தேவநிழல் வாக்குத்தத்த வார்த்தை | நவம்பர் 2020
என் பாத்திரம் நிரம்பி வழிகிறது
என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு
ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி, என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர்; என் பாத்திரம்
நிரம்பி வழிகிறது (சங்கீதம் 23:5)
கல்லூரி பேராசிரியர் ஒருவர் தன் வகுப்பறையினுள்
நுழைந்து தன் மாணவர்களுக்கு முன்பாக தண்ணீர் பாதி நிரம்பிய ஒரு கண்ணாடிக் குடுவையை
(Glass) எடுத்து நீங்கள் பார்ப்பது என்னவென்று கேட்டார்? சிலர் அது பாதி தண்ணீர் நிரம்பிய குடுவை என்றார்கள். சிலர் அது பாதி காலியான குடுவை என்றார்கள். பொதுவான
ஒரு புரிதல் என்னவெனில், நேர்மறை எண்ணம் உடையவர்கள் காரியங்களை பாதி நிரம்பினதாகவும், எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள் பாதி காலியானதாகவும் பார்த்திடுவர். இன்னொரு கதையும் உண்டு. அது ஒரு குடுவையை பற்றியதன்று, அது ஒரு பாத்திரத்தை
பற்றியது. அந்த பாத்திரம் எவ்வளவாய் நிரம்பியுள்ளது
என்பதை காட்டிலும், அந்த பாத்திரத்தை நிரப்புவது யார் என்பதை பற்றியது. மட்டுமல்ல, அது பாத்திரத்தை குறித்துமன்று. அது பாத்திரவான் அல்லது ஒரு மனிதனை பற்றிய கதை.
அது என்னை பற்றிய கதை. அது உங்களை பற்றிய கதை.
சங்கீதம் 23-ல் தாவீது தன்னுடைய பாத்திரம்
நிரம்பி வழிகிறது என்கிறார். எது அவருடைய பாத்திரம்?
என் பங்கு
பாத்திரம் என்ற வார்த்தையின் எபிரேய பதம்
கோஸ்.
இந்த கோஸ் எனும் வார்த்தை சங்கீதங்களின் புத்தகத்தில் ஐந்து முறை வருகிறது.
கோஸ் என்றால் ஒரு பொருளை அல்லது ஒரு திரவத்தை
உள்ளடக்கிய ஒரு பாத்திரம். இந்த சூழமைவில்
அது ஒரு பாத்திரமாகவும், அதன்மேல் ஒரு திரவம் ஊற்றப்படுவதுபோலும் காணப்படுகிறது. பாத்திரம் நிரம்பிய பின்னும் அதற்குள் திரவம் தொடர்ந்து
ஊற்றப்படுகிறது. இப்போழுது பாத்திரம் நிரம்பி
வழிகிறது.
சங்கீதங்களின் புஸ்தகத்தில், இரண்டு இடங்களில்,
பாத்திரம் என்ற வார்த்தையோடு பங்கு என்று பதமும் சொல்லப்படுகிறது. பங்கு
என்று சொல்லப்படுவது ஒரு சொத்தில் ஒருவருக்கு பகிர்ந்துகொடுக்கப்படும் பாகம் அல்லது
பங்கு எனலாம். வேதாகமம் சொல்லுகிறது, துன்மார்க்கனுக்கு, தேவன் அழிவை பாத்திரத்தின் பங்காக
வைத்துள்ளார் என்று(சங்கீதம் 11:6). மற்றொரு இடத்தில், நீதிமான் அல்லது தேவனில் அன்புகூரும்
ஒரு மனிதனை பற்றி சொல்லும்போது, கர்த்தரே அவருடைய பாத்திரத்தின் பங்காக இருக்கிறார்
என்று சொல்லப்பட்டுள்ளது (சங்கீதம்
16:5). அப்படியானால் நம்முடைய சுதந்தரவீதம் எது?
