Friday, July 31, 2020

அவர் என்னை நடத்துவார் | தேவநிழல் வாக்குத்தத்தம் | ஆகஸ்ட் 2020



தேவநிழல் வாக்குத்தத்தம் | ஆகஸ்ட் 2020
அவர் என்னை நடத்துவார்

அங்கேயும் உமது கை என்னை நடத்தும், உமது வலதுகரம் என்னைப் பிடிக்கும்.
(சங்கீதம் 139:10)

இதே ஆகஸ்ட் மாதத்தில் தான், எழுபத்திமூன்று ஆண்டுகளுக்கு முன்பாக, நம் தேசம் விடுதலை பெற்றது.   1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று அந்நியர் கைவசம் இருந்த இந்தியா சுதந்திர நாடாக அறிவிக்கபட்டது.   பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்த நம் முன்னோர்கள் ஒரு நீண்ட நெடிய போராட்டத்திற்கு பின்பு சுதந்திரக் காற்றை சுவாசித்தார்கள்.  தற்கால சந்ததியினருக்கு, ஒருவேளை, நம்முடைய முன்னோர்கள், தேசபக்தர்கள் சிந்தின இரத்தம், வியர்வை மற்றும் கண்ணீரின் அளவும் ஆழமும் புரியாது போகலாம்.  ஆனாலும், ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளை நாம் மிகவும் சிறப்புடன், விமரிசையுடன் கொண்டாடி இந்த தேசத்தை கட்டியெழுப்ப நம் முன்னோர்கள் எவ்வளவாய் பாடுபட்டார்கள் என்பதை சந்ததிகளுக்கு சொல்லவேசெய்கிறோம்.
வருடம் 2020.  அலைபேசியில் அன்றாடம் தொனிக்கும் ஒரு வாக்கியம் நம்மில் பலருக்கு மனப்பாடமே ஆகியிவிட்டது."இந்த முழு நாடும் கொரானாவுடன் போராடுகிறது…." நம் முன்னோர்கள் சுதந்திரத்தை பெற்றுக்கொள்ள பலவழிகளில் போராடினார்கள். அதற்காக உருவாக்கப்பட்ட இயக்கங்களில் ஒன்று, "வெள்ளையனே வெளியேறு இயக்கம்".  நாள் ஒன்று வந்தது. உண்மையில் வெள்ளையர்கள்-பிரிட்டிஷர்கள் இந்தியாவை விட்டு வெளியேறினார்கள்.  கண்ணுக்கு புலப்படும் ஒரு எதிரியாக இவர்கள் பல ஆண்டுகள் நம்மை ஆண்டார்கள்.  ஆனால், இன்று, நம் கண்களுக்கு புலப்படாத,  ஒரு வித்தியாசமான எதிரியோடு ஒரு கடினமான யுத்தத்தை நாம் எல்லோரும் புரிந்துவருகிறோம். இந்த கொரோனா போராட்டத்தின் ஆகஸ்ட்-15 எப்போது வரும்? என ஆவலுடன் காத்திருக்கிறோம்

அநிச்சயத்தின் நிச்சயம்
இந்தியாவெங்கிலும் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. மரணங்களும் குறையவில்லை. யுத்தத்தில்  நாடு ஏற்கனவே தோல்வியை தழுவிவிட்டதா?  ஒருபக்கம் வரலாறுகாணாத ஒரு பெரும் சரிவை நோக்கி பொருளாதாரம் பயணித்துகொண்டிருக்கிறது! இன்னொரு பக்கம் உலக வல்லரசுகளை பின்னுக்கு தள்ளிவிட்டு பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலில் முதலிடத்தை தொட இந்தியா முன்னேறிக்கொண்டிருக்கிறது!  கண்ணுக்கு எட்டும் தூரத்தில் இதற்கான தீர்வும் இப்போது தெரியவில்லை. அநேகரின் வேலை போய்விட்டது.  இருக்கும் பலருக்கும் அது இனியும்  இருக்குமா என்ற நிச்சயமில்லை?! பலரின் தலைக்குமேல் கத்தி! அடுத்த என்ன? விழ்வோமா? வாழ்வோமா?

