தேவநிழல் ஊழியங்கள் | வாக்குத்தத்த வார்த்தை | ஏப்ரல் 2022
பரிசுத்த ஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக (ரோமர் 15:13)
ஏப்ரல் மாதம் பலவிதங்களில் ஒரு சிறப்பு அம்சம் நிறைந்த மாதம். அது ஒரு புதிய நிதியாண்டின் தொடக்கம். யூதர்களின் நாட்காட்டியின்படியான (தோரா) முதல் மாதமான நிசான் மாதத்துடன் இது இசைந்துபோகிறது. நிசான் மாதத்தின் முதலாம் நாள் 2448 ஆண்டில் (கி.மு. 1313), ஒரு பிறை நிலாவினை மோசேவுக்கு தேவன் காண்பித்து, யூத நாட்காட்டி அமைப்பு மற்றும் புதிய மாதத்தை சுத்திகரிக்கும் முறையை பற்றி அவர் அறிவுறுத்துகிறார். இந்த மாதம் உங்களுக்குப் பிரதான மாதம்; இது உங்களுக்கு வருஷத்தின் முதலாம் மாதமாய் இருப்பதாக. (யாத்திராகமம் 12:2). இது அன்றிலிருந்து பயன்படுத்துவரும் யூதர்களின் முதல் மாதத்தை வரவேற்று சந்திர நாட்காட்டியை வரவேற்றது. எகிப்திலிருந்து வெளியேறுமுன், புதிதாய் தோன்றிய இஸ்ரவேல் தேசத்திற்கு கொடுக்கப்பட்ட முதல் கட்டளை அது.
தென்னிந்தியாவில், தெலுங்கு மற்றும் தமிழ் புத்தாண்டு ஏப்ரல் மாதத்தில் கொண்டாடப்படுகிறது.
புதிய ஆண்டு, புதிய துவக்கம், புதிய பருவம். ஏப்ரல் மாதத்தில் துவக்கம் புதிய வாசல்களையும், புதிய பிராந்தியங்களையும், புதிய வழிகளையும் உங்களுக்கு ஏற்படுத்தும் என நான் நம்புகிறேன். ஆமேன்! அல்லேலூயா!
கப்பற்சேதமான நம்பிக்கை
அப்போ 27:20 அநேகநாளாய்ச் சூரியனாவது நட்சத்திரங்களாவது காணப்படாமல், மிகுந்த பெருங்காற்றுமழையும் அடித்துக்கொண்டிருந்தபடியினால், இனி தப்பிப்பிழைப்போமென்னும் நம்பிக்கை முழுமையும் அற்றுப்போயிற்று.
அப்போஸ்தலனாகிய பவுல் ரோமருக்கு எழுதின நிருபத்தில், நம்பிக்கையின் பெருக்கத்திற்காக வேண்டுகிறார். இங்குமட்டுமல்ல, அவருடைய எல்லா நிருபங்களிலும், பவுல் நம்பிக்கையை பற்றி அதிகமாய் எழுதுகிறார். பற்பல வார்த்தைகளில் அவர், விசுவாசிகள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவில் உள்ள நம்பிக்கையில் நிலைத்திருப்பது மட்டுமல்ல, அதிலே வளரவேண்டும் என்றும் உற்சாகப்படுத்துகிறார். இருந்தாலும், ஒருவிசை பவுலும் அவனுடைய சகாக்களும் கப்பல் பயணம் ஒனறில் பயங்கரமான சூறாவாளி காற்றில் சிக்கி, தப்பி பிழைப்போமென்ற நம்பிக்கையை முற்றுமாக இழந்தார்கள். தத்தளிக்கும் கப்பலுக்குள் தைரியத்துடன் எழுந்து நின்ற பவுல் கலங்கிப்போன பயணிகளை பார்த்து, “திடமனதாயிருங்களென்று இப்பொழுது உங்களுக்குத் தைரியஞ்சொல்லுகிறேன். கப்பற்சேதமேயல்லாமல் உங்களில் ஒருவனுக்கும் பிராணச்சேதம் வராது” என்றார். அவர்கள் எல்லோரும் அவனுடைய வார்த்தைகளால் தேற்றப்பட்டு தைரியமடைந்து பல தடைகளை தாண்டி கரையை கடந்தார்கள். விசுவாசியானாலும் சரி, ஊழியரானாலும் சரி, பல சமயங்களில் அவர்களுடைய வாழ்க்கையை தாக்கும் புயல்காற்றின் கோரம், அலைகளின் சீற்றம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை பற்றும் விசுவாசத்தின் கப்பலை சேதப்படுத்தி, நம்பிக்கையை தகர்த்து, சோர்வின் பள்ளத்தாக்கில் அவர்களை தள்ளும் என்பது மறுக்கமுடியாது உண்மை. நீதிமான் யோபுவுக்கு நேரிட்ட துயரம் விசுவாசத்தின் அக்கினி பரிட்சை மட்டுமல்ல, அவனுடைய நம்பிக்கையின் அஸ்திபாரத்தையே அசைக்கக்கூடிய சோதனையின் தீப்பிழம்பாகவே அவனை சந்தித்தது!