மிகவும் அதிகமாய்
நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே
கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு…(எபேசி 3:20)
நம்முடைய தேவன் தம்முடைய மக்களை
மிகவும் அதிகமாய் ஆசீர்வதிக்க விரும்பும் தேவன். அவர் அவர்களை
அசாதாரண வழிகளில் ஆசீர்வதிக்கவே விரும்புகிறார். ஒரு சாதாரண ஆடுமேய்க்கும் சிறுவன் அரசனாகிறான். ஒரு சிறைக்கைதி அதிபதியாகிறான். ஒரு கோழை நியாயாதிபதியாகிறான். அவர் சிறியவனைப்
புழுதியிலிருந்து எடுத்து, எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார்; அவர்களைப் பிரபுக்களோடே
உட்காரவும், மகிமையுள்ள சிங்காசனத்தைச் சுதந்தரிக்கவும் பண்ணுகிறார் (1 சாமுவேல்
2:8). அவர் உங்களுடைய வாழ்க்கையில் செய்யும்
அல்லது செய்யக்கூடிய ஒவ்வொரு செயலும் அசாதாரணமவை. பொருளாதாரம், தொழில், வேலை அல்லது
வாழ்க்கையில் எந்த ஒரு பகுதியாக இருந்தாலும் சரி, நீங்கள் கற்பனை செய்யாத வகையில் தேவன் காரியங்களை
மாற்றியமைக்கமுடியும். அவருடைய ஆசீர்வாதங்கள்
எல்லாம் கூட்டல் வரிசையில் நமக்கு வருவதில்லை. கர்த்தர் கூட்டிக் கொடுப்பதில்லை, பெருக்கி
கொடுக்கிறார். சத்துருக்களுக்கு முன்பாக தாவீதுக்கு
ஒரு அற்புதமான அறுசுவை பதார்த்தங்ளுடன் கூடிய அட்டகாசமான பந்தியை இஸ்ரவேலின் தேவன் ஆயத்தப்படுத்துகிறார்.
சங்கீதம் 23:5 தேவன் தம்முடைய பிள்ளைகளின் மேல் சொரியும் அளவற்ற அன்பின் வெளிப்பாடு.
அவரை தேடுதலும், அவருடையதை தேடுதலும்
அவருடைய ஆசீர்வாதங்களுக்காக
தேவனை தேடுவது ஒரு காரியம், அவர் யாராக இருக்கிறார்
என்ற காரணத்திற்காக அவரையே தேடுவது இன்னொரு காரியம். அற்புத அடையாளங்களின் நிமித்தம் இயேசுவை பின்பற்றியவர்கள்,
ஆகாரம் கொடுத்ததினால் அவரை பின்பற்றினவர்களை குறித்து இயேசு குறிப்பிடுகிறார். அவரால் என்ன கொடுக்கமுடியும் அல்லது என்ன செய்யமுடியும்
என்ற காரணத்திற்காக அவரை தேடினார்கள். தேவன்
கொடுக்க விரும்புகிறார். நன்மையான காரியங்களை
நமக்கு ஈந்து தேவன் நம்மை ஆசீர்வதிக்க விரும்புகிறார். இயேசுவானவரோ தாம் யாராக இருக்கிறோம் என்ற காரணத்திற்காக
தம்மை பின்பற்ற விரும்பும் கூட்டத்தை தேடுகிறார். தாவீது ஒரு நல்ல உதாரணம். அவர் சொல்லுகிறார், 'மான்கள் நீரோடை வாஞ்சிப்பதுபோல்
என் ஆத்துமா உம்மை வாஞ்சிக்கிறது (சங்கீ 42:2)'. நமக்கு அப்படிப்பட்ட அனுபவமுண்டா? நமக்கு தாகமுண்டானால், தண்ணீர் குடித்தால் நம் தாகம்
தீரும். அதே போல், நம்முடைய ஆத்துமாவும் தேவனால்
மட்டும் திருப்தியடையமுடியும். நிரப்பப்பட்ட, நிரம்பி வழிகின்ற நன்மைகள்.
தேவனுடைய சம்பூரணம்
தேவனுக்கு தாகமாயிருந்தல் என்ற பதத்தின்
பொருள் தேவனுடைய சமூகப் பிரசன்னத்தை, தேவனுடைய வல்லமையை, தேவனுடைய சுபாவத்தை அனுபவிக்க,
அடைய நம்மில் காணப்படும் ஒரு தீராத வாஞ்சை.
