நீர் என்னை உயிர்ப்பிப்பீர்
(வாக்குத்தத்த வார்த்தை | மே 2020)
நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும் நீர் என்னை உயிர்ப்பிப்பீர்;
என் சத்துருக்களின் கோபத்துக்கு விரோதமாக உமது கையை நீட்டுவீர்; உமது வலதுகரம் என்னை
இரட்சிக்கும் ( சங்கீதம் 138:7)
இரண்டு மாதங்களுக்கு முன்பாக, உலகத்தின் நாடுகளுக்கு
மடுவாக தோன்றிய ஒரு காரியம் இப்போது மகாபெரிய மலையாக, மிரட்டும் பர்வதமாக உருவெடுத்துள்ளது. மூன்று மாதங்களுக்கு முன்பாக, சீனாவுக்கு வெளியே 82 பேர் மட்டும் என்று இருந்த
எண்ணிக்கை இப்போது 30 இலட்சத்தை தாண்டிவிட்டது.
இதிலே 10 இலட்சம் பேர் குணமடைந்தாலும்,
2 இலட்சம் மக்கள் மரணத்தை சந்தித்துள்ளனர். இந்தியாவில் மட்டும், ஒரு மாதத்திற்கு முன்பாக ஆயிரம்
என்று இருந்த இலக்கம் இப்போதும் முப்பது மடங்கு பெருகி, முப்பத்தோராயிறத்தை எட்டியுள்ளது.
எண்ணிக்கையும், அதன் பெருக்கமும், அமைச்சர்களுக்கும்
அதிகாரிகளுக்கும் ஒரு சவாலாக அமைந்துவருகிறது.
முறியடிக்கும் மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், அரசாங்கம் இதனை கட்டுபட்டுத்துவதற்கு,
கட்டுக்குள் கொண்டுவருவதற்கு, குறைப்ப்தற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
நாணயத்தின் மறுபக்கம் நமக்கு சொல்லுகிற கதை
அதைவிட வேதனை தரக்கூடியது. ஊரடங்கினால் அதளபாதாளத்திற்கு
சென்றுவிட்ட பொருளாதாரம் வர்த்தக நிறுவனங்களுக்கு, தொழில்முனைவோருக்கு, வியாபாரிகளுக்கு
கோடிக்கணக்கில் இழப்புகளை இலவசமாக கொடுத்துவிட்டது. நாமெல்லாரும் 'அழிக்கவரும் சத்துருவுக்கும் ஆழ்கடலின்
இரைச்சலுக்கும் இடையே" மாட்டிக்கொண்டதுபோல் தோன்றுகிறது. எந்த பக்கம் திரும்புவது? எதை காப்பாற்றுவது? வாழ்வை வாழ்வாதரத்தையா?
இந்த நாட்களில், என் காதுகளில் சங்கீதம்
91:7-ஐ யாரோ உரக்க சொல்லுவதுபோல் தோன்றுகிறது.
உன் பக்கத்தில் ஆயிரம்பேரும் உன் வலதுபுறத்தில்
பதினாயிரம் பேர் விழுந்தாலும் அது உன்னை அணுகாது. சீனாவில் ஏதோ ஒரு மூலையில் இருந்த ஒன்று, இப்போது
நம் ஊருக்கு, நம் தெருவுக்கு, ஏன் விட்டு வாசற்படிக்கே வந்துவிட்டது போல் உள்ளது. என்ன தான் விசுவாசம் இருந்தாலும், என்ன தான் வாக்குத்த்தத்தங்கள்
இருந்தாலும், மனுஷனுடைய இருதயம், சிலசம்யங்களில்,
சோர்ந்துபோகிறது, கலக்கமடைகிறது. இது எப்படி
இருக்கப் போகிறது? இனி எவ்வளவு காலம் நீடிக்கும்? என்னையும் அணுகிடுமோ?