ஆங்கில வேதாகமத்தில் நம்பிக்கை என்ற பொருளை வெளிப்படுத்தும் HOPE என்கின்ற வார்த்தை 68 தடவை வருகிறது. சங்கீதத்தில் 22 முறை, யோபு புத்தகத்தில் 15 முறை. யோபு புத்தகத்தில் ஒட்டுமொத்த எண்ணிக்கையில் 25% வருகிறது). மறுமையை பற்றிய ஒரு உள்பார்வை யோபுவுக்கு இருந்தாலும், வாழ்க்கையின் நிலையற்ற தன்மை எண்ணி அவர் புலம்பாமல் இல்லை. அவருடைய குமுறலுக்கு காரணமில்லாமல் இல்லையே? யோபுவின் பாடுகளை நாம் அனுபவித்துள்ளோமா? ஒரே சமயத்தில் யோபு தன் சொத்து, சம்பத்து, சுகம் என்ற அனைத்தையும் இழந்தான். பேரிடர்கள் நம் அன்புக்குரியவர்களை நம்மிடமிருந்து பிரித்துவிடுகிறது. அனாதையாகும் பிள்ளைகள் ஆச்சாணி முறிந்து தவிக்கும் பெற்றோர். சந்தோஷம், சமாதானம் மற்றும் நம்பிக்கை தொலைந்துபோகிறது. “நான் நிற்கும் பாறை கிறிஸ்து தான், வேறஸ்திபாரம் மணல் தான் என்று நாம் பாடினாலும் எங்கோ ஒரு ஓரத்தில், நம்முடைய வாழ்க்கை குழப்பம் மற்றும் அழுத்தம் எனும் மணலில் புதையுண்டு போவது போல் உணருகிறோம்
சபை ஆராதனை வேளைகளை தவிர்த்து நம்முடைய ஆவி உற்சாகங்கொள்வதில்லை. உண்மைதானே?
நொண்டிநடக்கிறோமா? நம்பி நடக்கிறோமா?
எபி 10:23 அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்; வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே.
நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எது நடக்கவேண்டும் என்று நம்பிக்கையுடன் காத்துக்கொண்டிருக்கிறீர்கள்? ஒரு நல்ல எதிர்காலம், நல்ல மருமகன், நல்ல மருமகள், நல்ல வேலைவாய்ப்பு, நல்ல வீடு, நல்ல வசதிகள், நல்ல பட்டணம், நல்ல தேசம் போன்றவைகளா? நம்பிக்கையே வாழ்க்கை! நாமும் நம்முடைய வாழ்க்கையில், நம் பிள்ளைகளின் வாழ்க்கையில் அநேக காரியங்கள் நடந்தேறவேண்டும் என்று நம்புகிறோம். மெய்யாகவே, நம்முடைய நல்ல தேவன், நம் பரம தகப்பன் உங்கள் நம்பிக்கையை, ஏற்றவேளையில், நிறைவேற்றுவார். சந்தேகமில்லை.
