Friday, August 5, 2022

வாக்குதத்த வார்த்தை| ஆகஸ்ட் 2022ஸ

 *வாக்குத்தத்தம் | ஆகஸ்ட் 2022*                                    

 இவரே நம் தேவன்!*


அக்காலத்திலே: இதோ, இவரே நம்முடைய தேவன்; இவருக்காகக் காத்திருந்தோம், இவர் நம்மை இரட்சிப்பார்; இவரே கர்த்தர், இவருக்காகக் காத்திருந்தோம்; இவருடைய ரட்சிப்பினால் களிகூர்ந்து மகிழுவோம் என்று சொல்லப்படும். (ஏசாயா 25:9)


அப்போஸ்தலன் பவுல், தன் நிருபங்களில், அடிக்கடியாக “தேவனை பற்றும் அறிவு” அல்லது “கிறிஸ்து இயேசுவை பற்றும் அறிவு” என்பவைகளை பற்றி பேசுகிறார். அவர் சொல்ல விரும்பும் ‘அறிவு’ எதனை பற்றியது?  இயேசுவே ஆண்டவர் என்று அறிந்துகொள்ளும் பொதுவான அறிவா? அல்லது அவர் நம்முடைய இரட்சகர் என்று அறிவிக்கும் மறையியல் அறிவா?  ஆனால், இவைகள் எல்லாம் கிறிஸ்தவரல்லாதோரும் அறிந்துவைத்திருக்கும் சில அடிப்படை தகவல்கள் தானே!


ஒருமுறை, அநேக நிருபங்களின் ஆக்கியோனான இவரே,  இயேசு கிறிஸ்துவை அறியும் அறிவின் மேன்மைக்காக நான் எல்லாவற்றையும் நஷ்டம் என்று எண்ணுகிறேன் என்கிறார்.  (பிலிப்பி 3:8).  அதோடுகூட, தேவனை அறியும் அறிவில் வளரவேண்டும் என்று விசுவாசிகளை ஊக்கப்படுத்துகிறார்.    பற்பல உபத்திரவத்தை அவர் சந்தித்தாலும்,  எப்படி அவரால் மகிழ்ந்திருக்க முடிந்தது, எப்படி விசுவாசத்தை காக்க முடிந்தது? பவுல் சொல்லுகிறார், “நான் விசுவாசிக்கிறவர் இன்னார் என்று அறிந்திருக்கிறேன்”.  ஆம்,  கிறிஸ்துவை  பற்றும் அறிவு அல்லது தேவனை பற்றும் அறிவே நம்முடைய பெலன்.


குறைவு குறைவை ஏற்படுத்தும்

ஓசியா 4:6 என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள்

இயல்பு உலகத்தில், அறிவானது புத்தகங்களை வாசிப்பதனாலும், கல்விக்கூடத்தில் சேர்வதனாலும், அல்லது ஒருவரால் பயிற்றுவிக்கப்படுவதாலும் பெறப்படுகிறது.  ஆவிக்குரிய அறிவோ புத்தகங்களின உதவியோடல்ல, தேவனோடுள்ள ஒரு நெருங்கிய உறவு அல்லது இணக்கமான நடையினால் உண்டாகிறது!  தேவனோடுகூட ஒரு நெருங்கிய உறவல்லாத எந்த இறையியலும், இடுக்கணில் உதவாது. வேதம் சொல்லுகிறது, தேவன் ஆவியாக இருக்கிறார். அவரை தொழுதிடுவோர் ஆவியோடும் உண்மையோடும் அவரை தொழுதிடவேண்டும்.   அதுமட்டுமல்ல, ஆவிக்குரிய ரியங்களை ஜென்மசுவாமுள்ள மனிதனால், ஆவியில் மறுஜென்ம அடையாத மனிதனால் விளங்கிக்கொள்ளமுடியாது. ஒரு மறுபிறப்படைந்த, ஆவியில் நிரம்பின, ஆவியில் நடத்தப்படும் நபரால் மட்டுமே தேவனுடைய அறிவின் ஆழத்திற்குள் பிரவேசிக்கமுடியும்.  உங்களை சுற்றி, உங்களை வாழ்க்கையை சுற்றி நடக்கும் காரியங்கள் எதுவாக இருப்பினும்,  “ஏன் ஆண்டவரே இது” என்று கேட்கக்கூடாது. மாறாக “இவரே நம் தேவன்” என்று பரைசாற்றவேண்டும்.  உங்கள் தேவன் யார் என்கின்ற அறிவு உங்களுக்கு உண்டானால் மட்டுமே அது சாத்தியப்படும்.