ஏரிகின்ற அக்கினி சூளையில் போடப்படவேண்டும்
என்ற கட்டளை மூன்று யூத வாலிபர்களுக்கு எதிராக விதிக்கப்பட்டபோது, அவர்கள் அக்கினிக்கு இரையானாலும் பரவாயில்லை நாங்கள்
விசுவாசத்தில் துவளமாட்டோம் என்றார்கள். வழக்கத்தை விட ஏழு மடங்கு அக்கினியை சூடாக்குங்கள்
என்ற கட்டளையை இராஜா பிறபித்தான் என்று வேதம்
சொல்லுகிறது ( தானியேல் 3:19). மடங்ககும் எண்ணிக்கையும் இந்த விசுவாச வீரர்களுக்கு
ஒரு பொருட்டாக அமையவில்லை. நீங்கள் இவர்கள்
இனத்தை சேர்ந்தவர்களானால், நீங்கள் இதற்கு
பயப்படமாட்டீர்கள். எரிகின்ற அக்கியானாலும்
சரி எகிரும் கொரோனா எண்ணிக்கைகள் ஆனாலும் சரி….சிவப்பு, ஆரஞ்சு, பச்சை….ஒன்றும் உங்கள்
விசுவாசத்தை பாதிக்காது….நான் துன்பத்தின் நடுவே
நடந்தாலும் நீர் என்னை காப்பாற்றுவீர் (அ) உயிர்ப்பிப்பீர். இது ஒரு அறிக்கை மட்டுமன்று, இயேசு கிறிஸ்துவுக்குள், நான் நம்புகிறேன், இது ஒவ்வொரு தேவபிள்ளைக்கும்
உரிய வாக்குறுதி. அவரை பற்றும் விசுவாசத்தை
உடைய ஒவ்வொருவருக்கும். ஆம், அது உங்களை அணுகாது! ஆமென்!
91-ஆம் சங்கீதம் வெறுமே கொரோனோ தொற்றுக்காக
எழுதப்பட்டதன்று. எல்லா காலத்திற்கும், எல்லா
மக்களுக்கும், எல்லா சூழ்நிலைக்கும் பொருந்தக்கூடிய ஒரு காலத்தை கடந்த வாக்குத்தத்தம்
அது. கர்த்தருடைய வார்த்தை இன்றைக்கும் ஆவியாகவும் ஜீவனாயும் உள்ளது. ஆமென்!
நிபந்தனைகளுக்கு உட்பட்டது
உயிர்ப்பிக்கப்படும், பாதுக்காக்கப்படும் வாக்குத்தத்தம்
எல்லோருக்கும் உரியதா? இல்லை. தேவனுடைய அன்பு
நிபந்தனையற்றது, ஆனால் அவருடைய வாக்குத்தத்தங்கள் ஒவ்வொன்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டவை. வாக்குத்ததங்கள் இலவச பரிசுகள் அன்று. கர்த்தரை நம்பி, அவர் வழிகளில் நடந்து, அவருக்காக
காத்திருப்போரின் வாழ்க்கையில் வாக்குத்தத்தங்கள் வாழ்க்கையாக மாறுகிறது. கீழ்ப்படிதல்,
அர்ப்பணம், மற்றும் கட்டளைகளை கடைபிடிக்கும் வாழ்க்கை ஒருவரில் இருக்கவேண்டும் என தேவன்
எதிர்பார்க்கிறார். அவருடைய நிபந்தனைகள் கடினமானவைகளும் அல்ல! நிறைவேற்றுவதற்கு தேவையான
கிருபையும் அவர் நமக்கு தந்தருளுகிறார்.
அடியேனும் ஆண்டவரும்
நான்..அவர்
·
சங்கீதம் 138-ல் காணப்படும் என் பங்குகளை (சங்கிதக்காரனின்
செய்தவைகள்) நான் நிறைவேற்றும்போது, பரிசுத்தரின் தேவச்செயல் என் வாழ்க்கையில் வெளிப்படுகிறது
·
கர்த்தர் என் பெலனும், என் கீதமுமானவர் என்று அறிக்கையிட்டு
ஆபத்துகாலத்திலும் கர்த்தர் என்னை காப்பாற்றுவார், சத்துருவின் கைகளுக்கு நீங்கலாக்கி
விடுவிப்பார் என்று தைரியமாய் அறிக்கையிட்ட சங்கீதகக்காரனிடமிருந்து நாம் எவைகளை எல்லாம்
கற்கலாம்.