பெருக்கமும், பிணைப்பும்
ரோமர் 8:24 அந்த நம்பிக்கையினாலே நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம். காணப்படுகிறதை நம்புகிறது நம்பிக்கையல்ல; ஒருவன் தான் காண்கிறதை நம்பவேண்டுவதென்ன?
நம்பிக்கை என்பது உண்மையில் ஒரு ஆழமான, அகலமான ஒரு அகண்ட தலைப்பு. அதை ஒரு சிறு தியானத்தில் சுருக்கமுடியாது. எங்களின் ஏனைய வாக்குத்தத்த வார்த்தைகளை போல், இக்கட்டுரையின் நோக்கம் வசனத்தின் விளக்கங்கள் எல்லாவற்றையும் பட்டியலிடுவதன்று, எங்கள் உள்ளத்தில் தேவன் பாரப்படுத்தியுள்ள சத்தியத்திற்கு நேராக மக்களை அழைப்பதே எங்கள் நோக்கு. இச்செய்தியின் வாயிலாக உங்கள் நம்பிக்கை புதுப்பிக்கப்படவேண்டும், புத்துணர்வடையவேண்டும், பூரணமாகவேண்டும் என்பதே எங்களின் விண்ணப்பம், வாழ்த்து மற்றும் விருப்பம்!
இயேசு ஒருமுறை தம் சீடர்களை பார்த்து, கிளைகளான அவர்கள் மரத்தோடு இணைந்திருந்தால் மிகுந்த கனிகொடுக்கமுடியும் (யோவான் 15:4) என்று சொன்னார். கனிகள் பெருகுவது மட்டுமல்ல, நற்கனிகளும் அவர்கள் கொடுப்பார்கள் (மத் 7:19). நம்பிக்கையில்
பெருகுவதை(வளர்தல்,அதிகரித்தல்,கூடுதல்)பற்றி பவுல் குறிப்பிடும்போது அவர் நிச்சயமாக நம்பிக்கையின் தரத்தை, அதன் வளர்ச்சியையை குறிப்பிட்டிருப்பார்! நான் விசுவாசிப்பது இன்னது என்று அறிந்திருக்கிறேன் என்று பவுல் சொல்லவில்லை (அது உண்மை என்றாலும்), நான் விசுவாசிப்பவர் இன்னார் என்று அறிந்திருக்கிறேன் (2 தீமோ 13:2) என்கிறார். அதன் அர்த்தம் என்ன? பொருள் அல்ல பரமனே எனக்கு முக்கியம். ஆசீர்வாதமல்ல அழைத்தவரே எனக்கு முக்கியம். நன்மைகள் அல்ல நல்லவரே எனக்கு முக்கியம்!
இக்கருத்தின் ஆழத்தை நம்பிக்கையின் மூன்று படிநிலைகளின் வழியே நாம் தியானிப்போம்.
நிலை 1: சிறந்தது
நீதி 13:12 நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருடுயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும்.
எரேமியா 29:11 நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.