அறிவு பிறப்பிக்கும் 

ஆதி 4:1 ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி, காயீனைப் பெற்று, கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் என்றாள்

எந்த அறிவும் ஒரு பலனை பிறப்பிக்கும்.  ஆதாம் மற்றும் ஏவாளுக்கு இடையே காணப்பட்ட தாம்பத்திய உறவால் ஒரு புது ஜீவன், ஓர் புது வாழ்வு, ஒரு மகன்  பிறந்தான்.  ஆதாம் ஏவாளை அறிந்ததினால், அவர்களை போன்ற உருவ அமைப்பை கொண்ட ஒரு குழந்தை அவர்களுக்கு பிறந்தது.   கிறிஸ்துவை நாம் அறிவது, அதுபோன்றே, கிறிஸ்துவின் சுபாவத்தை நமக்குமள் பிறப்பிக்கவேண்டும் நாம் ஆவிக்குரிய கனிகளை கொடுக்கவேண்டும்! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சந்தோஷம், சமாதானம் மற்றும் அன்பை நிறைவாக கொண்டவராக காணப்பட்டார்.  உங்கள் வாழ்க்கையும் அப்படிப்பட்ட கனிகளை பிறப்பிக்கவேண்டும்!


ஏசாயா 25: தேவனை பற்றிய ஒரு தீர்க்கத்தரிசன பாடல்


வரலாற்றுப்பூர்வமாக, இந்த வேதப்பகுதி பாபிலோனின் வீழ்ச்சி மற்றும் தேவன் கொண்டுவரும் நியாயத்தீர்ப்பை வெளிப்படுத்துகிறது.  ஆவிக்குரிய ரீதியில், அது நம்முடைய வாழ்க்கையில் தேவன் பாபிலோனிய சக்திகளை மேற்கொள்ளுவதை காண்பிக்கிறது –கள்ள மதப் பழக்கங்கள, பிசாசின் வஞ்சனை போன்றவைகள். தீர்க்கத்தரிசனமாக, இது உங்களுடைய வாழ்க்கையில் நடக்கும் காரியங்களை, குறிப்பாக பெலவீனருக்கு உதவி அவர்களுடைய வாழ்க்கையில் தேவமகிமையை வெளிப்படுத்தும் ஒரு சம்பவமாக அமையப்போகிறது.  நம்முடைய தியானம், இந்த நாளிலும், தீர்க்கதரிசன முக்கியத்துவம் வாய்ந்ததும், வெளிப்பாடுகள் மிக்கதாகவும் அமைந்துள்ளது.   இந்நாளிலே நாம் நம்பிக்கையோடு ஒன்றை சொல்லவேண்டும் “இவரே கர்த்தர், இவருக்காகக் காத்திருந்தோம்; இவருடைய ரட்சிப்பினால் களிகூர்ந்து மகிழுவோம் என்று சொல்லப்படும். (ஏசாயா 25:9)


நாம் தேவனின் முப்பெரும் காரியங்களை, குணநலன்களை கவனிக்கவுள்ளோம்.  ஆம். இந்த பகுதியில், நமக்குண்டாகும் ஓர் அறிவு, எல்லாவித பயங்கள் மற்றும் கவலைகளிலிருந்து நம்மை விடுவித்திடும்.


அறிவு 1 

சூழலும் சாத்தியமும்: சத்துருக்குள் சிதறுண்டுபோவார்கள்!

                                                                                                                                                                                            ஏசா 25:2-5   : நீர் நகரத்தை மண்மேடும், அரணான பட்டணத்தைப் பாழுமாக்கினீர்; அந்நியரின் ராஜதானியை ஊராயிராதபடிக்கும், என்றைக்கும் கட்டப்படாதபடிக்கும் செய்தீர். ஆகையால் பலத்த ஜனங்கள் உம்மை மகிமைப்படுத்துவார்கள்; கொடூரமான ஜாதிகளின் நகரம் உமக்குப் பயப்படும். கொடூரமானவர்களின் சீறல் மதிலை மோதியடிக்கிற பெரு வெள்ளத்தைப்போல் இருக்கையில், நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும் பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர்

                                                                                                                                                                                     பழைய ஏற்பாட்டு நாட்களில், இஸ்ரவேல் தேசம் எப்போதும் எதிரி நாடுகளால் தாக்கப்பட்டுவந்தது.  பல  தோல்விகளை சந்தித்த இத்தேசம், பெர்சியர், அசிரீயர் மற்றும் பாபிலோனியர்களால் சிறைபிடிக்கவும் பட்டது.  அவர்கள் யுத்தத்தில் பெரிய வெற்றிகளையும் கண்டார்கள். ஆனால் அவர்களுடைய பெலத்தில் பெறவில்லை, அவர்களுடைய யுத்தத்தை வழிநடத்தி அவர்களுடைய சத்துருக்களை அழித்துப்போட்ட அவர்களுடைய அதரிசனமான தளபதியாகிய கர்த்தரின் அசாத்திய பெலன் அது.  இன்றும், ஒரு ஆவிக்குரிய கிறிஸ்தவனுக்கு, எதிராளி ஒரு தேசமோ அல்லது தனிநபரோவன்று. அவன் பிசாசு ஒருவனே.  , 