நான்….
(a) துதிப்பேன்
உம்மை என் முழு இருதயத்தோடும் துதிப்பேன்; தேவர்களுக்கு முன்பாக
உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன் (வச 1)
சங்கீதக்காரன் தாவீதினிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளும் முதல்
காரியம், பிரச்சனைகளும், ஆபத்துகளும், அநிச்சயங்களும், வியாதிகளும், பஞ்சாங்களும்,
பயமுறுத்தலகலும் நம்மை சுற்றி நெருக்கினாலும், நாம் அவரை நித்தமும் துதிக்கவேண்டும்!
இஸ்ரவேல் தேசத்தை எதிரிகள் சூழ்ந்து பாளையமிறங்கினார்கள். எதிரிகள் சூழ்வதனாலேயே நாம் அழிந்துவிட்டோம் என்றில்லை. போருக்கு
தயாரானார்கள். பாடல்வீரர்களை முன்நிறுத்த ஆலோசனை
பிறந்தது. பாடினார்கள். எதிரிகள் வெட்டுண்டு மடிந்துபோனார்கள். இது தாவீதின் இறையியல்! இறைபக்தரின் மறையியல்! நாம் அழுது, புலம்பி, வெதும்பி, விம்மிடாது எல்லா காலத்திலும் கர்த்தரை துதித்து போற்றவேண்டும்.
.
(b) ஸ்தோத்தரிப்பேன்
தேவர்களுக்கு முன்பாக உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்
(வச 1)
உங்களுக்கு முன்பாக ஒரு கண்ணாடி டம்ளர் உள்ளது. தண்ணீர் அதில்
பாதி அளவு ஊற்றப்பட்டுள்ளது. அதை நீங்கள் எப்படி
பார்ப்பீர்கள்? ஒரு எதிர்மறையாளன் அதை 'பாதி
காலியாகவுள்ளது' என்பான். அதே சமயம், ஒரு நேர்மறையாளன்
அதை 'பாதி நிரம்பியுள்ளது' என்பான். கர்த்தர் உங்கள் வாழ்க்கையை, உங்கள் குடும்பத்தை,
உங்கள் எதிர்காலத்தை, உங்கள் வேலைவாய்ப்பை, உங்கள் படிப்பை பாதுகாக்கவும், உயிர்ப்பிக்கவும்
வேண்டுமென்றால், நீங்கள் அவரை எப்போதும் ஸ்தோத்தரிக்க
பழகவேண்டும். அவர் உங்களுக்கு செய்த எல்லா
நன்மைகளுக்காக அவருக்கு நன்றி செலுத்துங்கள்.
அவர் உங்களுக்கு ஆசீர்வாதங்களுக்காக உங்கள் வாழ்நாள் முழுக்க நன்றிசெல்லிக்கொண்டே
இருக்கலாம். இஸரவேல் ஜனங்கள் வனாந்திரத்தில்
தேவன் கொடுத்த மன்னாவுக்கு நன்றிசொல்ல விழையாமல், விட்டுவந்த எகிப்தின் உணவின்மீது
மோகம் கொண்டதால் மாண்டுபோனார்கள்! அடைக்கப்பட்ட
இந்த நிலையிலும், நீங்கள் ஒருபோதும் முறுமுறுக்கவேண்டாம். மாறாக அவருக்கு நன்றிசெலுத்திக்கொண்டேயிருங்கள்.
ஆமென்!
(c) கூப்பிடுவேன்
நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு மறுஉத்தரவு அருளினீர்
(வச 3)
இயேசு ஒருமுறை "கேளுங்கள் தரப்படும், தட்டுங்கள் திறக்கப்படும்,
தேடுங்கள் கிடைக்கும்" என்றார். இந்த
வாக்கியம் ஜெபத்தின் முக்கியத்தை, தேவனோடுகூட பேசுவதன் முக்கியத்தை நமக்கு முன்நிறுத்துகிறது. யாக்கோபைப் போல், தானியேலைப் போல், எலியாவைப் போல்,
எரேமியாவைப் போல் மற்றும் இயேசுவைப் போல் நமக்கு ஒரு உறுதியான ஜெபஜீவியம் இருக்கவேண்டும்.