ஆசா (Aw-sah) 

தாவீது அவ்விடத்தைவிட்டு மோவாபியரைச் சேர்ந்த மிஸ்பேக்குப் போய், மோவாபின் ராஜாவைப் பார்த்து: தேவன் என்னை எப்படி நடத்துவார் என்று நான் அறியுமட்டும், என் தகப்பனும் என் தாயும் உங்களிடத்திலே தங்கியிருக்கும்படி தயவுசெய்யும் என்று சொல்லி(1 சாமுவேல் 22:3)

தாவீது மன்னராகும்படி முன்குறிக்கப்பட்டாலும் அரியனையை நோக்கிய அவனது பயணம் மிகவும் கொடியதும், கடினமானதும் கரடுமுரடானதுமாக இருந்தது.  சவுலின் சேவகர்கள் அவனை துரத்திக்கொண்டிருக்க, ஒரு மரணத்தின் நிழல் அவனை எப்பொழுதும் சூழ்ந்திருந்தது.   கொல்லப்படுவோமோ? என்று பயந்து அவன் ஒரு முறை தன் பெற்றோரை ஒரு புறஜாதி அரசனின் பாதுகாவலில் ஒப்படைத்து தன்னை ஒரு குகைக்குள் ஒளித்துக்கொண்டான்.  அந்த இருளான நிலைமையிலும் தாவீது தன் தேவனை விட்டு பின்வாங்கவில்லை.  அவருடைய தேவன் அவரை வழிநடத்துவார்,  உறுதுணையாக இருப்பார் என்பதை அவன் நம்பினான்.  உயர்மலையானாலும்  பள்ளதாக்கானாலும் என் ஆத்துமாவின் மேய்ப்ப்பர் என்னை வழிநடுத்துவார்  என்பது அவனுடைய பாடலாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.  அவன் "என்னை நடத்துவாரா?"  என்று கேட்காமல்,  " என்னை எப்படி நடத்துவார்?"  என்று கேட்கிறார்.  நடத்துவார் என்ற வார்த்தை மூல எபிரேய பாஷையில் ஆசா  ( aw-sah) என்றுள்ளது. அதன் பொருள், உண்மையில், மிகவும் ஆழமானது.  அது வெறுமனே நடத்துவதை குறிக்கவில்லை.   அது  உருவாக்குவது, செய்துமுடிப்பது, நேர்த்தியாக வனைவது,  நிறைவேற்றுவது  என்று பல அர்த்தங்களை கொண்ட ஒரு சொல்லாக காணப்படுகிறது.  இன்னொரு விதத்தில் சொன்னால், தாவீது வெறுமனே "தேவன் என்னை எப்படி நடத்துவார்?" என்று சொல்லாமல், "தேவன் என்னை குறித்த காரியத்தை எப்படி நிறைவேற்றுவார்"  என்றே சொல்லியிருப்பார். 

இருள்சூழ்ந்த, ஆழமான பள்ளத்தாக்கின் வழியாக உங்கள் வாழ்க்கை பயணிக்கிறதா? எதிர்காலத்தில் வாழ்க்கை எப்படியிருக்கபோகிறதோ என்ற கேள்வி உங்கள் உள்ளத்தை உருவகுத்துகிறதா?  அப்படியானால் தாவீதின் வாழ்க்கையை சற்றே திரும்பி பாருங்கள்.  அவனுடைய வார்தைகள் விசுவாசத்தை உயிர்ப்பிக்கும் அருமருந்தாகட்டும். கர்த்தர் என் வாழ்கையை அழித்திடமாட்டார்.  மாறாக அவர் விரும்புகிற வண்ணமாக என்னை வனைந்திடுவார். தாவீது தன் ஜீவியகாலமெல்லாம் கெபியில் தங்கவில்லை.   வெளியே வந்து சமஸ்த இஸ்ரவேலின் உன்னத அரசனாக ஆட்சிபுரிந்தான்!  இயேசு கிறிஸ்துவும் பின்நாட்கலில் "தாவீதின் குமாரன்" என்று அழைக்கப்பட்டார்.  பயங்கரங்கள் சூழ்ந்த வனாந்திரத்தில் தேவன் தாவீதை உருவாக்கிக்கொண்டிருந்தார், செதுக்கிக்கொண்டிருந்தார், வனைந்துகொண்டிருந்த்தார்.

