டைகளின் கீழ் அடைக்கலம் புகுந்த குஞ்சுகள் ஒருவேளை அதன் மறைவில் சுகமாக தங்கியிருக்கும். அதுவே போதும் என்றும் இருக்கும். ஆனால் தாவீதுக்கோ, தேவப்பிள்ளைக்கோ, கிறிஸ்துவின் சீடனுக்கோ செட்டை படுத்து தூங்கும் இடமல்ல, உணர்வடைந்து உயிர்ப்பிக்கப்படும் ஒரு பட்டறையாக மாறவேண்டும்.  குகையில் குமுறல் இருக்கும், ஆனால் செட்டையின் நிழலில் களிகூறுதல் உண்டாகும் (63:7).  சிறையில் அடைக்கப்பட்ட பவுலும் சீலாவும் சோகப் பாட்டை பாடாமல், சந்தோஷகீதங்கள் பாடி சிலரின் இரட்சிப்புக்கு வாய்க்காலானார்கள்.  சிறையிலும் இரட்சிப்பு மலரக்கூடுமானால், செட்டையின் நிழலில் எப்பேர்ப்பட்ட மறுமலர்ச்சி உண்டாகக்கூடும். தாவீதுக்குள் ஏற்பட்ட மாற்றங்கள் தான் என்ன?

1.விழுத்தெழுந்த தாவீது (57:8)

2.கூப்பிட்ட தாவீது (57:2)

3.துதித்த தாவீது (57:9)

4.பாடின தாவீது (57:9)

5.அறிவித்த தாவீது (57:9)

குறிப்பையும் வசனத்தையும் விளக்க இடம் போதாது. வாசித்து தியானியுங்கள் தேவன் உங்களுக்கு உதவிசெய்வார். ஒரே வரியில் சொன்னால் செட்டையின் மறைவில் வந்ததை, தாவீது தனக்கு பாதுகாப்பாக கருதி அமர்ந்திராமல் அவன் தன் செயல்களின் மூலம் தேவனை மகிமைப்படுத்தினான்(வச11). இன்றும் இரட்சிக்கப்பட்டு இயேசு கிறிஸ்து என்னும் மறைவுக்குள், நிழலுக்குள், செட்டைகளுக்குள் வந்துள்ள நாம் நம்முடைய பாதுகாப்பில் குளிர்காய்கிறோமா அல்லது அவரை அறிவித்து, தெரிவித்து அவரை மகிமைப்படுத்துகிறோமாதாவீது நமக்கு ஒரு முன்னோடி அல்லவா? விசுவாச - விசுவாசித்தவனின் - வார்த்தைகள் எனக்காக யாவையும் செய்து முடிக்கப்போகிற தேவனாகிய உன்னதமான தேவனை நோக்கிக் கூப்பிடுவேன் (57:2)

தேவனுடைய செட்டையின் மறைவில் தஞ்சம் புகுந்து தேவனை மகிமைப்படுத்த ஆரம்பித்தவனின் வாழ்க்கையில் இப்போது ஒரு வியக்கத்தகு மாற்றம் உண்டாகிறது. பயம் பரவசமாகிறது, அழுகை ஆனந்தக்களிப்பாகிறது. ஜீவன்தப்ப ஓடினவன் ஜீவதேவனுக்குள் நம்பிக்கை அடைகிறான்.  அவனுக்கு ஒரு நம்பிக்கை உண்டு, இந்த விக்கினம் கடந்துபோகும் என்று. அல்லேலூயா! முதல் வசனத்தின் முதல் பகுதி ஜெபமாக இருந்தாலும், அதன் இறுதி பகுதி ஒரு விசவாச அறிக்கை, நம்பிக்கைநிறை செய்தியாகவே உள்ளது. விக்கினத்தை நீக்கும் என்று கேட்கவில்லை. விக்கினம் கடந்துபோகுமட்டும் என்று சொல்லுகிறார். செட்டையின் கீழ் வந்தவன் விசுவாசத்தில் வல்லவனாகிறான். அதுதான் செட்டையின்கீழ் காணப்படும் அற்புதம்.

 இந்த சங்கீதத்தில் தேவன் தான் செய்வேன் என்று சொல்லும் ஒரு வாக்குத்தத்தையும் நாம் பார்க்கமுடியாது. மாறாக, தேவன் தனக்கு என்ன செய்வார் என்ற உறுதியான விசுவாச அறிக்கைகளை தாவீது ஏறெடுக்கிறார். தேவன் இந்த சங்கீதத்தை நமக்கு தந்தது, தாவீதை மெச்சுவதற்கு மட்டுமல்ல, நாமும் தாவீதை போல் மாறுவதற்கே. தாவீதின் அறிக்கைகள் நம்முடைய அறிக்கைகள் ஆகவேண்டும். அதுவே நமக்கு தேவனுடைய வாக்குத்தத்தம் என்று நான் நம்புகிறேன். தாவீதின் பார்வையில், அனுபவத்தில்….

 தேவன்…

1.இரட்சிப்பை அனுப்புவார்(57:3)

2.கிருபையை அனுப்புவார்(57:3)

3.சத்தியத்தை அனுப்புவார்(57:3)

4.யாவற்றையும் செய்துமுடிப்பார் (57:2)                                                       என்ன ஒரு ஆச்சரியமான காரியம்? இந்த நான்கு குறிப்புகளையும் இணைத்து பாருங்கள். இரட்சிப்பு, கிருபை, சத்தியம் என்று மூன்று நாம் ஆண்டவராகியே இயேசுவை குறிக்கிறது.  நமக்காக யாவையும் சிலுவையில் செய்துமுடித்த அருள்நாதரும் அவரே. இயேசுவின் சமூகத்தை அல்லவோ இது குறிக்கிறது. 

செட்டையின் நிழலில் வந்தடைந்த ரூத்தை பார்த்து அன்று போவாஸ் சொன்னார்., 'உனக்கு நிறைவான நன்மை உண்டாவதாக. இன்றும் இந்த வாக்குத்தத்த செயதியை வாசித்த அதனை ஏற்றுக்கொள்ளும் உங்களுக்கு பரம போவஸின் கரத்தினால் நிறைவான நன்மை உண்டாகவேண்டும் என வேண்டிமுடிக்கிறேன்.

அவருடைய் செட்டையின் நீழலில் தங்கியிருங்கள்,

 கிறிஸ்துவின் பணியில்,உங்கள் சகோதரன்

வினோத்குமார்

  தேவநிழல் ஊழியங்கள்,                                                                  9840011374, 9840995057                                                      https://devanizhal.blogspot.com

உங்கல் மேலான கருத்துகளையும், விமர்சனங்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள்


No comments:

Post a Comment

HE LEADS ME IN THE PATH OF RIGHTEOUSNESS | PROMISE WORD | OCTOBER 24 (ENGLISH)

  PROMISE – OCT 2024 IN THE PATH OF RIGTEOUSNESS Psa 23:3   He restoreth my soul: he leadeth me in the paths of righteousness for his ...