வாழ்க்கையில் நாம் அநேக காரியங்களை நாடுகிறோம். இம்மைக்காக மாத்திரம் நாம் இயேசு கிறிஸ்துவில் நம்பிக்கை வைப்போமானால் நாம் எல்லாரிலும் பரிதவிக்கப்பட்டவர்களாய் இருப்போம் (1 கொரி 15:19) என்று பவுல் சொல்லும்போது அவர் இந்த பூமிக்குரிய நன்மைகளை நாடவேகூடாது என்று சொல்லவில்லை. இந்த வசனத்தில் நாம் முக்கியப்படுத்தவேண்டிய வார்த்தை “இம்மை” அல்ல, ‘மாத்திரம்’. அவர் மேலும் எழுதுகிறார் “சரீர முயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது; தேவபக்தியானது இந்த ஜீவனுக்கும் இதற்குப் பின்வரும் ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது (1 தீமோ 4:8). இயேசு சொன்னார், “தேவனுடைய இராஜ்ஜியத்தையும் நீதியையும் தேடுங்கள், இவைகள் அனைத்தும் உங்களுக்கு கூடக் கொடுக்கப்படும்”. பூமிக்குரிய நன்மைகளினால் உங்களை ஆசீர்வதிக்க தேவன் விருப்பங்க்கொண்டுள்ளார். உலக ஆசீர்வாதங்கள், சிலர் எண்ணுவது போல், கெட்டவைகள் அல்ல. இராஜா சாலொமோன் கேட்ட ஞானத்தை மட்டும் கொடுக்கவில்லை; அவன் கேளாத ஐசுவரியத்தையும் அவனுக்கு கொடுத்து அவனை ஆசீர்வதித்தார். இங்கே வித்தியாசப்படுத்தும் காரணி யாதெனில், நம்முடைய விருப்பம் நம்முடைய இருதயத்திற்கு நோயை வருவிக்கக்கூடாது. இந்த வாழ்க்கைக்கு தேவையானவைகளுக்காக நாம் தேவன் மேல் நம்பிக்கை வைத்து, அவருடைய வாக்குத்தத்தங்களை பற்றிக்கொள்ளவேண்டும். தகுதியான வேலையை, வசதியான வீட்டை, போதிய வருமானத்தை நீங்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால், தேவனுடைய வாக்குத்ததங்களின் மேல் உங்கள் வாழ்க்கையை கட்டுங்கள். திடன் கொள்ளுங்கள! தேவன் தம் வாக்குத்தத்தங்கள் யாவற்றையும் அவருடைய நேரத்தில் நிறைவேற்றுவார். ஆமென்!
நிலை 2: மேலானது
1 கொரி 13:10 நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்.
தீத்து 3:7 அவர் நமது இரட்சகராகிய இயேசுகிறிஸ்து மூலமாய், அந்தப் பரிசுத்தாவியை நம்மேல் சம்பூரணமாய்ப் பொழிந்தருளினார்
முன்னொரு காலத்தில், நாம் பாடல்களை, இசையை கேட்க ஒலிநாடாக்களை (கேசட்டுகள்) பயன்படுத்திவந்தோம். தொழில்நுட்பம் வளர்ந்தபோது, ஒலிநாடாக்கள் ஒலித்தட்டுகளாக மாறின. CD-க்கள் DVD-க்களாக மாறின. MP3 தொழில்நுட்பம் வந்தபின்பு, 100 பாடல்களையும் ஒரே DVD-க்குள் அடக்கமுடிந்தது! இணையதள மின்னணு இசை மற்றும் வலையொளி இசை (YouTube Music) போன்ற வலைதளங்கள் பெருக்கமடைந்துள்ள இந்நாட்களில் நாம் இசையை கேட்க சி.டி. டி.வி.டி. போன்றவைகளை நம்புவதில்லை. இசையை நாம் எப்போது விரும்பினாலும் இணையத்தில் கேட்கலாம். பவுல் சொல்லுகிறார், நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன், குழந்தையைப்போலச் சிந்தித்தேன், குழந்தையைப்போல யோசித்தேன்; நான் புருஷனானபோதோ குழந்தைக்கேற்றவைகளை ஒழித்துவிட்டேன்(1 கொரி 13:11) அதுபோல், யாராவது ஒருவர் கேசட் பிளேயரில் பாட்டு போட்டால் தான் கேட்பேன் என்று பிடிவாதம் பிடித்தால், அது சிறுபிள்ளைத்தனம் தானே?