அங்கேயும்….
139 சங்கீதத்தின் ஆக்கியோன் தாவீது வாழ்க்கையின் இரண்டு யதார்த்தங்களுக்கு இடையில் ஊஞ்சலாடுகிறார்.  பிரமிக்கதக்க அதிசயமான விதத்தில் தன்னை படைத்த தேவனில் அவன் களிகூர்ந்தாலும் தேவசமூகத்தை விட்டு எங்காவது ஓடிவிடவேண்டும் என்று அவன் சிந்திக்கிறான்.  தேவனுடைய கண்பார்வைக்கு அப்பார்பட்ட ஒரு இடம் இல்லை என்பதை உணருகிறான்.  ஒருவேளை அவன் சந்தித்துவந்த பிரச்சனைகளும், மனதின் அழுத்தங்களும் அவனை மிகவும் வேதனைப்படுத்தி எங்காவது ஒளிந்துகொண்டால் பரவாயில்லை என்று சிந்திக்கதூண்டியிருக்கும்.   ஆனாலும், தேவன் அவனை விட்டபாடில்லை. தேவன் அவனை பின்தொடருகிறார். அவனை கொல்லுவதற்கன்று, அவனை பாதுகாக்க, அவனை உருவாக்க, அவனை உயர்த்திட.  யோசேப்பின் சிறையில், தாவீதின் கெபியில், இயேசுவின் வனாந்திரத்தில் தேவனுடைய வலதுகரம் 'அங்கேயும்' அவர்களுக்கு துணைநின்றது, பாதுகாத்தது, போஷித்தது, உயர்த்தினது. 
வேதாகமம் சொல்லுகிறது, இரட்சிக்கக்கூடாதபடிக்கு தேவனுடைய கரம் குறுகவில்லை.  மனிதனின் முடிவு தேவனின் ஆரம்பம். லாசருவின் மூடப்பட்ட கல்லறை மனிதநம்பிக்கையின் எல்லை.   இயேசுவுக்கோ அது ஒருவரை தூக்கத்திலிருந்து தட்டியெழுப்பும் வேலை.  குளத்தின் அருகே 38 ஆண்டுகள் எழும்ப முடியாமல் கிடந்தவன் நிலை மனிதமுயற்சியின் எல்லை.  இயேசுவுக்கோ அது  தூங்கிக்கிடந்தவனை தூக்கி எழுப்பும் வேலை.  இந்த இயேசுவை அல்லவோ நீங்கள் உங்கள் இருதயத்தில் பெற்றிருக்கிறீர்கள்? ஆம் அல்லவா?  மற்றவர்களுக்கு அவர் எதை செய்திருக்கிறாரோ அதை அவர்  உங்களுக்கு செய்வார்!