தேவனோடுகூட நேரடி தொடர்புகொள்ள் நமக்கு வேதாகமம் சொல்லும் எண், எரேமியா 33:3 என்று
சொல்லுவார்கள். எத்துனை முறை நீங்கள் அந்த
எண்ணை தொடர்புகொண்டிருக்கிறீர்கள்?
(d) அறிவிப்பேன்
கர்த்தாவே, பூமியின் ராஜாக்களெல்லாரும் உமது வாயின் வார்த்தைகளைக்
கேட்கும்போது உம்மைத் துதிப்பார்கள்.(வச 4)
சங்கீதக்காரன் தாவீது சங்கீதம் 75:9, 92:15, 96:3,
106:2, 145:4, 145:6 மற்றும் இன்னும் அநேக
இடங்களில் தேவனுடைய மகத்துவத்தை, தேவனுடைய அதிசயங்களை, அவரை துதிக்கும் துதியை, அவருடைய
மகிமையை அவரை அறியாத மக்களுக்கு விவரிப்பேன் என்கிறார். பிரச்சனை எனும் பள்ளத்தாக்கில் பயணிக்கும் மனிதனிடம்
இருக்கவேண்டிய ஒரு நற்பண்பு, தன் விடுதலையை அவன் எதிர்பார்த்து காத்திருக்கும் சமயத்தில்,
அவன் தேவன் யார் என்பதையும், அவர் நமக்கு என்ன
செய்யமுடியும் என்பதையும் பிறருக்கு அறிவிக்கவேண்டும். தாவீது அப்படி செய்தார். பவுலும் அதை பின்பற்றினார். ஊரடங்கில் வீட்டி அடைப்பட்டுள்ள நாம் எத்துனை பேருக்கு
தேவனுடைய வல்லமையை, மகிமையை அறிவித்தோம். நம்முடைய
அலைபேசி, திறன்பேசி, சமுதாய வலைதளங்களை எதற்கு பயன்படுத்தினோம்? பரமனை பரைசாற்றவா?
அல்லது பாடுகளின் வலியில் புலம்பவா? பூமியின்
இராஜாக்கள் தேவனுடைய வாயிலிருந்து புறப்படும் வார்த்தைகளை கேட்பார்கள். கேட்டு தேவனை மகிமைப்படுத்துவார்கள். எப்போது, நீங்கள் பேசினால் தானே?
(e) தாழ்த்துவேன்
(என்னை)
கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும், தாழ்மையுள்ளவனை நோக்கிப்
பார்க்கிறார்; மேட்டிமையானவனையோ தூரத்திலிருந்து அறிகிறார் (வச 6)
"ஆவியிலே எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள். பரலோக இராஜ்யம்
அவர்களுடையது" என்றார் இயேசு. தாழ்மை, எளிமை என்பது தேவனையே சார்ந்திருக்கும்
ஒரு குணம். ஏந்தவொரு பகட்டும், வீண் ஜம்பமும், வீண் பெறுமையும், அகந்தையும், அகங்காரமும்
இல்லாத ஒரு இருதயம். ஒரு சிலர் உண்டு வாழ்க்கையில்
காரியங்கள் மோசத்திற்கு மோசமாக போனாலும், தங்கள் வீண் பெறுமையை, ஒய்யாரத்தை விட்டொழிக்கமாட்டார்கள்.
தேவனுக்கு முன்பாக உங்களை எப்போழுதும் தாழ்த்தி பழகுங்கள். தாழ்த்தப்படுகிறவன் உயர்த்தபப்டுவான். உயர்த்தப்படுகிறவன் தாழ்த்தப்படுவான். அவர் உங்களை உயர்த்துவது மாத்திரமல்ல, உங்களை பாதுகாப்பார்,
உங்களை தப்புவிப்பார், உங்களை நடத்துவார்.
