Wednesday, September 30, 2020

கிருபையுண்டாவதாக, கிருபையுண்டாவதாக | தேவநிழல் வாக்குத்தத்த வார்த்தை | அக்டோபர் 2020


கிருபையுண்டாவதாக, கிருபையுண்டாவதாக …


பெரிய பர்வதமே, நீ எம்மாத்திரம்? செருபாபேலுக்கு முன்பாக நீ சமபூமியாவாய்; தலைக்கல்லை அவன் கொண்டுவருவான்; அதற்குக் கிருபையுண்டாவதாக, கிருபையுண்டாவதாக என்று ஆர்ப்பரிப்பார்கள் என்றார்(சகரியா 4:7) 


செப்டம்பர் மாதத்தில் யூதர்கள் ரோஷ் ஹஷானா  என்ற பண்டிகையை கொண்டாடினார்கள்.  ரோஷ் ஹஷானா உலகம் படைக்கப்பட்டதை நினைவுகூறும் ஒரு பண்டிகை.  அது  ஒரு சுயபரிசோதனை மற்றும் மனந்திரும்புதலுக்கான ஒரு பருவத்தின் ஆரம்பமாகவும் அனுசரிக்கப்படுகிறது.  இந்த நாட்கள் யோம் கீப்பூர்  அல்லது பாவநிவிர்த்தியின் நாள் என்ற விடுமுறையில் நிறைவடைகிறது.    ஒரு வகையில்,  இது ஒரு புதிய ஆரம்பத்தின், புதிய மாற்றத்தின், புதிய தோற்றத்தை குறிக்கும் ஒரு காலமாகவே கருதப்படுகிறது.


அக்டோபர் மாதத்தின் ஆரம்பமும் நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையில் புது ஆசீகளையும், புது திருப்புமுனைகளையும், புது வாய்ப்புகளையும் ஏற்படுத்தவேண்டும் என்றே வேண்டிக்கொள்கிறேன். நம்முடைய தேவன் படைப்பின் தேவன்.   இந்த புதிய மாதத்திலும்,  அவர் புதிய காரியங்களை தோற்றுவிப்பார்,  புதிய வாசல்களை திறப்பார் என்பதில் சந்தேகமில்லை.  அல்லேலூயா! 

தரிசனமும், பாரமும்  

வரலாற்றில், இஸ்ரவேல் எனும் தேசம் திரும்ப திரும்ப அயல்நாட்டவர்களால் சிறைபிடிக்கப்பட்டது,   தேவாலயம் இடிக்கப்பட்டது, பட்டணங்கள் தரைமட்டமானது  அலங்கங்களும் தகர்கப்பட்டன.. தானியேல், எஸ்றா, நெகேமியா, செருபாபேல் மற்றும் தீர்க்கத்தரிசிகள் சகரியா மற்றும் ஆகாய் போன்றவர்கள் தேசத்தையும் அதன் நினைவிடங்களையும் திரும்ப எழுப்புவதில் மும்முரம்  காட்டினர்.  இவர்கள் எல்லாரும் தேசத்தின் விடுதலை, ஆலயத்தின் மீட்பு, அலங்கத்தின் சீரமைப்பு போன்றவைகளை மிகவும் வாஞ்சித்தனர், ஜெபித்தனர், மற்றும் பிரயாசப்பட்டனர்.