தேவனைப் போல் மாற, தெய்வீக குணநலன்களை வெளிப்படுத்த ஒரு ஆவல். நம்முடைய ஆத்துமாவின் பாத்திரம் அல்லது நம்முடைய
வாழ்க்கையின் பாத்திரம் தேவனால் நிரப்பப்படவேண்டும். நிரம்பி வழியவேண்டும். தேவைக்கும் மிஞ்சி உங்களிடத்தில் பொருளோ, பணமோ காணப்படுமானால்,
அதனை தேவையில் உள்ளோருடன் பகிர்ந்துகொள்வதே சரியான பிரதிபலிப்பு என்று இயேசு கற்றுக்கொடுத்தார். எப்படி
நம்முடைய வாழ்க்கையில் தேவன் அருளும் நிரம்பிவழியும் ஆசிகள் மற்றவர்களுக்கு
ஆசீர்வாதமாக மாறவேண்டுமோ, தேவனுடைய பண்புநலன்கள், நம்மில் காணப்பட்டு, நிரம்பி வழிந்தோடும்போது,
மற்றவர்களுக்கு அது ஒரு ஆசீர்வாதத்தின் ஊற்றாக மாறிடும். ஒரு தொற்றைப்போல், அது நம்மை பிடித்து உருமாற்றிவிடும்.
சங்கீதம் 23-ல் தாவீது உரிமைகோரின அதே காரியத்தை
நாமும் ஜெபித்து சுதந்தரிக்கபோகிறோம். அவர்
சொன்னார், "என் பாத்திரம் நிரம்பி வழிகிறது". ஆமென்.
தேவன்தாமே இச்செய்தியை வாசிக்கும் உங்கள்
பாத்திரத்தை, என் பாத்திரத்தை, நம் ஒவ்வொருவரின்
பாத்திரத்தை நிரம்பிவழியச் செய்வார். பொருட்சார்ந்த
ஆசீர்வாதங்கள் மட்டுமன்று, நம்முடைய பாத்திரத்தை தேவனுடைய சுபாவத்தினால் நிரம்பிவழிய
செய்வார்.
திருத்துவ ஆசீர்வாதங்கள்
2 கொரி 13:14 கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய
ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.
இவை
கொரிந்து சபைக்கு அப்போஸ்தலனாகிய பவுல் எழுதின நிருபத்தின் நிறைவு வார்த்தைகள். இன்று
ஒவ்வொரு ஆராதனையின் முடிவினில், போதகர்கள் கூறும் ஆசீர்வாத வார்த்தைகளாக அறியப்படுகின்றன. இந்த வசனம் தேவனுடைய திருத்துவ ஆள்தத்துவத்தின்
மூன்று முக்கிய தன்மைகளை நமக்கு வெளிப்படுத்துகிறது - பிதாவாகிய தேவனின் அன்பு, இயேசு கிறிஸ்துவின் கிருபை, பரிசுத்த ஆவியானவரின்
ஐக்கியம். நம்முடைய சொந்த வாழ்கையிலும், இந்த குணநலங்கள் காணப்படவேண்டும். தேவன் நம்முடைய
பாத்திரத்தை அவருடைய அன்பினால், கிருபையினால், அந்நியோந்நிய ஐக்கியத்தினால் நிரப்பவேண்டும்.
அவைகளை நாம் கவனித்து பாத்திரத்தின் பங்கை சுதந்தரிப்போம்.
(1) மாற்றும் கிருபை - கேரிஸ்
தீத்து 2:11 ஏனெனில் எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க
தேவகிருபையானது பிரசன்னமாகி,
கிருபையினால் விசுவாசத்தை கொண்டு இரட்சிக்கப்படுகிறோம். நம்முடைய சொந்த கிரியைகளினால் அன்று. இரட்சிப்பு உண்மையில் தேவனுடைய இலவச ஈவு என்பதை
நாம் அறிகிறோம். இரட்சிப்பு என்றால் பாவத்தின் தண்டனையிலிருந்து தப்புவது. கர்த்தராகிய இயேசுவானவர் நமக்கு வரவேண்டிய பாவதண்டனையை,
நம்மை விடுவிக்கவும், நமக்கு ஒரு புது ஜீவனை அளிக்கவும் - நித்திய ஜீவனை அளிக்கவும்
- தம்மேல் ஏற்றுக்கொண்டார். தேவனுடைய கிருபை ஒரு பாவியை பரிசுத்தவானாக மாற்றுகிறது. கேரிஸ்,
கிருபை என்ற கிரேக்க வார்த்தையின் பொருள், இருதயத்தில், வாழ்க்கையில் உண்டாகும் ஒரு தெய்வீக
தாக்கம். தகுதியில்லாத ஒருவனுக்கு நாம் காண்பித்திடும்
தயவே கிருபை எனப்படும். நாம் தகுதியில்லாத
பாவிகளாய் இருக்கையில் இயேசு நமக்காக மரித்தார்.