எப்படி இஸ்ரவேல் தன் எதிராளிகளின் நிமித்தம் பாடுபட்டதோ, நாமும் நம் வாழ்க்கையில் சித்திரவதை, அங்கலாய்ப்பு மற்றும் அழுத்தத்தை உணர்கிறோம்!  நீங்கள் முழங்காலில் நின்று அவரை நோக்கி கூப்பிடுகையில், அவரை நீங்கள் நம்புகையில், அவரோடு நிற்கையில் கர்த்தர் இன்றும் உங்கள் யுத்தத்தை செய்கிறார்.  மெய்யாகவே, உங்கள் எதிராளியாகிய பிசாசு, நீங்கள் சர்வாயுத வர்க்கத்தை தரித்திருக்க  உங்களுக்கு எதிராக நிற்கமாட்டான்!  ஆமென்!


நீங்கள் இந்த யுத்தத்தில், போரட்டத்தில், சிக்கலில் தனியே இல்லை என்பதை  அறிந்துகொள்ளவும்! 

அறிவு  2

குறைவும் காப்புறுதியும்: சிறுமையானவன் உதவிபெறுகிறான்!

ஏசா 25:4 கொடூரமானவர்களின் சீறல் மதிலை மோதியடிக்கிற பெரு வெள்ளத்தைப்போல் இருக்கையில், நீர் ஏழைக்குப் பெலனும், நெருக்கப்படுகிற எளியவனுக்குத் திடனும் பெருவெள்ளத்துக்குத் தப்பும் அடைக்கலமும், வெயிலுக்கு ஒதுங்கும் நிழலுமானீர்

பூகோள ரீதியில் இஸ்ரவேல் ஒரு சிறிய நாடு.  ஆனாலும், கர்த்தர் அதனை தனக்காக தெரிந்துகொண்டார். தேவன் அவர்களை தம்முடைய சொந்த மக்களாகவே பாவித்தார். அவர் கொடிய எகிப்தை, வலிய அசீரியாவை அல்லது பெலமுள்ள பெர்சியாவை தம் சுதந்தரமாக தெரிந்துகொள்ளாமல் இந்த குட்டி நாட்டை தன் கண்மணியாக காத்தார்.  அவர் பெலவீனரை தெரிந்துகொண்டு  மகிமைப்படுத்தினார்! அதுபோலவே, உங்கள் குடும்பத்தில் உங்களை எல்லாரும் பெலவீனர், ஏழை, ஆதரவற்றோர், புறக்கணிக்கப்பட்டோர், நிராகரிக்கப்போடார் என்று எண்ணலாம். ஒருவேளை மற்றவர்களிடம் காணப்படும் ஏதோ ஒன்று உங்களிடம் இல்லாதுபோகலாம்.  ஆனாலும், திடன்கொள்ளுங்கள், தேவன் பெலவீனர், முக்கியமில்லாதோர், மதிக்கப்படாதோருக்கு தம்மை சமீபமாக்குகிறார். அவர் திக்கற்றவர்களின் தகப்பன், உங்கள் பிரச்சனைகளில் அவரே அனுகூல துணை.  இதுவே தேவனுடைய மாறாத் தன்மையின் அடையாளம். உலகமானது ஏழை மற்றும் வசதிகுறைவுள்ளோரை வித்தியாசமாக பார்க்கலாம். ஆனால் தேவனோ பெலவீனரின் கூடுகையில் சந்தோஷம் காண்கிறார்.  இயேசு ஒரு அரண்மனையில் பிறக்கவில்லை, ஒரு முன்னணையில் கிடத்தப்பட்டார்.  அவருடைய பிறப்பின் செய்தி முதலில் இராஜாக்களுக்கு அறிவிக்கப்படவில்லை, ஏழைஎளிய மேய்ப்பர்களுக்கே சொல்லப்பட்டது. மெய்யாகவே, கர்த்தராகிய தேவன் உங்கள் விண்ணப்பங்களுக்கு எல்லாம் கவனமாக செவிகொடுக்கிறார் என்பதால் உங்கள் வழக்கை அவர் விசாரித்து அவரே உங்களை உயர்த்துவார். 