செருபாபேலுக்கு முன்பாக

செருபாபேல் என்ற வார்த்தையின் பொருள் ’பாபிலோனுக்கு சிதறிப்போனவன்'   அல்லது குழப்பத்திற்கு சிதறிப்போனவன்'. சிறையிருப்பிலிருந்து  விடுதலைபெற்ற  முதல் கூட்டத்திற்கு தலைமையேற்ற  செருபாபேல் ஒரு யூத தலைவனாக அறியப்பட்டிருந்தான்.  எதிரிகளின் எதிர்ப்புகளால் தன் முனைப்பினை இழந்தவன் தன் பணியை முடிக்காமல் சோர்ந்துபோகிறான். ஆனால், பல ஆண்டுகள்  கழித்து, தீர்க்கத்தரிசிகளால் உற்சாகப்படுத்தப்படுத்தப்பட்டு அவன் ஆலயத்தை கட்டிமுடிக்கிறான்.  தனக்கு கொடுக்கப்பட்ட மாபெரும் பணியில் பெலவீனபட்டு தளர்ந்திட்ட செருபாபேல் நம்பிக்கையிழந்தவனாய் இருந்திருப்பான்.   ஆனாலும், அவனுடைய குறைவினை ஒரு பொருட்டாக எண்ணாமல், தேவன் தம் பணியை அவரைக் கொண்டே செய்துமுடித்தார். தெய்வீக அக்கினியால் அவருடைய ஆவியை கொழுந்துவிட்டு எறிந்தது, பரிசுத்த ஆவியானவரின்  கிருபை அவரை மூடியது.   தேவ கிருபையால் அலங்கரிக்கப்பட்ட பெலவீனன் பெரிய பர்வதமாய் தோன்றின பணியை செவ்வனே செய்து முடித்திட்டான்.

வெற்றியின் இரகசியம்

செருபாபேலை போன்று நீங்களும் நானும் ஒரு கட்டிட பணிக்கென்று அழைக்கப்பட்டுள்ளோம்ஆலயத்தை கட்டும் பணியன்று, நம்முடைய  வாழ்க்கையை, மக்களின் வாழ்க்கையை கட்டும் பணி (1 தெச5:11).   என் சபையை கட்டுகிறேன் என்று பேதுருவிடம் சொன்ன இயேசு, அந்த பணியை நிறைவேற்றும் பொறுப்பினை தம் சீடர்களுக்கு பகிர்ந்தளித்தார்.   செருபாபேலின் கதை மக்களின் வாழ்க்கையை கட்டும் பணியில் உள்ள நமக்கு நமக்கு பல்வேறு வாழ்க்கை தத்துவங்களை போதிக்கிறது.  இந்த தியானத்தின் மூலம், சகரியா 4-ஆம் அதிகாரத்திலிருந்து நம்முடைய வாழ்க்கை மாற்றத்திற்கான ஒரு சில தீர்க்கத்தரிசன பாடங்களை  உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.   ஜெபத்துடன்,  இந்த செய்தியை வாசியுங்கள்.  பரிசுத்த ஆவியானவர் உங்களுடன் இடைபட, உங்களை உருமாற்ற, உங்களிடன் பேச இடங்கொடுங்கள். 

1. ஒரு மனிதன்

அப்பொழுது அவர்: செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் (சகரியா 4:6)

செருபாபேல் தாவீதை போன்று ஒரு பெரிய யுத்தவீரனாகவோ, சாலொமோனை போன்ற ஒரு ஞானியாகவோ அறியப்படவில்லை. அவன் ஒரு சாமானியன்.   சாதாரண மனிதர்களை அசாதாரணமான காரியங்களை செய்யும்படி தெரிந்தெடுத்து உருவாக்குவதே தேவனின்  பிரதான பணியாக இருந்துவந்துள்ளது.  மோசே, சாமுவேல், கிதியோன், பேதுரு, தோமா போன்றவர்கள் நமக்கு ஒரு முன்னுதாரணம்.  இவர்கள் தேவனுக்கு பெரிய காரியங்களை சாதித்தார்கள்.  ஒரு பெற்றோனாக, ஒரு தொழிலதிபனாக, ஒரு குடும்பத்தலைவனாக,  ஒரு ஊழியக்காரனாக நீங்களும் செருபாபேலின் நிலையில் காணப்படலாம்.  