நாம் ஜெபித்ததினால், மனந்திரும்பியதால், வருந்தியதால் மட்டுமே தேவன் நம்மை இரட்சிக்கவில்லை.
இவைகள் எல்லாம் தேவைப்பட்டாலும், உங்கள் இரட்சிப்பை
இவைகள் சம்பாதித்து தரவில்லை. சற்றேனும் தகுதியற்ற
உங்களுக்கும் எனக்கும் தேவன் இந்த விலைமிகு பரிசை, ஈவை கொடுத்துள்ளார். அது கிருபையின் செயல். தேவன் நம்முடைய பாத்திரத்தை அவருடைய கிருபையினால்
நிரப்பவேண்டும். கிருபை நிரம்பி வழியவேண்டும். எப்படி பாத்திரத்தில் நிரம்பி வழியும் தண்ணீர்
சுற்றுப்புறத்தை நனைத்திடுமோ, கிருபை நிரம்பி
வழியும்போது, என்னை சுற்றியுள்ள மக்களை அது நனைக்கவைக்கும், குளிரவைக்கும். தகுதியில்லாத
மனிதர்க்கு கிருபை, இரக்கம் மற்றும் தயவினை வெளிப்படுத்துங்கள். அப்படி செய்தால், அவர்களை நரகாக்கினையிலிருந்து விடுவிப்பது மட்டுமல்ல,
வாழ்க்கையின் எல்லாவித இக்கட்டுகளிலிருந்தும் அவர்கள் நீங்கள் அவர்களை காப்பாற்றுவீர்கள்.
(2) மன்னிக்கும் அன்பு - அகப்பே
1 பேதுரு 4:8 எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்; அன்பு திரளான
பாவங்களை மூடும்.
வேதாகமம்
4 வகையான அன்பை குறித்து பேசுகிறது. பைலியா, ஈராஸ், ஸ்டார்ஜே மற்றும் அகப்பயோ. பைலியோ என்றால் சகோதர சிநேகம். ஈராஸ் பாலியல் அல்லது கணவன்-மனைவி இடையே இருக்கும்
காதல்-அன்பு, ஸ்டார்ஜே என்றால் பெற்றோர் பிள்ளை
அன்பு, அகப்ப்யோ இந்த மூன்றிலும் மிக வித்தியாசமானது. அது ஒரு தெய்வீக அன்பு. சுயநலமற்ற, தியாகம் நிறைந்த, நிபந்தனையற்ற அன்பு. வேதாகமத்தில் காணப்படும் நான்கு வித அன்புகளினும்
மிகவும் மேலானது. அகப்பேயோ என்ற கிரேக்க வார்த்தை மற்றும் அதற்கு இணையான வார்த்தைகள் புதிய
ஏற்பாட்டில் அடிக்கடி காணப்படுகின்றன. இயேசு கிறிஸ்து பிதாவாகிய
தேவன்மேலும், தம்மை பின்பற்றுவோர் மேலும் காண்பித்த அன்பை இந்த வார்த்தை தெளிவாக விவரிக்கிறது. தம்முடைய
சீடர்களும் பிறரை அகப்பயோ அன்பினால் அன்புகூரவேண்டும் என்று என்று இயேசு எதிர்பார்க்கிறார். இந்த அன்பை குறித்து எழுத பவுல் ஒரு முழு அதிகாரத்தையே
ஒதுக்குகிறார் (1 கொரிந்தியர் 13). அகப்பயோ
அன்பு தான் ஒருவரை மன்னிக்கும், சகித்திடும்,
பொறுத்துக்கொள்ளும் மற்றும் சத்தியத்தில் சந்தோஷப்படும் அன்பு. என் பாத்திரம் இந்த அகப்பயோ அன்பால் நிரம்பிவழியவேண்டும் - ஒரு தெய்வீக அன்பு. தேவன் நம்முடைய பாத்திரத்தின் பங்கு என்று சொல்லுவோமானால், நம்முடைய வாழ்க்கை தேவனுடைய அன்பினால் நிரம்பியிருக்கவேண்டும்.