பள்ளத்தாக்குகளின் தேவன், மலைகளின் தேவன்
சங்கீதம் 46:1-ல், சங்கீதக்காரன் தேவன் தனக்கு ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணை என்று சொல்கிறார். (எப்போதும் இருக்கும் துணை).  மெய்யாகவே, தேவன் எப்போதும் இருக்கும் துணை மாத்திரமன்று, அவர் எல்லா சூழ்நிலைகளிலும் உதவிடும் துணையாகவும் நமக்கு இருக்கிறார்.  எந்த மனிதனும், எந்த வல்லமையும், எந்த ஆதாரமும், எந்த மருத்துவமும் உதவக்கூடாத இடத்தில் உங்களை இரட்சிக்க அவர் மட்டுமே வருவார்.   நடந்த அல்லது நடக்காத காரியங்களுக்காக மனவேதனைபட்டு மனஅழுத்தம் எனும் ஆழ்கிணற்றிலும், கொடிய பாவத்தின் உளையான சேற்றிலும் அல்லது தேவனுக்கு விரோதமான முரட்டாட்டத்திலும்  நீங்கள் தத்தளிக்கலாம்.  கலிலேயா கடலோரத்தில் பேதுருவை கண்டு என் பின்னே வா என்று அழைத்தவர்,  திபேரிய கடற்கரையில் மறுபடியும் மீன்பிடிக்க சென்றவனுக்கு பின்னாக சென்று அவனை இரண்டாம் தடவை அழைக்கிறார் (யோவான் 21).   அங்கேயும் தேவனுடைய கரம் பேதுருவை நடத்தியது.  பேதுருவை போல் நீங்களும் நானும் உண்மையில் அவருக்கு பின்செல்லவே அழைக்கப்பட்டிருக்கிறோம்.  கதையின் மறுபக்கத்தையும் கேளுங்கள். அவரை பின்தொடரும்  மனநிலை ஒருவேளை உங்களுக்கு இல்லாதது போல் தோன்றினாலும்,  அவர் உங்கள் பின்னே வருவார்.  தன் அழைப்பை துறந்தவனாக பேதுரு கடலை நோக்கி சென்றபோது, கர்த்தர் அவனை கைவிடவில்லை.  மாறாக அவர் பேதுருவை தேடிவந்தார்.  அவனை குற்றம்பிடிக்கவோ, குறைசொல்லவோ வரவில்லை, அவனை உருவாக்கவும் வனையவுமே வந்தார்.  பின்தொடர்ந்தவர் அவனை ஒரு நாளில் மனுஷனை பிடிக்கிறவனாகவே மாற்றினார் அன்றோ!

உங்களை உருவாக்க நடத்துகிறார்
தாவீது தன் வாழ்க்கை முழுக்க பற்பல கேள்விகளை கேட்டிருப்பார்.  நம்முடைய வாழ்க்கையிலும் நமக்கு அநேக கேள்விகள் எழாமல் இல்லை.  எல்லா சமயத்திலும் எல்லா கேள்விகளுக்கும் தேவன் பதிலளிக்கிறதில்லை.  மாறாக அவர் செய்ல்படுகிறார்,  நடத்துகிறார்,  வழிகாட்டுகிறார்.   கேள்விக்கனைகளை விடுப்பதை விட்டுவிட்டு அவரை நாம் நம்பவேண்டும் என்றே தேவன் எதிர்பார்க்கிறார்.  ஞானி சாலொமோன் ஆனாலும் சரி,  உத்தமன் யோபு ஆனாலும் சரி, இவர்களுக்கும் வாழ்க்கையில் பதிலைக் காட்டிலும் கேள்விகளே நிரம்ப இருந்தன.  இவர்களுக்கு பதில் கிடைத்ததா? இல்லை. மாறாக, இவர்கள் சத்தியத்தை பெற்றுக்கொண்டார்கள். சத்தியத்தின் மீது நம்பிக்கை வைத்தார்கள்.