அவர்…
உங்கள் வழிகளை எல்லாம் சீர்படுத்தி, நீங்கள் செய்யவேண்டிய
வைகளை செய்யும்போது, தேவன் தம் வாக்குத்தத்தங்களை
உடன்தானே நிறைவேற்றுவார். உங்களை மீட்டுக்கொள்ள,
உங்களை காப்பாற்ற, உங்களை விடுவிக்கம், உங்களை உயிர்ப்பிக்க தேவன் நிச்சயமாய் இறங்கிடுவார்.
(1) நோக்கிப் பார்க்கிறார்
கர்த்தர் உயர்ந்தவராயிருந்தும்,
தாழ்மையுள்ளவனை நோக்கிப் பார்க்கிறார் (வச 6)
உங்களுக்கும் எனக்கும் இருக்கக்கூடிய
ஒரு மாபெரும் ஆறுதல் என்னவென்றால், இந்த இக்கட்டான்
நாட்களிலும் கர்த்தருடைய கண்கள் நம்மேல் நோக்கமாய் உள்ளது என்பதே. அவர் நம்மை காண்கின்ற தேவன் - எல் ரோயீ. அவர் தூங்குவதுமில்லை, உறங்குவதுமில்லை. வேதம் சொல்லுகிறது,
அவருடைய கண்கள் நீதிமான்களின் கூக்குரலுக்கு பதில்கொடுக்க எப்போதும் விழிப்புடன் உள்ளது. தம்மைப்பற்றி உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத்
தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணும்படி, கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது
( 2 நாளா 16:9). இஸ்ரவேல் கர்த்துருடைய கண்ணின் மணியாக உள்ளது என்று வேதம் சொல்லுகிறது. ஒருவேளை
நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கலாம். என் துக்கத்தை, என் துயரத்தை, என் நெருக்கத்தை,
என் சவால்களை ஒருவரும் பார்க்கவில்லையே என்று.
தேவன் உங்களை நோக்கிப் பார்க்கிறார்.
இந்த செய்தியை வாசித்துக்கொண்டிருக்கும் உங்களின் மேல் கர்த்தரின் கண்கள் வைக்கப்பட்டுள்ளது.
ஒன்றுக்கும் பயப்படவேண்டிதில்லை. ஆமென்! அல்லேலூயா!
(2)எனக்கு பதிலுரைக்கிறார்
நான் கூப்பிட்ட நாளிலே எனக்கு
மறுஉத்தரவு அருளினீர் (வச 3)
நம்முடைய தேவன் ஜெபத்தை கேட்பவரும்,
ஜெபத்திற்கு பதிலளிக்கிறவராகவும் உள்ளார். அவருடைய பதில் ஆம், இல்லை அல்லது காத்திரு என்று
இருக்கும். ஒரு விசுவாசியினுடைய வாழ்க்கையில் பதில்வராத ஜெபம் என்ற ஒன்று இருக்கவேமுடியாது. சங்கீதக்காரனை பாருங்கள்! அவர் கூப்பிட்ட நாளில் தேவன் அவருக்கு மறுஉத்தரவு
அருளினார் என்று பார்க்கிறோம். அடுத்த நாளோ
அல்லது அடுத்த வருடமோவன்று. சில சமயம், நாம்
எதிர்பார்க்கிற வண்ணம் பதில்வராமல் போகலாம்.
ஆனாலும் காத்திருக்கவேண்டும் என்ற உணர்த்துதல் நமக்கு அருளப்படும். நமக்கும் தேவனுக்கும் உள்ள தூரம் எவ்வளவு தெரியுமா?
ஒரு ஜெபதூரம் தான். அவசரப்பட்டோ, ஆத்திரப்பட்டோ
காரியங்களின் இறங்கவேண்டாம். முடிவெடுக்கவேண்டாம். கர்த்தர் இன்றும் தம் சிங்காசனத்தில் வீற்றிருக்கிறார்.