(3) மணக்கும் ஐக்கியம் - கொய்நோனியா
2 கொரி 2:3,4 நமது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனும், இரக்கங்களின்
பிதாவும், சகலவிதமான ஆறுதலின் தேவனுமாயிருக்கிறவருக்கு ஸ்தோத்திரம். தேவனால் எங்களுக்கு
அருளப்படுகிற ஆறுதலினாலே, எந்த உபத்திரவத்திலாகிலும் அகப்படுகிறவர்களுக்கு நாங்கள்
ஆறுதல் செய்யத் திராணியுள்ளவர்களாகும்படி, எங்களுக்கு வரும் சகல உபத்திரவங்களிலேயும்
அவரே எங்களுக்கு ஆறுதல்செய்கிறவர்
பரிசுத்த ஆவியானவருக்கு
வேதம் அருளும் மற்றொரு பெயர், "தேற்றரவாளன்". தேற்றரவாளன் என்றால் ஒருவரின் கண்ணீரை துடைத்து,
அழாதே அன்று ஆறுதல்படுத்துபவரன்று. அவர் துவண்டுபோனவர்களை எழும்பி நடக்கப்பண்ணுகிறார். தேவனுடைய பிள்ளைகளாக, நாம் ஒருவர் மற்றவரை தூக்கவும்,
மீட்கவும், கட்டியெழுப்பவும் அழைக்கப்பட்டிருக்கிறோம். பரிசுத்த ஆவியானவர் அந்நியோந்நிய
ஐக்கியத்திற்கு ஒரு அடையாளமாக காணப்படுகிறார்.
பிதாவாகியே தேவனோடும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோடும் ஒரு சரியான உறவை உண்டாக்க
அவர் நமக்கு உதவுகிறார். இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தின் மூலமாக ஒரு தொப்புள்கொடி உறவுக்குள்
இணைந்தவர்களே திருச்சபையின் அங்கத்தினர்கள். கிறிஸ்துவின் சரீரம் திறம்பட செயல்படுவதற்கு
வெவ்வேறு உறுப்பினர்களான நாம் ஒருமித்து செயல்பட அழைக்கப்பட்டிருக்கிறோம். அதேபோல், நம்முடைய பாத்திரமும் பரிசுத்த ஆவியானவரின்
பிரசன்னத்தினால் நிரம்பி மன்றாட்டு ஜெபம், விசாரிப்பு, நற்கிரியைகளின் மூலம் பிறரை தொடவேண்டும். அதுவே கிறிஸ்துவின் ஜீவன். நம்முடைய பிரச்சனைகளில்
நாம் மூழ்கியிருப்போமானால், நம்முடைய மனஅழுத்தங்களை
நினைத்தே காலத்தை கடுத்துவோமானால், நம்முடைய பாத்திரம் நிரம்பவேண்டியவைகளால் நிரம்பவில்லை
என்றே பொருள். பரிசுத்த ஆவியில் நிரம்பியிருந்த
இயேசுவானவரோ தான் சென்ற இடங்களில் எல்லாம் நற்கிரியைகளை நிறைவேற்றினார். ஒரு மீனும் அகப்படாததால் தவித்த மீனவனாகட்டும், வெத்து வாழ்க்கையை வாழ்ந்துவந்த சமாரிய ஸ்திரியாகட்டும்,
தண்ணீர் கலக்க காத்திருந்த திமிர்வாதக்காரனாகட்டும், காட்டத்திமரத்தின் கீழ் நின்ற
குட்டை சகேயுவாகட்டும், இவர்களுடைய
வாழ்க்கைக்குள் இயேசு பிரவேசித்த மறுநிமிடம் அவர்கள் மனமாற்றமடைந்தார்கள். உங்கள்
பாத்திரமும், என் பாத்திரமும் தேவனுடைய ஆவியால்
நிரம்பியிருக்குமானால், இப்படிப்பட்டவர்களை விடுவிக்கக்கூடிய, கட்டியெழுப்பக்கூடிய ஐக்கியத்தை, உறவினை நம்மால் பகிர்ந்துகொள்ளமுடியும்!