ஏசாயா தீர்க்கத்தரிசன புத்தகத்தில் காணப்படும் மூன்று தீர்க்கத்தரிசன வசனங்களின் அடிப்படையில் தேவன் எப்படி நம்முடைய வாழ்க்கையில் நாம் சந்திக்கும் சிக்கலான பாதைகளில், கடினமான சூழ்நிலைகளில் நம்மை நடத்துகிறார் என்பதை கண்டறியப்போகிறோம்.  ஆம். நம்மில் அநேகருடைய் கேள்வி "ஆகுமா?" என்பதன்று.  "அது எப்படி ஆகும்?" என்பதே.  காபிரியேல் தூதன் மரியாளை சந்தித்தபோது அவள், "தூதனே! நீ பிதற்றுகிறாய். இது சாத்தியமே இல்லை" என்று சொல்லவில்லை. மாறாக அவள் சொன்னது, "நான் ஒரு மனுஷனை அறியேன். இது எப்படி ஆகும்" என்றாள்.  இந்த் வேதவசனங்கள், நமதருமை இரட்சகரும் நம் ஆத்துமாவின் மேயப்பருமானவர், நம்முடைய வாழ்க்கையின் பல்வேறு காலக்கட்டங்களில் நம்மை எப்படி நடத்துவார் என்பதை நமக்கு படம்பிடித்து காட்டுகிறது.
உலகளாவிய பெருந்தொற்றானாலும் சரி, பொருளாதார சீர்குலைவானாலும் சரி,  அவர்(தேவன்) நம்மை நடத்துவார்! ஆமென்.

(a) பெற்றோரை நடத்துவார்: 
மேய்ப்பனைப்போலத் தமது மந்தையை மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார்  (ஏசாயா 40:11)

இந்த மாதத்திற்கும், இனிவரும் நாட்களுக்காகவும் நாம் பகிர்ந்துகொள்ள விரும்பும் முதலாவது வாக்குத்தத்தம் 'தன் மந்தையை அறிவோடும் கனிவோடு நடத்தும் ஒரு நல்ல மேய்யப்பரை போல் உங்களை நடத்துவார்".    தன் மந்தையை நடத்தவேண்டிய விதத்தில் நடத்தும் ஒரு நல்ல மேய்ப்பனின் குணத்தை இந்த வாக்கியம் சித்தரிக்கிறது.  எப்போதும் தம்முடைய கோலையும், தடியையும் பயன்படுத்தி ஆடுக்ளை ஒழுக்கப்படுத்துவதல்ல மேய்ப்பரின் பணி.  அவர் ஆடுகளை போஷிக்கிறார், அவைகள் தம் புயத்தினால் சேர்க்கிறார், தனது மடியில் சுமக்கிறார், கறவலாடுகளை மெதுவாக நடத்துகிறார்.  எபிரேயத்தில் கறவலாடு என்ற வார்த்தையின் பொருள்  குழந்தையை பெற்றெடுத்த, அல்லது குழந்தைக்கு பாலை கொடுக்கின்ற, அல்லது கைக்குழந்தையுடன் கூடிய ஒருவரை காண்பிக்கிறது.  திர்க்கத்தரிசனமாய், அது ஒரு இளம் குடும்பத்தை அல்லது குடும்பத்தை, பிள்ளைகளை கவனிக்கும், பராமரிக்கும் பொறுப்பில் உள்ள பெற்றோரை   குறிப்பிடுகிறது.   அது குடும்பத்தேவைகளுக்காக உழைத்து சம்பாதிக்கும் ஒருவரை சுட்டிக்காட்டுகிறது. இன்றைக்கும் தொழில், வேலைவாய்ப்பு போன்ற எல்லா துறைகளிலும் காணப்படும் அநிச்சயமானது ஒருவேளை உங்கள் குடும்பத்தை கட்டியெழுப்பவே முடியாது என்ற நிலைக்கு உங்களை தள்ளியிருக்கலாம்.  கவலை வேண்டாம்.  நல்ல மேய்ப்பன் இயேசு உங்களை இந்த பாதையின் வழியாக நடத்திசென்று உங்கள் தேவைகளை சந்திப்பார்.  அவர் உங்களை மெதுவாக நடத்துவார்!  

