தேவநிழல் வாக்குத்தத்த
செய்தி
(ஜூலை
2020)
இதிலே நான் நம்பிக்கையாயிருப்பேன்
எனக்கு
விரோதமாக ஒரு பாளயமிறங்கினாலும், என் இருதயம் பயப்படாது; என்மேல் யுத்தம் எழும்பினாலும்,
இதிலே நான் நம்பிக்கையாயிருப்பேன் ( சங்கீதம்
27:1)
இந்த ஆண்டின் ஒரு பாதி முடிந்து, ஆடுத்த
ஆரம்பித்துள்ளது. ஆண்டுதுவக்கத்தில் ஆருடம் சொன்ன ஜோதிடர்கள், தீர்க்கத்தரிசிகள், ஞான்திருஷ்டிகர்கள்
என்று எல்லா தரப்பினரின் கணிப்பும் தவிடுபொடியாகும் வண்ணம் இந்த ஆண்டின் போக்கு இதுவரையில்
இருந்துள்ளது. வரலாறுகாணாத ஒரு தொற்றுநோய்
உலகத்தை ஆட்டிப்படைத்து மக்களின் இயல்பு வாழ்க்கையை நிலைகுலைக்கும் என்று யாரும் யோசிக்கவில்லை. அரையாண்டு முடிந்தாலும் கொரோனா தன் ஆட்டத்தை முடிப்பதாக
தெரியவில்லை. இனி எவ்வளவு காலமோ? இனி எப்படியிருக்குமோ? இனியும் நமக்கு பாதுகாப்புண்டோ? இனி நமக்கு என்னவாகுமோ? இனி ஒரு எதிர்காலம் உண்டோ?
என்ற கேள்விகள் நாம் மனதில் எழாமல் இல்லை.
கல்வி, வேலை, தொழில், வணிகம், பொருளாதாரம்
என்ற வாழ்க்கையின் அனைத்து பகுதிகளும் பெருந்தொற்றின் பேரலையில் சிக்கி சிதைந்துவிட்டது. உணவு, உடை, உறைவிடம் என்ற வாழ்க்கையின் உயிர்நாடிகள்
ஒவ்வொன்றும் கேள்விக்குறியான நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டன.
ஏதோ ஒரு வகையில் இந்த நோய் அல்லது இதன்
சமூக-பொருளாதார விளைவுகள் நம்மையும், நம் உறவுகளையும்
பாதிக்காமல் இல்லை. என்னை அண்டவேமுடியாது,
எனக்கு எதிர்ப்புசக்தி அதிகம் என்று சவால்விடும் நிலையிலோ அல்லது இதனால் ஏற்பட்ட நஷ்டங்கள்
என்னை பாதிக்கவேயில்லை என்று சொல்லும் நிலையிலோ நாம் இல்லை என்பது உண்மை.
ஆண்டவராகியே இயேசு தம்முடைய சீடர்களை அழைத்து, உலகத்தில் நீங்களும் ஒருவர் என்று சொல்லாமல், உலகத்திற்கு நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்று
சொன்னார்: உலகத்திற்கு வெளிச்சம், உலகத்திற்கு உப்பு. இன்னொரு பக்கம், உலகத்திலே உங்களுக்கு உபத்திரவம்
உண்டு என்றும் சொன்னார். அதாவது, நீங்கள் இயேசுவை
ஏற்றுக்கொண்டு அவரை பினபற்றினாலும், உலகமனுஷர்களுக்கு வரும் சகலவித பிரச்சனைகள்,
போராட்டங்கள், சோதனைகள், பாடுகள், வியாதியின் தாக்கங்கள் ஒவ்வொன்றும் நம்மையும் கண்டிப்பாக
நெருங்கும் என்றார். ஆனாலும் நான் உலகத்தை ஜெயித்தேன், அதேபோல் உங்களாலும்
இவைகளை மேற்கொள்ளமுடியும் என்றார்.
கிறிஸ்தவ வாழ்க்கை அல்லது கிறிஸ்துவை பின்பற்றும்
வாழ்க்கை என்பது காற்றின் சீற்றங்களும், அலைகளின்
துள்ளல்களும் நிறைந்த ஒரு கப்பல் பிரயானம்.
அப்பயணத்தில் நம்மை வழிநடந்த, நம்மோடுகூட தண்டுவலிக்க, நம்மை கரைசேர்க்க ஒருவர்
உண்டு. அந்த பயணத்தை ஆரம்பித்தவரும் அவரே,
அதனை வெற்றிகரமான முடிப்பவரும் அவரே. அவர் தான் நம் அருமை இரட்சகர் இயேசு கிறிஸ்து.