தான் ஆரம்பித்ததை அவர்களால் முடிக்கமுடியவில்லை.   ஒருவேளை உங்கள் குடும்பத்திலும், நீங்கள் ஆரம்பித்த  பணி அல்லது நீங்கள் செய்ய நினைத்த ஒரு வேலை அல்லது நீங்கள் கட்டியெழுப்பும்படி விரும்பின ஒரு  காரியம் இப்போது அரைகுறையாக   அலங்கோலமான விடப்பட்டிருக்கலாம்.   நினைத்த வண்ணம் முன்னறாததினால் ஒரு வெறுப்பு, விரக்தி, ஏமாற்றம், எரிச்சல் உங்கள் வாழ்க்கை நிரப்பியுள்ளதா? பல நூறு ஆண்டுகளுக்கு முன் செருபாபேலுக்கு வந்த வார்த்தை இப்பொழுது உங்களிடமாய் வருகிறது.  கட்டிமுடிக்கும்படி தேவன் தெரிந்தெடுத்த ஆண்;  தேவன் தெரிந்தெடுத்த பெண் நீங்களே! அவருடைய அழைப்பு மாறுவதில்லை!

2. ஒரு நோக்கம்

செருபாபேலின் கைகள் இந்த ஆலயத்துக்கு அஸ்திபாரம்போட்டது; அவன் கைகளே இதை முடித்துத் தீர்க்கும்; அதினால் சேனைகளின் கர்த்தர் என்னை உங்களிடத்திற்கு அனுப்பினாரென்று அறிவாய் (சகரியா 4:9)

நம்முடைய விசுவாச வாழ்க்கையோ, குடும்ப உறவோ,  ஆரவாரத்துடன் ஆரம்பித்த பயணம் நடுவழியில், நடுக்கடலில் சிக்கி தத்தளிக்கிறது.  திருமணம், வேலை, தொழில் அல்லது வேறு எந்த காரியாமாயினும் நாம் எடுத்த தீர்மானம் சரிதானா? இது தேவனுடைய பரிபூரண சித்தம் தானா?  இது தேவன் அனுமதித்த ஒன்றோ? அனுப்பட்ட செருபாபேல் தோல்வியை சந்தித்தாலும், தேவன் அந்த பணிக்கு வேறொரு நபரை தெரிந்தெடுக்கவில்லை. செருபாபேலின் கைகள் இந்த ஆலயத்துக்கு அஸ்திபாரம்போட்டது; அவன் கைகளே இதை முடித்துத் தீர்க்கும்" என்று ஆண்டவர் சொன்னார்.  அது அவருடைய மனவிருப்பமன்று.  அவருடைய தீர்மானம். அவருடைய குரல்.   இஸ்ரவேலை மீட்கவேண்டும் என்று தேவன் மோசேயின் மீது வைத்த நோக்கம் அவன் மீதியானுக்கு சென்றாலும்  அவனை பின்தொடர்ந்தது.   மனுஷர்களை பிடிக்கிறவனாக மாறவேண்டும் என்ற பேதுருவின் அழைப்பு  அவனுடைய மறுதலிப்பினால் மாறவில்லை.    ஒருவேளை நீங்கள் இன்று இந்த காரியத்திற்கு நான் தகுதியானவன் (ள்) இல்லை என்று நினைக்கலாம்.  திடன்கொள்ளுங்கள்! உங்களை அழைத்தவர் உண்மையுள்ளவர்.  அதனை நிறைவேற்ற அவரே உதவிடுவார்! உங்கள் கைகளே அதனை முடித்து தீர்க்கும்! 

3. ஒரு திட்டம்

பெரிய பர்வதமே, நீ எம்மாத்திரம்? செருபாபேலுக்கு முன்பாக நீ சமபூமியாவாய்; தலைக்கல்லை அவன் கொண்டுவருவான்; அதற்குக் கிருபையுண்டாவதாக, கிருபையுண்டாவதாக என்று ஆர்ப்பரிப்பார்கள் என்றார் (சகரியா 4:7)