(b) பார்வையற்றவரை நடத்துவார்:
குருடரை அவர்கள் அறியாத வழியிலே நடத்தி, அவர்களுக்குத் தெரியாத பாதைகளில் அவர்களை அழைத்துக்கொண்டு வந்து, அவர்களுக்கு முன்பாக இருளை வெளிச்சமும், கோணலைச் செவ்வையுமாக்குவேன்; இந்தக் காரியங்களை நான் அவர்களுக்குச் செய்து, அவர்களைக் கைவிடாதிருப்பேன். (ஏசாயா 42:16)

அடைக்கப்பட்ட கதவுகள்,  முடங்கிபோன வாய்ப்புகள், திறக்கப்படாத திட்டங்கள். இந்த ஆண்டின் தொடக்கத்தில் நம்முடைய வேலை, நம்முடைய தொழில், நம்முடைய எதிர்காலத்தை பற்றி நாம் ஆலோசித்த திட்டங்கள் ஒவ்வொன்றும் தவிடுபொடியாக மாறிவிட்டன.   நல்ல வேலை, கைநிறைய சம்பளம் என்ற நிலையில் இருந்தவர்கள் தவனையில் வீட்டை, வாகனத்தை வாங்க திட்டமிட்டிருந்தனர். சிலர் தவனைமுறையில் கடனையும் வாங்கினார்கள்.  ஆனால் இப்போதும், தீடீரென்று, யாரும் எதிர்பாராத நிலையில், கடலின் நடுவில் வீசும் புயல்காற்றினால் படகு தத்தளிக்கிறது.  நான் எப்படி தண்டுவலிப்பேன்? எப்படி கரை சேருவேன்? எனக்கு என்னவாகும்?  பயணத்திலிருந்து இப்போது பின்வாங்கவும் முடியாது.  எல்லாமே இருளாய் தோன்றுகிறது.   எல்லாமே மங்கலாகி விட்டது.  ஆனால் தேவனுடைய வார்த்தை சொல்லுவது என்னவென்றால், நீங்கள் எந்த வ்ழியே போகவேண்டும் என்று அறியாதிருக்கையில், நம்முடைய நல்ல தேவன், அன்பான மேய்ப்பர் "பார்க்கமுடியாதவர்களை" அவர்கள் அறியாத வழிகளில் நடத்துவார்.  ஒருவேளை சமீபத்திய இழப்புகள் (உடல், உறவு, பொருளாதார) உங்கள் வாழ்க்கையின் ஓட்டத்தில் ஒரு பெரும் தொய்வை கொண்டுவந்திருக்கக்கூடும்.  ஆனாலும், பாதையே இல்லாத இடத்தில் தேவன் ஒரு பாதையை உண்டுபண்ணுவார். அவர் குருடர்களை அவர்கள் அறியாத வழிகளில் நிச்சயமாக நடத்துவார்!

(c) பெலவீனரை நடத்துவார்
அவர்கள் வழிகளை நான் பார்த்து, அவர்களைக் குணமாக்குவேன்; அவர்களை நடத்தி, திரும்பவும் அவர்களுக்கும் அவர்களிலே துக்கப்படுகிறவர்களுக்கும் ஆறுதல் அளிப்பேன். (ஏசாயா 57:18)
  