அநிச்சயத்தின் மேகம் உலகத்தையே மூடியிருக்கும்
நிலையில், இந்த ஆண்டின் முடிவு எப்படியிருக்கும் என்று என்னால் சொல்லமுடியாது. ஆனால் ஒன்றை என்னால் முழுநிச்சயத்தோடு சொல்லமுடியும். அது என்ன? தொடர்ந்து வாசியுங்கள்…
சங்கீதம் 27 கற்பிக்கும்
பாடம்
கண்களுக்கு புலப்படும் எதிரியை விழ்த்துவது
எளிது. கண்களுக்கு புலப்படாத நுண்கிருமியை வீழ்த்துவது அவ்வளவு எளிதன்று. உலகம் இப்பாடத்தை நன்கு அறியும். பரிசுத்த வேதாகம், நம்முடைய சத்துருக்கள் மாமிசமும்
இரத்தமுமான மனிதர்கள் அல்ல, அவர்களுக்கு பின்னால்
இருந்து செயல்படும் அந்தகார கிரியைகளே என்று சுட்டிக்காட்டுகிறது. வைரசை தடுக்க, ஒழிக்க, வெல்ல ஒரு மாற்றுமருந்தை
உலகம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால்,
இருளில் நடமாடும் எதிரிகளை அழிக்கவல்ல ஆயுதம், எதிர் மருந்து பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகே நம்மை
வந்தடைந்துள்ளது. அதுவே கர்த்தருடைய வார்த்தை. அல்லேலூயா!
என் வசனம் ஆவியாகவும் ஜீவனாகவும் இருக்கிறது என்று இயேசு சொல்லியிருக்கிறார். சங்கீதக்காரன் தாவீது ஒரு அச்சுறுத்தல், ஒரு ஆபத்து, ஒரு அநிச்சயம் அவனை நெருக்கும் சமயத்தில் எழுதின சங்கீதம் தான் 27-ஆம் சங்கீதம்.
அந்த சங்கீதத்தின் நாயகன் தாவீதின் அனுபவமே
நமக்கு தேவனின் வாக்குத்தத்தம் என நம்புகிறேன். முழு சங்கீதத்தையும் ஆராய்ந்து பார்க்க இப்போது
நான் நேரமெடுக்கவில்லை. ஆனாலும், இந்த சங்கீதத்தின்
உட்கருத்தை, இதன் பொக்கிஷத்தை, இதன் அழகை உங்களுக்கு
சுட்டிக்காட்டி இதனால் நமக்கும் உண்டாகும் ஆசீர்வாதத்தை இந்த புதிய மாதத்திற்கான, இனிவரும்
நாட்களுக்கான தேவனுடைய வாக்குத்தத்த வார்த்தையாக உங்களுடன் பகிரவிரும்புகிறேன்.
இனி என்ன ஆகுமோ என்று நாம் சொல்லாமல்,
இதிலே நான் நம்பிக்கையாய் இருக்கிறேன் என்று தாவீதால் எப்படி சொல்லமுடிந்தது?
என் பயம்
எனக்கு
விரோதமாக ஒரு பாளயமிறங்கினாலும், என் இருதயம் பயப்படாது (27:1)
கொரோனா வைரஸ் எங்கோ ஒரு ஆண்டை நாட்டுக்கு
வந்தபோது அதைப்பற்றி நாம் யோசிக்கவில்லை. அது
இந்தியாவில் கால்பதித்து அங்குமிங்குமாக பரவினபோதும் நாம் அசரவில்லை. மழையின் தூரலைப்போல்
அதன் எண்ணிக்கை பெருகும்போது, இதோ இத்தோடு முடிந்துபோகும் என்று ஆட்சியாளர்கள் சொடக்கு
போட்டபோதும் நாம் சிந்திக்கவில்லை. ஆனால் இன்று,
புற்றீசலாக தோன்றியது பெருமலையாக விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில், பரவலின் வேகமும், பலிகளின் தீவிரமும் நமக்குள் ஒரு
கலக்கத்தை ஏற்படுத்தாமல் இல்லை. ஊடகச் செய்திகளும்,
சமூகவலைதள பதிவுகளும் அச்சத்திற்கு எரியூட்டும் விதத்தில் 'இவருக்கே இப்படியென்றால்
நம் கதி என்ன?' என்று சொல்லி நம்மை ஒருபக்கம் மிரட்ட நம் அண்டை வீட்டார், நம் உறவுகளின்
வாசற்படிமட்டும் வந்த நோய் நம் கதவை தான் அடுத்து தட்டுமோ? என்று நம்மில் சிலர் பதட்டபடாமல்
இல்லை. பயம் எதார்த்தமானது. பயப்படக்கூடாது
என்று நாம் எவ்வளவுதான் சொன்னாலும், போதித்தாலும், பிரசங்கித்தாலும் பயம் நம்மை கண்டிப்பாக
சீண்டிப்பார்க்கும், நம்மை தொட்டுவிட்டு செல்லும். கொரோனா வைரஸ் கிருமி ஒருவருக்குள் நுழைவதை ஒருவரால்
முழுவதுமாக தடுக்கமுடியாது. அது உள்ளே நுழைந்தாலும்
நம்முடைய எதிர்ப்பு சக்தி அதனை மேற்கொள்ளும்.