உன் தேவன் ஒரு பெலத்த துருகம் என்றும் பணக்காரர் மற்றும் வசதியானவர்களை காட்டிலும்,  உதவியற்றோருக்கு துணை நிற்கும் ஆதர்வு மற்றும் இரட்சகருமானவர்! 


அறிவு 3

கர்த்தரின் மேன்மையும் மகிமையும்:  சர்வவல்லவரின் மகிமையின் வெளிப்பாடு!

ஏசா 25:6  சேனைகளின் கர்த்தர் இந்த மலையிலே சகல ஜனங்களுக்கும் ஒரு விருந்தை ஆயத்தப்படுத்துவார்; அது கொழுமையான பதார்த்தங்களும், பழமையான திராட்சரசமும், ஊனும் நிணமுமுள்ள பதார்த்தங்களும், தெளிந்த பழமையான திராட்சரசமும் நிறைந்த விருந்தாயிருக்கும்


மலை அல்லது பர்வதம், வேதாகமத்தில், பொதுவாக தேவன் மனிதனை சந்திக்கும் இடமாகவே அறியப்படுகிறது.  மொரியா மலையில் ஆபிரகாம் தேவனை நேரில் சந்தித்தார்.  சீனாய் மலையில் தேவனோடுகூட ஒரு  மறக்கமுடியா சந்திப்பு மோசேக்கு ஏற்பட்டது.  இயேசுவின் சீடர்கள் பேதுரு மற்றும் யோவான் தங்கள் போதகர்  ஒரு மலையில் மறுருபமான காட்சி தனை கண்டார்கள்.   இயேசுவை சந்தித்த சமாரிய பெண்,  தேவனை மலையில் தொழுதுகொள்வதை பற்றி வினாவினாள்.   மலை தேவன் மனிதனை சந்திக்கும் இடம்.  அது ஒரு ஆராதனை ஸ்தலம், கூடிவரும் இடம், தேவனுடைய சமூகத்தை உணரும் இடம்.  எங்கே இரண்டு அல்லது மூன்று பேர் என் நாமத்தில் கூடிவருகிறார்களோ அங்கே நான் இருக்கிறேன் என்றார்.  ஜெப அறை ஒரு மலை.  பரிசுத்தவாங்களின் கூடுகை ஒரு மலை. ஜெப ஐக்கியம் ஒரு மலை.  அந்த பர்வதத்திலே தானே  இயேசுவானவர் தம் மகிமையை, வல்லமையை, சமூகத்தை  வெளிப்படுத்துவார். அவருடைய வார்த்தை உங்கள் விருந்தாகட்டும்! இன்றும் நாம் அவருடைய மலையில் ஏறுவோம். 


அவருடைய மலையில் நாம் பெறும் காரியங்கள் 


1) அவருடைய வார்த்தையின் செழிப்பு

2) ஆவிக்குரிய மனிதன் உயிர்பிக்கப்படுதல்

3) அவருடைய மகிமையின் வெளிப்பாடு 

4) ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல்   


தனிநபர், குடும்பம் மற்றும் கூட்டுப் பிரார்த்தனை நேரம் அவருடைய மகிமையை, அவருடைய இரக்கத்தை, அவருடைய கிருபையை, அவருடைய தயவை உங்கள் வாழ்க்கையில் வெளிப்படுத்தும்.


அறிவு விடுதலையாக்கும்


சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.(யோவான் 8:32)

இப்புதிய மாதத்திலும், சத்துருக்கள் அவர் முன் சிதறுண்டு போகிறார்கள், சிறுமையானவர்களுக்கு அவர் உதவிசெய்கிறார்,  சர்வவல்லவரின் மகிமை அவருடைய மலையில்-சமூகத்தில்-காணப்படும் என்பதை மிகுந்த நம்பிக்கையுடன் அறிக்கைசெய்து இவரே நம் தேவன், இவர் நம்மை இரட்சிப்பார் என்று சொல்லி தைரியத்துடன் அறிக்கைசெய்திடுவோம்.

கர்த்தாவே, நீரே என் தேவன்; உம்மை உயர்த்தி, உமது நாமத்தைத் துதிப்பேன்; நீர் அதிசயமானவைகளைச் செய்தீர்; உமது ஆலோசனைகள் சத்தியமும் உறுதியுமானவைகள். (ஏசா 25:1)


கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!


கிறிஸ்துவுக்குள் உங்கள், 

வினோத் குமார்

தேவநிழல் ஊழியங்கள்


HE LEADS ME IN THE PATH OF RIGHTEOUSNESS | PROMISE WORD | OCTOBER 24 (ENGLISH)

  PROMISE – OCT 2024 IN THE PATH OF RIGTEOUSNESS Psa 23:3   He restoreth my soul: he leadeth me in the paths of righteousness for his ...