ஒருவர் சரீரம் அல்லது மனது,  இவ்விரண்டிலும் பெலவீனப்படலாம்.  பல சமயங்களில்,  சரீர பெலவீனத்தை அடையாளங்கண்டு அதை சுகப்படுத்துவது சுலபம்.   ஆனால், மனோவியாதியை குணப்படுத்துவது, அவ்வளவு எளிதன்று.   இதில் ஒரு வருத்தமான உண்மை என்னவென்றால், மனோதுக்கம், மனபாரம்,  மன அழுத்தம் கொண்டவர்கள் எளிதில் உடல்ரீதியாகவும் பெலவீனமடைவார்கள்.   அதே சமயம்,  ஒருவர் மனோவலிமை, மனோதைரியம (அல்லது ஆவியில் பெலன்) கொண்டவராக இருந்தால், அவரால் வியாதி பெலவீனங்களை எளிதில் வெல்லமுடியும்.  இந்த பெருந்தொற்றின் நாட்களிலும், பயம் எனும் வைரஸ் கண்ணுக்கு மறைவான கொரோனா வைரஸை காட்டிலும் அதி தீவிரமாக பரவி மக்களை பாதிக்கசெய்கிறது.   ஆனாலும், வியாதி பெலவீனம் சில குடும்பங்களை தாக்குகிறது, சில நீதிபரர்களை பதம்பார்க்கிறது.  அவர்களும் வியாதிப்பட்டு வாடிப்போகிறார்கள்.   எல்லா வியாதியையும் நாம் தேவனுடைய தண்டனை அல்லது நியாய்த்தீர்ப்பு என்று எடுக்கமுடியாது.   எல்லா வியாதியையும் நம்முடைய உடல்ரீதியான  பெலவீனம் என்று எடுக்கமுடியாது.  யோபின் விஷயத்தில்,  சாத்தான் தேவனிடம் அனுமதிபெற்று வியாதியினால் அவனை வருத்தினான்.  அது யோபுவை சோதித்து அவனை பொன்னாக விளங்கப்பண்ணுவதற்கு அனுப்பபட்ட வியாதி. பல சமயங்களில், வியாதி நம்முடைய பாவத்தினாலும் விளையக்கூடும்.  பாவம் சாபத்தையும் வியாதியையும் கொண்டுவரும்.  வேதம் சொல்லுகிறது, "இயேசுவானவர் நம்முடைய பாவங்களையும் வியாதியையும் தம் மேல் ஏற்றுக்கொண்டார்.  அவருடைய தழும்புகளால் நாம் குணமானோம்".   சில சமயம், நம்மை வருத்தப்படுத்தும் வியாதி மற்றும் பெலவீனங்களை தேவன் அனுமதிப்பார்.  அவைகள் நம்மை அழிப்பதற்கல்ல, உருவாக்கவே.  நாம், முழுமனதோடு, கண்ணீரோடு, மனந்திரும்பதலோடு திரும்பினால் அவர் மெய்யாகவே நம்மை குணப்படுத்தி நமக்கும் நம்மை சார்ந்துள்ள மக்களுக்கும் சுகத்தையும்,  ஆறுதலையும் தருவார்.
நித்தமும் நடத்துவார்
கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய் (ஏசாயா 58:11)
கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய் (ஏசாயா 58:11)
சிங்காசனத்தின் மத்தியிலிருக்கிற ஆட்டுக்குட்டியானவரே இவர்களை மேய்த்து, இவர்களை ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்; தேவன்தாமே இவர்களுடைய கண்ணீர் யாவையும் துடைப்பார் என்றான் (வெளி 7:17)
ஒருவேளை இதை வாசிக்கும் நீங்கள் தேவைகளை சந்திக்கமுடியாமல், வியாதிபெலவீனத்திலிருந்து மீளமுடியாமல், நாளைய தினத்தை எப்படி சந்திக்கபோகிறோமோ என்ற யோசனையில்லாமல் போராடிக்கொண்டிருக்கலாம்.   உங்களுக்கான கர்த்தருடைய வார்த்தை *நான் உன்னை நடத்துவேன்"*  ஆமென்.   குறைவிலும்,  வியாதியிலும், இருளிலும் அவர் உங்களை மெதுவாக நடத்துவார், அவர் உங்களை அறியாத வழியில் நடத்துவார், அவர்  உங்களை குணமாக்கி ஆறுதல்படுத்துவார்.
ஆண்டவரகிய இயேசு உங்களை நித்தமும் நடத்துவார்,  ஜீவத்தண்ணீருள்ள ஊற்றுகளண்டைக்கு நடத்துவார்;  அல்லேலூயா! இதுவே உங்களுக்கு கர்த்தருடைய வாக்குத்தத்தம்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
கர்த்தருடைய பணியில்

வினோத் குமார்
தேவநிழல் ஊழியங்கள்
9840011374, 9840995057

No comments:

Post a Comment

I WILL COME | PROMISE | GOD'S SHADOW MINISTRIES | MARCH 2025

  I WILL COME AND HEAL HIM PROMISE | MARCH 2025 Mat hew 8:7   And Jesus saith unto him, I will come and heal him   Dearly beloved...