அப்படியே பயமும். அது நம் இருதயத்தை
தொடும். ஆனாலும் நாம் அதனை மேற்கொள்ளுவோம்.
தாவீது பயப்படமாட்டேன், அஞ்சமாட்டேன்,
என் இருதயம் பயப்படாது என்றெல்லாம் பாடினாலும் சங்கீதம் 56:3-ல் "நான் பயப்படுகிற
நாளில் உம்மை நம்புவேன்" என்றார்.
அப்படியானால், தாவீது பயந்துபோகும் ஒரு சூழல், ஒரு நாள், ஒரு நிலை அவருக்கு
வராமல் இல்லை. பயப்படுவோம் என்று சொல்லவில்லை.
பயத்தைவிட்டு ஒடமுடியாது என்றே சொல்கிறேன். பயத்தை
நாம் கையாளவேண்டும். பயத்தை மேற்கொள்ளவேண்டும்.
பயம் எனும் கடலில் நாம் தள்ளப்பட்டாலும் எதிர்நீச்சலடித்து கரைசேரவேண்டும். அதிலே மூழ்கிவிடக்கூடாது. அன்று பேதுரு கடலை கண்டு பயந்து மடிந்துபோவேன்
என்று கதறினான். இயேசுவானவர் அவனை கடிந்துகொண்டாலும் தம் உதவிக்கரம் நீட்டி மூழ்காதபடிக்கு
அவனை தூக்கினார். பேதுருவை தூக்கிவிட்ட கர்த்தர்
உங்களையும் தூக்கிவிடுவார்.
என் பார்வை
என்
முகத்தைத் தேடுங்கள் என்று சொன்னீரே, உம்முடைய முகத்தையே தேடுவேன்கர்த்தாவே, என்று என்
இருதயம் உம்மிடத்தில் சொல்லிற்று (சங்கீதம் 27:8)
தாவீது பயத்தை மேற்கொண்டது தன்னம்பிக்கையினால்
அன்று. தன்னம்பிக்கை நல்லது. தன்னம்பிக்கை
மிக்க தலைவர்களையும் இக்கொடிய நோய் காவு வாங்கிவிட்டதை நாம் பார்க்கிறோமே! நாம் பயப்பட்டால் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி
குறையும் என்றும் சொல்வார்கள். உண்மைதான். அதே சமயம், பயத்தை நாம் சரியான முறையில் கையாளத்
தவறினால், அது ஒரு ஆவியாக, நம்மை மூழ்கடிக்கும் சத்துருவின் ஆயுதமாக மாறிவிடும் என்பது
ஒரு ஆவிக்குரிய உண்மை.
பேதுருவின் பார்வை தன்னை அழைத்த இயேசுவின்
மீது நிலைக்காமல், சீறும் கடலின் மேல் திரும்பினதால், அவன் பயந்தான். 27-ஆம் சங்கீதத்தில் தாவீதின் பார்வை பயத்திலிருந்து
விலகி பரிசுத்த நம்பிக்கைக்கு எப்படி திரும்பிற்று. அதற்கு தாவீது எடுத்த தீர்மானங்கள், செயல்பாடுகள்,
பார்வை மாற்றங்கள் இன்று நமக்கு சில பாடங்களை கற்றுக்கொடுக்கின்றன. அவைகளை மூன்று தலைப்புகளின்
கீழாக கவனிப்போம்.