(3) என்னை பெலப்படுத்துகிறார்
என் ஆத்துமாவிலே
பெலன் தந்து என்னைத் தைரியப்படுத்தினீர்(வச 3)
நம்முடைய தேவன் நமக்கு சகாயம் பண்ணுகிறவர் மாத்திரமல்ல, நம்மை
தைரியப்படுத்துகிற, நம்மை பெலப்படுத்துகிற தேவன். உண்ண மீனும் அப்பமும் கொடுப்பதோடு அவர் நிற்பதில்லை. உங்களை மனுஷரை பிடிக்கிறவனாக்க விரும்புகிறார். கேட்டதெல்லாம் வாங்கிக்கொடுக்கும் அப்பாவை போல்
அல்ல, கேட்டதை பெற்றுக்கொள்ளும் தகுதியுடைவராக
உங்களை மாற்றவிரும்புகிறவர் அவர். உங்கள் கைகளின்
பிரயாசத்தை ஆசீர்வதிக்கின்ற தேவன். 'என் விரல்களை
யுத்தத்திற்கு பழக்குவிக்கிற என் தேவன்' என்று தாவீது சாட்சி பகிர்கிறார். தேவன் உங்களுக்காக
யுத்தம் செய்வது ஒன்று. உங்கள் யுத்தத்தில்
உங்களை பெலப்படுத்தி, உங்களுக்கு பெலனாக நிற்பது வேறொன்று. யாக்கோபை பார்த்து, "நீ பயப்படாதே, நான் உன்னுடனே
இருக்கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்;
என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்" என்கிறார் (ஏசா 41:10). இது
தேவன் உங்களை பலப்படுத்துகிற, ஆயத்தப்படுத்துகிற நேரம்.
(4)என்னை விடுவிக்கிறார்
நான் துன்பத்தின்
நடுவில் நடந்தாலும் நீர் என்னை உயிர்ப்பிப்பீர்; என் சத்துருக்களின் கோபத்துக்கு விரோதமாக
உமது கையை நீட்டுவீர்; உமது வலதுகரம் என்னை இரட்சிக்கும் (வச 7)
அநேகர், நாம் இவ்வளவு நாட்களாக ஜெபிக்கிறோம். ஏன் தேவன் இன்னும் வாதையை நிறுத்தவில்லை. ஏன் தேவன் எதையும் செய்வதில்லை? என் சத்துருக்களிடமிருந்து
நம்மை விடுவிக்கவில்லை என்று கேட்கின்றனர்.
கர்த்தர் நிச்சயமாகவே நம்மை விடுவிப்பார். சந்தேமேயில்லை. ஆனால், அவர் உங்களை
விடுவிக்கவேண்டிய காரியங்களினின்று விடுவித்துகொண்டும் இருக்கிறார் என்பதை உணராதே போகிறோமா?. எகிபிதிலிருந்து இஸ்ரவேலர் விடுவிக்கப்பட்டார்கள்.
உண்மை. ஆனால் எகிப்து அவர்களிடமிருந்து விடுவிக்கப்படவில்லை. நன்றிக்கெட்டதனம், , உண்மையில்லாமை, திருப்தியடையாதன்மை
போன்ற எகிப்துகளையும் தேவன் நம்மிலிருந்து விரட்டியடிக்கவேண்டியுள்ளது. கண்ணுக்கு தெரியும்
சத்துருக்களை காட்டிலும், கண்ணுக்கு தெரியாத சத்துருக்கள் கொடியவர்கள். உடலையும் ஆத்துமாவையும் அழிக்கவல்ல குணங்கள் அவைகள்.
இப்படிப்பட்ட ஆவிக்குரிய அரண்களை, இந்த ஊரடங்கின் நாட்களில், தேவன் நிர்மூலமாக்கிக்கொண்டிருக்கிறார் என்பது உண்மை.