அன்பு தேவஜனமே, தேவன் நம் பாத்திரத்தை,
வாழ்க்கையை, நிரம்பி வழியும் ஆசீர்வாதங்களால் நிரப்பும்போது, அந்த ஆசீர்வாதங்களை
நமக்காக தக்கவைத்துகொள்வதற்கல்ல, அதனை மற்றவர்களோடு தேவையில் உள்ள மக்களோடு பகிர்ந்துகொள்வதற்கே
ஆகும். (உதாரணம். (1) சிந்திக் கிடக்கும் கதிர்களை எளியவர்களுக்கு விட்டுவிடவேண்டும்,
லேவி 23:22. (2) இரண்டு அங்கிகளையுடையவன் இல்லாதவனுக்குக் கொடுக்கக்கடவன்; ஆகாரத்தை
உடையவனும் அப்படியே செய்யக்கடவன, லூக்கா 3:11). பொருளாதார உதவிமட்டுமன்று. பெலவீனர்
மற்றும் ஒடுங்கின ஆவி உடையவர்களுக்கும் அதனை பகிரவேண்டும். உங்களை சுற்றியுள்ள அல்லது உங்களுக்கு அறிமுகமான ஒருவர் முற்கோபியாகவோ,
கல்மனம் படைத்தவராகவோ, அன்பை வெளிப்படுத்த தகுதியற்றவராகவோ இருக்கலாம் - சுருங்கச்
சொன்னால் கிறிஸ்துவின் ஆவி இல்லாதவராக இருக்கலாம். உங்கள் பாத்திரம் தேவனுடைய அன்பு, தேவனுடைய கிருபை
மற்றும் ஐக்கியத்தில் (ரோமர் 5:5) நிரம்பியிருக்குமானால், உங்களை சுற்றியிருக்கும் மக்களின் வாழ்க்கை அது
தொடும், தொட்டு மறுரூபமாக்கும்.
சங்கீதக்காரன் சொல்கிறார், "கர்த்தர்
என் மேய்ப்பராய் இருக்கிறார், நான் தாழ்ச்சியடையேன்". சுற்றியுள்ள ஆபத்துகள் மற்றும் குறைகளை எல்லாம்
கடந்து அவர் தேவனுக்கு முதலிடம் கொடுக்கிறார்.
ஒரு ஆட்டுக்குட்டியாக, அவர் தன் மேய்ப்பனுக்கு பின் செல்கிறார். உலகத்தின் நன்மையானவகளுக்கு பின்னால் அவர் செல்லவில்லை. நன்மையும் கிருபையும் அவரை தொடர்கிறது. இயேசு சொன்னார், தேவனுடைய இராஜ்ஜியத்தை தேடுங்கள்.
அப்பொழுது இவைகள் உங்களுக்கு கூடக் கொடுக்கப்படும். ஆவிக்குரிய காரியங்களை நாம் நாடுவோமானால், பொருள்சார்ந்த ஆசீர்வாதங்கள் தானாக பின்தொடரும்.
உங்கள் பாத்திரம், உங்கள் வீடு, உங்கள் தொழில், உங்கள் வேலை நன்மையினால் நிரம்பிவழியவேண்டுமானால்,
தேவனுடைய குணாதிசயத்தால் நிரப்பப்பட உங்களை அனுமதியுங்கள். தேவன் உங்கள் பங்காய் மாறுவராக
- கிருபை, அன்பு மற்றும் அந்நியோந்நிய ஐக்கியம்!
கிருபை மிகுந்த தகப்பனே, உங்களுக்கு முன்பாக நாங்கள் எங்கள்
வாழ்க்கை பாத்திரத்தை உயர்த்துகிறோம். உங்கள்
அன்பு, உங்கள் கிருபை மற்றும் உங்கள் அந்நியோந்நிய ஐக்கியத்தினால் அதனை நிரப்பும். நம்மை சுற்றியுள்ள மக்களின் வாழ்க்கை நிரம்பிவழிந்து
மக்களின் வாழ்க்கை மாற்றும் அளவிற்கு அதனை நிரப்புங்கள். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் பிதாவே. ஆமென்.
கர்த்தர் தாமே உங்கள் ஆசீர்வதிப்பாராக!
கிறிஸ்துவுக்குள் உங்கள் சகோதரன்