அ.சமூகத்தை
நாடுதல்
கர்த்தருடைய ஆலயத்தில் தங்கியிருப்பதையே நாடுவேன் (27:4)
சத்துரு பாளையமிரங்கினான்
என்பது அவன் கிட்டே நெருங்கிவிட்டான் என்பதை காட்டுகிறது. ஒருவேளை பயம் இன்று உங்கள் கழுத்தை நெருக்குவது
போல் தோன்றலாம். நீங்கள் உடனடியாக செய்யவேண்டியது
அவருடைய் ஆலயத்தை, அவருடைய சமூகத்தை, அவருடைய சமூகத்தை தேடவேண்டும். இன்று தேவாலயம், திருச்சபை மூடப்பட்டிருக்கலாம். ஆனால், அவரை எங்கும் தொழுதும் காலத்தில் வாழும்
நாம் அவருடைய் சமூகத்தை நம் வீடுகளில், நம் ஜெபஅறைகளில் உணரலாம், உணரவேண்டும். விலகியிரு,
வீட்டிலிரு என்று பூமிக்குரிய அரசாங்கம் அறிவுறுத்துகிறது. வீட்டிலிரு விண்ணவரின் சமூகத்திலிரு என்று விவிலியம்
நமக்கு போதிக்கிறது.
ஆ.சங்கீதம்பாடி
துதித்தல்
கர்த்தரைப்
பாடி, அவரைக் கீர்த்தனம்பண்ணுவேன் (27:6)
எப்படி ஒரு சில
மூலீகைகள், இயற்கை வளங்கள் கொரோனாவை வெல்ல நமக்கு உதவுகின்றதோ அதேபோல் பயத்தை வெல்ல
நமக்கு உதவக்கூடிய ஒரு வல்ல ஆவிக்குரிய ஆயுதம் 'துதி ஸ்தோத்திர ஆராதனை'. நாம்
ஒன்றைக்குறித்தும் கவலைப்படாமல் எல்லா சமயங்களிலும் கர்த்தரை துதிக்கும் பாடல்களை பாடிக்கொண்டே
இருக்கவேண்டும். உங்கள் வாயில் நீங்கள் கடைசியாக
தேவனை துதிக்கும் பாடலை எப்போது பாடினீர்கள்?
பதிலுக்கு நீங்கள் ரொம்பவே யோசித்தால் உங்கள் நிலையை பரிசோதிக்கவேண்டியது அவசியம். கர்த்தரை எக்காலத்திலும் ஸ்தோத்தரிப்பேன். அவர்
துதி எப்போதும் என் வாயில் இருக்கும் என்ற வசனம் உங்கள் வாய்ப்பாட்டாக மாறட்டும்.
இ.சித்தத்தை
அறிதல்
உமது
முகத்தை எனக்கு மறையாதேயும் (27:9)
' அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பார்கள். முகத்தை தேடுங்கள் என்பது தேவனுடைய மனதை, தேவனுடைய
திருச்சித்தத்தை தேடுவதாகும். நல்லதொரு குடும்ப
வாழ்க்கையில் நீண்ட நாட்கள் நிலைத்திருக்கும் கணவன் மனைவி உறவில் இதனை நாம் பார்க்கலாம்.
சில சமயம் கணவனின் கண்ணசைவு மனைவிக்கு காரியங்கள் பலவற்றை புரியவைக்கும். அதுபோலவே நாமும் நம் தேவனோடு உள்ள உறவில் வளரும்போது அவர் கரம் நமக்கு
என்ன கொடுக்கும் என்பதை தேடாமல், அவர் முகம் நமக்கு என்ன சொல்லுகிறது என்று தேடவேண்டும். என் தவறுகள், என் பிழைகள், என் குறைகள், என்னை
குறித்த தேவனுடைய சித்தம் என்னை என்று கேட்கவேண்டும். ஆண்டவரே எனக்கு இதை செய்யும்,
என்னை விடுவியும், என்னை தப்புவியும் என்று கேட்பதைவிட, ஆண்டவரே நான் என்ன செய்யவேண்டும், என் இருதயத்தை ஆராயந்து அறியும் என்று கேட்கவேண்டும்.
என் பிரதிபலன்
கர்த்தருக்கே
காத்திரு; அவர் உன் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்; திடமனதாயிருந்து,கர்த்தருக்கே காத்திரு
(சங்கீதம் 27:14)
கழுத்தை நெருக்கும் ஆபத்துகளின் நடுவே
தாவீது பயப்படாமல் இல்லை. பயந்தவன் தன் பார்வையை தேவ சமூகத்திற்கு நேராக, தேவ கீதங்களை பாடி, தேவ சித்தத்தின் மையத்திற்கு
திருப்புகிறான். அச்சத்தால் சோர்வுற்ற இருதயம்
இப்போது தேவனால் ஸ்திரப்படுத்தப்படும் என்ற வெளிப்பாட்டை பெறுகிறான். தன்னை அழிக்க நினைத்த சத்துருவை இப்போது தன் புயபலத்தால்
அன்று, தேவனுடைய பெலத்தால், தேவனுடைய வார்த்தையால்
மேற்கொள்ளமுடியும் என்ற உணர்வினை பெறுகிறான்.