(5) என்னை பாதுகாக்கிறார்
(உயிர்ப்பிக்கிறார்)
நான் துன்பத்தின் நடுவில் நடந்தாலும் நீர் என்னை உயிர்ப்பிப்பீர்; என்
சத்துருக்களின் கோபத்துக்கு விரோதமாக உமது கையை நீட்டுவீர்; உமது வலதுகரம் என்னை இரட்சிக்கும்
(வச 7)
சங்கீதம் 121:7 சொல்லுகிறது, "கர்த்தர் உன்னை எல்லா தீங்கிற்கும் விலக்கிக் காப்பார்….அவர் உன் ஆத்துமாவை
காப்பார்". ஒரு தின்பண்டத்தை கெடாதபடிக்கு
நம் பதப்படுத்துவது போல், ஒரு பழம் கெடாமல் இருக்க நாம் அதை குளிர்சாதன பெட்டியில்
வைப்பது போல், நாமும் இயேசுவுக்குள், இயேசுவின்
போதனைக்குள் நம்மை நாமே மறைத்துகொள்வோமானால், மூடிக்கொள்வோமானால், நாம் சுகத்தோடும், பெலத்தோடும், ஆரோக்கியத்தோடும்
வாழுவோம். பேழையில் தேவன் நோவாவையும் அவர் குடும்பத்தையும் பாதுகாத்தார். அக்கினியும் கந்தகமும் பட்டணத்தை அழிப்பதற்கு முன்பாக
தேவன் லோத்தை பாதுகாத்தார். சங்கார தூதனின் தலைச்சன் பிள்ளையை கொல்லாமல் கடந்துபோக
தேவன் ஆட்டுக்குட்டியின் இரத்தம் பூசப்பட்ட
வீட்டில் வைத்து இஸ்ரவேலை பாதுகாத்தார். முக்கியமான
கேள்வி. நீங்கள் இப்போது எங்கே இருக்கிறீர்கள்
என்பதே? நோவா பேழையில் இருந்தார். லோத்து சோதோமுக்கு
வெளியே இருந்தார். தூதன் ஆட்டுக்குட்டியின்
இரத்தத்தை கண்டு கடந்துபோனான். அது இயேசுவின்
இரத்தத்திற்கு முன் அடையாளம்!
(6) குறித்ததை
நிறைவேற்றுவார்
கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார் (வச 8)
மூலமொழியில் இது அவர் எனக்கு குறித்ததை நிறைவேற்றி முடிப்பார் என்று உள்ளது. அறைகுறையாகவோ, பாதியிலேயோ அவர் காரியங்களை கைவிடுவதில்லை.
அவர் முற்றுமுடிய உங்களை குறித்ததான் திட்டத்தை, சித்தத்தை நிறைவேற்ற வல்லவர். ஒருவேளை
இந்த நாட்களில், என் வேலைக்கு என்னாகுமோ? என் தொழிலுக்கு என்னாகுமோ? என் திருமண வாழ்க்கை என்னவாகுமோ? என் பிள்ளைகளின் படிப்பு, எதிர்காலம் என்னவாகுமோ
என்று யோசித்துக்கொண்டிருக்கலாம். ஒருவேளை
எதிர்பாராத இந்த ஊரடங்கு உங்கள் திட்டங்களை
எல்லாம் தவிடுபொடியாக்கியிருக்கலாம். இந்த
நோயினால் உண்டான பொருளாதார பாதிப்பு, வாழ்வாதார சவால் எதிர்காலத்தை இருட்டடிக்க செய்ததாகவ
இருக்கலாம். நம்முடைய வாழ்க்கைமுறை, இந்த கொரோனா
தொற்றுக்கு பின்பாக முழுவதுமாக மாறவேண்டும் என்கிறார்கள். இந்த புதிய-இயல்பு வாழ்க்கையில் நான் எப்படி பிழைத்திடுவேன்? உண்மையில் இந்த கேள்வி நம் எல்லோருக்கும் உண்டு. நம்மிடம் பதிலில்லை. ஒன்றுமட்டும் தெரியும். கர்த்தரும் அவருடைய வார்த்தைகளும் மாறாதவைகள். நானல்ல, சூழ்நிலைகளல்ல, கொரோனாவிற்கு பின் வரும்
உலகல்ல எனக்கு குறித்ததை நிறைவேற்றபோவது, எனக்கு யாவையும் செய்துமுடிக்கப்போவது, அதை
செய்கிறவர் கர்த்தரே! அவசரகதி பேதுரு தன்
மீனவ தொழிலை விட்டுவிட்டு இயேசுவை பின்தொடர தீர்மானித்தார். ஆனால், இயேசு இல்லாத மப்பும்
மந்தரமான ஒரு சூழல் உண்டானபோது, பேதுரு திரும்பவும் அத்தொழிலுக்கு செல்ல விரும்பினார்.