ஓரு பணக்கார வாலிபன் ஒருமுறை இயேசுவை சந்திக்க வந்து நித்திய ஜீவனை அடைவதற்கான வழி என்னவென்று கேட்டான்? இயேசு அவனை பார்த்து சொன்னது என்னவென்றால், உன்னுடைய சொத்துக்களை எல்லாம் நீ விற்று தரித்திரருக்கு கொடுத்து என்னை பின்பற்றிவா என்றார். அந்த மனிதன் மிகவும் செல்வந்தனாக இருந்த காரணத்தினால், அப்பதிலை அவனால் ஏற்கமுடியவில்லை. உங்களால் ஒரே நேரத்தில் நடக்கவும் பறக்கவும் முடியாதல்லவா? இயேசுவோடுகூட ஒரு விண்ணரசின் வாழ்க்கை பயணத்தை மேற்கொள்ள நீங்கள் முதலில் தரையில் இருந்து எழும்பவேண்டும்! பூரணமான ஒன்றை அடைய நாம் பகுதியான ஒன்றை இழக்கவேண்டும். அது தான் புத்திசாலித்தனம்.
இனிவரும் சம்பவங்களை அறிந்திட கலங்கின சீடன் யோவானை இயேசு எப்படி மேலேறி வா என்று அழைத்தாரோ (வெளி 4:4), அப்படியே நாமும் நம் ஆவிக்குரிய பயணத்தில், ஆவிக்குரிய இலக்கிலே முன்னே சிறப்பானவைகளை விட்டு மேலானவைகளை நாடவேண்டும். இயேசு சொன்னார், ‘நான் ஜீவன் உண்டாயிருக்கவும் அது பரிபூரணப்படவும் வந்தேன்’. பரிபூரண ஜீவனே நித்திய ஜீவன். இன்றைக்கும் நம்முடைய வாழ்க்கையின் வழித்தடம் பரலோகத்தை நோக்கி எவ்வளவு தூரம் முன்னேறியுள்ளது?
நிலை 3: உன்னதமானது
1 தீமோ 1:1 நம்முடைய இரட்சகராயிருக்கிற தேவனும், நம்முடைய நம்பிக்கையாயிருக்கிறகர்த்தராகிய இயேசுகிறிஸ்துவும் கட்டளையிட்டபடியே, இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாயிருக்கிற பவுல்,
2 தீமோ 1:12 அதினிமித்தம் நான் இந்தப் பாடுகளையும் அனுபவிக்கிறேன்; ஆயினும், நான் வெட்கப்படுகிறதில்லை; ஏனென்றால், நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னாரென்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புக்கொடுத்ததை அவர் அந்நாள் வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறேன்.
இன்றைக்கும் விசுவாசத்தை பற்றிய ஒரு வல்லமையான வாக்கியத்தை நாம் வேதத்தில் பார்க்கவேண்டுமானால், தேவன் பட்சத்தில் நிற்க தங்களை ஒப்புக்கொடுத்த மூன்று யூத வாலிபர்களின் சாட்சியே என் மனதில் தோன்றுகிறது. பாபிலோனிய அரசன் பொற்சிலையை வணங்காவிடில் அக்கினி சூளையை சந்திக்க நேரிடும் என்று அவர்கள் கட்டாயபப்டுத்தினபோது, அவர்கள் சொன்னார்கள், ‘அவர் எங்களை விடுவித்தாலும், விடுவிக்காது போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்வதுமில்லை’ என்றார்கள்!
இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் நிமித்தம் மிகுந்த இடுக்கணையும், தாங்கொண்ணா வேதனையையும் சந்தித்த அப்போஸ்தலனாகிய பவுல் சொல்லுகிறார், “.. ஆயினும், நான் வெட்கப்படுகிறதில்லை; ஏனென்றால், நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னாரென்று அறிவேன்” அவருடைய பார்வை இக்கட்டிலிருந்து கிறிஸ்துவுக்கு நேரே, பாடுகளிலிருந்து பரமனின் பக்கம், உபத்திரவங்களிலிருந்து உயிருள்ள தேவனை நோக்கி திரும்புகிறது. அவருக்கு இயேசு இனி தான் நம்புவதை நிறைவேற்றும் தெய்வமாக இல்லை, அவரே நம்பிக்கை நாயனாக மாறுகிறார்
ஓர் புதிய பொருளாதார ஆண்டினுள் நாம் இன்று பிரவேசித்துள்ளோம். வேதம் சொல்லுகிறது, கர்த்தருடைய ஆசீர்வாதமே ஐசுவரியத்தை தரும். ஆம் கர்த்தரின் ஆசீர்வாதம் நம்முடைய வாழ்க்கையில் பொருளாதார மேன்மையை கொண்டுவருவது திண்ணம். ஆனால், பொருளாதார பெருக்கத்திற்கும் முன் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையில் ஒரு வளர்ச்சியை, முன்னேற்றத்தை, உயர்வை நாம் அடையவேண்டும் என்று மிகவும் வாஞ்சிக்கிறேன்! ஆண்டவராகியே இயேசு நம்முடைய நம்பிக்கையாக, நம் வாழ்வின் மையமாக மாறும்போது, நம்முடைய கேள்விகள், நம்முடைய கலக்கங்கள், வாழ்க்கையில அடுத்த என்ன நடக்குமோ? என்று இருக்காது, அல்லது எப்போது என் பாடுகள் எல்லாம் ஓய்ந்து பரலோகம் போவேனோ? என்று இருக்காது, இயேசுவே நம்முடைய ஆசை, வாஞ்சை, தேவை, விருப்பம், இயேசுவே எல்லாம் என்றாகிடும். அல்லேலூயா!
நம்முடைய அன்றாட போராட்டங்கள், சவால்கள், வாழ்க்கையின் அழுத்தங்களின் நடுவே இவைகளை உயர்வான ஆவிக்குரிய நிலையை அடைவது சுலபமன்று. ஆனாலும், பலத்தினாலும், பராக்கிரமத்தினாலும் அன்று. ஆது அவருடைய ஆவியினாலேயே ஆகும். ஆமென்!
செயல்படுத்தும் ஆற்றல்கள்
வாழ்க்கையில் நம்பிக்கை வளர பவுல் மிகத் தெளிவான, ஒரு கருத்தாழம் மிகுந்த ஜெபத்தை வைக்கிறார். நாம் இங்கு பார்ப்பதுபோல், நம்முடைய வாழ்க்கை சிறந்தவைளை நாடுவதிலிருந்து மேலானவைகளை நோக்க, மேலானவைகளை நோக்குவதிலிருந்து, உன்னதமான நிலைக்கு செல்ல, இரண்டு முக்கிய காரணிகள், ஆற்றல்கள் இன்றியமையாதவை.
நம்பிக்கையின் தேவனுடைய உதவியின்றி, பரிசுத்த ஆவியானவரின் ஆற்றலின்றி, நம்முடைய நம்பிக்கையின் வாகனம் எப்போதும் மேடும் பள்ளங்களும் நிறைந்த, குண்டும் குழியுமான, கரடுமுரடான பாதையின் வழியே பயணித்துக்கொண்டிருக்கும். பரிசுத்த ஆவியின் நிறைவு காணப்படும்போதும் நம்பிக்கையோடு சந்தோஷமும் சமாதானமும் பெருகும், வளரும், சிறக்கும்.
பரிசுத்த ஆவியின் பலத்தினாலே உங்களுக்கு நம்பிக்கை பெருகும்படிக்கு, நம்பிக்கையின் தேவன் விசுவாசத்தினால் உண்டாகும் எல்லாவித சந்தோஷத்தினாலும் சமாதானத்தினாலும் உங்களை நிரப்புவாராக (ரோமர் 15:13)
ரோமர் 15:13-ல் பவுல் ஏறெடுத்த விண்ணப்பம், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள நம்முடைய நம்பிக்கையை புதுப்பித்து, புத்துணர்வடையச் செய்து, புத்துயிர் அளித்து வரும் நாட்கள், மாதங்கள், வருடங்களில் அவருக்காய் வாழ நம்மை ஊக்கப்படுத்தும் என்று உறுதியுடன் நம்புகிறேன்.
நம்பிக்கையின் தேவன் தாமே உங்களை நிறைவாய் ஆசீர்வதிப்பாராக!
கிறிஸ்துவுக்குள் உங்கள் சகோதரன்,
வினோத்குமார்
தேவநிழல் ஊழியங்கள்
எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்!