பயத்தின் பிடியிலிருந்த தாவீதுக்கு தேவன்
யாராக வெளிப்பாட்டாரோ இன்று ஒருவிதமான கலக்கத்தில், அச்சத்தில், சோர்வில், வேதனையில்,
தடுமாற்றத்தில், குழப்பத்தில், சஞ்சலத்தில் தவிக்கும் உங்களுக்கு அவர் வெளிப்படுவார். இது உங்களுக்கு கர்த்தருடைய வார்த்தை. இரத்தின சுருக்கமாக
இதனை பார்க்கலாம். சமயம் வாய்க்கும்போது வேறொரு பதிவில் இதனை விளக்க முயல்கிறேன்.
1.கர்த்தர், என்
வெளிச்சம்:உங்கள்
வாழ்க்கையில் காணப்படும் எல்லா இருளின் கிரியைகளையும் துரத்தும் வெளிச்சமாக இயேசு வெளிப்படுவார்.
ஆமென்!
2.கர்த்தர்,என்இரட்சிப்பு:வியாதி,பெலவீனம்,போராட்டம்
போன்ற சிறையிருப்புகளிலிருந்து இயேசு உங்களை விடுவிப்பார். அல்லேலூயா!
3.கர்த்தர்,என்
பெலன்: என்
அறிவு, என் திறமை, என் பொருளாதாரம், என் வரங்கள் அல்ல என் பெலன். நான் ஒரு பெலவீனன். என் பெலவீனத்தில் அவருடைய பெலனை
பூரணமாய் விளங்கப்பண்ணுவார்.
இனி என்ன ஆகுமோ? இனி அழிவுதான்? என்ற நம்பிக்கையற்ற கேள்விகளை அறிக்கைகளை நாம் நம்மை
சுற்றிலும் கேட்கிறோம்.
இந்த பட்டணத்தில் இனி இருக்கமுடியாது.
இந்த ஊரைவிட்டு போனால் தான் பிழைக்கமுடியும்
என்று அநேகர் நம்முடைய நகரத்தை விட்டுசென்றதுபோல் சிலர் இயேசுவை விட்டு, மனதளவில்,
பின்வாங்கியும் இருக்கலாம்.
ஆனால் தேவனுடைய பிள்ளைகளாகிய நீங்களும்
நானும் சொல்லவேண்டியது 'இதிலே நான் என்ன செய்வேன்?" என்பதல்ல, 'இதிலே நான்
நம்பிக்கையாயிருப்பேன்" என்பதே.
ஆமென். அவர் நம்மை ஒருபோதும் கைவிடாதவர். நம்மை விட்டுவிலகாதவர். எல்லா தீமைகளையும்
நன்மையாக மாற்றுபவர்.
சத்துருவின் போராட்டங்கள், சரீரத்தின் பாடுகள், சொந்தங்களின் சோகங்கள் என்
மாமிசத்தை பட்சிக்க என்னை நெருக்கினாலும் நான் கர்த்தரிடத்தில் நம்பிக்கையாயிருப்பேன்(சங்கீ
27:2,3) என் மாமிசமும் என் இருதயமும் மாண்டுபோனாலும் தேவன் என்றென்றைக்கும் என் இருதயத்தின் கன்மலையும்
என் பங்குமாயிருக்கிறார். இதிலே நான் நம்பிக்கையாயிருப்பேன்
(சங்கீ 73:26) தம்மை நம்புகிற அனைவருக்கும் அவர் கேடகமாயிருக்கிறார் (சங்கீதம்
18:30).
அவரே என் வெளிச்சம், அவரே என் இரட்சிப்பு, அவரே என் பெலன் என்பதில் நம்பிக்கையாயிருப்பேன்.
அவரை நம்புகிறவன் ஒருபோதும் கெட்டுப்போவதில்லை.
பெலங்கொண்டு திடமனதாயிருங்கள்
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக!
கிறிஸ்துவுக்குள் உங்கள் சகோதரன்
வினோத் குமார்
தேவநிழல் ஊழியங்கள்
9840011374, 9840995057
பி.கு. இந்த
செய்தி உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்திருக்குமானால், இதனை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
No comments:
Post a Comment