ஆனால் இயேசுவோ அதை அனுமதிக்கவில்லை. சரியான
சமயத்தில் வந்த இயேசு அவனுக்கு உரியதை நிறைவேற்ற உதவிசெய்தார். உங்களுக்கும் எனக்கு அவர் அப்படியே செய்வார். அவர் செய்ய விரும்புவது இரகசியமானதன்று. மற்றவர்களுக்கு
செய்ததை அவர் உங்களுக்கு செய்வார்.
(7) அன்பால்
அணைக்கிறார்
கர்த்தாவே, உமது கிருபை என்றுமுள்ளது; உமது கரத்தின் கிரியைகளை நெகிழவிடாதிருப்பீராக
(வச 8)
எபிரேயத்தில் 'கிருபை' என்ற வார்த்தை சேசேட் என்று உள்ளது. சேசேட் என்றால்
இரக்கம், கிருபை போன்றைவைகளை தாண்டின ஒரு கனிவுள்ள தேவதயவு, தேவஅன்பு. அது தேவனின் அநாதி அன்பு. தேவன் நம்மை அநாதி சிநேகத்தால் நேசிக்கிறார் என்று
வேதம் சொல்லுகிறது. ஆம், அவருடைய அன்புக்கு
நிபந்தனையில்லை. அவருடைய் அன்பு சகல பாவத்தையும் மூடும். அது என்றுமுள்ளது. அவருடைய அன்பு மாறாதது. அது தன்னலமற்ற அன்பு. நீங்கள் யார் என்பதன் அடிப்படையில் பாராட்டப்படும்
அன்பல்ல, அவருடைய அன்பு. அவர் அன்புள்ளவராக
இருப்பதனால் உண்டாகும் அன்பு அது. சேசேட் என்றால்
அழகையும் குறிக்கிறது. தேவனின் அழகான அன்பு.
புதிதாய பிறந்த குழந்தையை ஒரு தாய், ஒரு தகப்பன் எவ்வளவு பாசத்துடன், நேசத்துடன்,
பரிவுடன், கனிவுடன் அன்புகூருவார்களோ, அதைக்காட்டிலும் அதிக கனிவுடன் தேவன் உங்கள்மேல்
அன்பாக இருக்கிறார். என்னை பொறுத்தமட்டில், தேவனஒடு நெருங்கி ஜீவிக்க, நம்மிடம் இருக்கும் மற்ற
எல்லா ஆசிகளைவிட இந்த ஒன்று மிகமிக உயர்வானது, உன்னதமானது. தேவன் உங்களில் இன்றும் அன்புகூருகிறார். அவர் உங்கள்மேல்
நம்பிக்கை இழக்கவில்லை. இழககவுமாட்டார்! இந்த புயலை, இந்த தடுமாற்றத்தை, இந்த் சறுக்கலை,
இந்த இழப்பை உங்கள் நன்மைக்கே, உங்களை உருவாக்கவே அவர் அனுமதித்துள்ளார்! அது சீக்கிரத்தில்
கடந்துபோகும். அவருடைய அன்பானது உங்கள் பயணத்தின்
முடிவுமட்டும், அதற்கு அப்பாலும் உங்களை நடத்திடும்.
அல்லேலூயா!
இயேசுவின் கைகள்
காக்க
மார்பினில்
சாருவேன்
பேரன்பின் நிழல்
சூழ
அமர்ந்து சுகிப்பேன்
இயேசுவின் கரங்களில்
நீங்கள் பாதுகாப்புடன் உள்ளீர்கள்!
Anna neenga anuppura message indha nerathula enakku rombavey useful ah irukku indha situation ku mattum illa ennoda life layum indha varthaigal migavum uyirpikkiradhai irukku Ellavatrayum vedhathodu oppittu parkka melum helpful ah irukku thank you.by Divyapraveen
ReplyDelete