பர்வதம், உவமானமாக, கையில் இருக்கும் ஒரு பெரிய வேலையை காண்பிக்கிறது.  செருபாபேலுக்கு முன்பாக அது சமபூமியாகும் என்று தீர்க்கன் உரைக்கிறான்.  ஆனால் அவன் ஒரு தயங்கிநின்ற தலைவன் தானே?   எதிர்ப்புகளை எதிர்கொள்ளமுடியாமல் தத்தளித்தவன் தானே?   அவனை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்பதல்ல! அவன் தன்னை தானே எப்படி பார்க்கிறான் என்பதுமல்ல!   தேவன் அவனை எவ்வாறு பார்க்கிறார் என்பதே காரியம்!  தேவனுடைய தரிசனமே முக்கியமானது.  தேவன் கானான் தேசத்தை இஸ்ரவேலரிடம் ஒப்புக்கொடுத்தார்.  அவர்கள் அதை சுதந்தரிக்கவேண்டும்.  வேவுபார்க்க சென்றவர்கள் அங்கிருந்த இராட்சதரை கண்டு  தங்களை வெட்டுக்கிளிகளாகவே  பாவித்தனர்.  காலேப் மற்றும் யோசுவாவின் பார்வை வேறுவிதமாக இருந்தது.  ராஜா சவுல் மற்றும்  இராணுவத்திற்கு கோலியாத் ஒரு  அசைக்கமுடியாத  ஆபத்தாக தோன்றினான்.  ஆட்டுமேய்ப்பன் தாவீதுக்கு அவன் ஒரு கொசுவாகவே தெரிந்தான்.   தாவீதினிடத்தில் இருந்த ஆயதம்  எது? கவனும் சில கூழாங்கற்களும்.  இப்போதும் செருபாபேல் ஆலயத்தை திரும்ப கட்டும்படி வருகிறார். ஆனால் அவர் கையில்  வரைபடமோ,  சேனையோ, நிபுணர்களோ இருப்பதாக தெரியவில்லை.   கையில் இருப்பது ஒரு தலைக்கல் மட்டுமே.  இந்த தலைக்கலை கொண்டுவந்து அவன் ஆலயத்தையும் கட்டவேண்டும், பர்வதங்களையும் சமபூமியாக்கவேண்டும்.  கிறிஸ்துவின்மேல் நீங்கள் வைத்துள்ள விசுவாசம்.  கிறிஸ்துவுக்குள் உங்கள் அடையாளம்.   கிறிஸ்துவுக்குள் உங்கள் ஜீவன். இதுவே உங்களுடைய தலைக்கல்.  சகோதரனே! சகோதரியே! முன்னேறு!  இது முன்னேறும் நாள்!  உன் கையில் இருக்கும் தலைக்கல்லுடன் முன்னேறு.  உனக்கு முன் காணப்படும் பர்வதங்கள் அனைத்தும் சம்பூமியாகும்! அல்லேலூயா!

4. ஒரு ஆற்றல்  

அப்பொழுது அவர்: செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் (சகரியா 4:6) 

ஆவி என்கின்ற வார்த்தை எபிரேயத்தில் ரூவாக் என்று அறியப்படுகிறது.  ரூவாக் என்றால் சுவாசம்   அல்லது ஜீவன் ஆகும்.  பொதுவாகவே பழைய மற்றும் புதிய ஏற்பாட்டில் "தேவனுடைய ஆவி" என்றாலே அது ஒரு மாபெரும் சக்தியாக, உருவாக்கும் மற்றும் அழிக்கும் தன்மையை கொண்ட ஒரு ஆற்றல் என்று கருதப்படுகிறது.  தேவஆவியால் நிரம்பின் சிம்சோன் ஒரு கட்டிடத்தை நிர்மூலமாக்கியது, பெந்தேகோஸ்தே நாளன்று சீடர்கள் நிரப்பட்டபோது நடந்த இயற்கைக்கு மேலாநிகழ்வுகள் அதற்கான எடுத்துக்காட்டுகள்.  அதே சமயம்,  தேவ ஆவி என்ற வார்த்தைக்கு இன்னொரு ஆழமான பொருளும் முக்கியத்துவமும் உண்டு.  நாம் நம்முடைய அறிவை, செல்வத்தை, அனுபவத்தை, ஞானத்தை, புயபெலத்தை, ஆள்பெலத்தை கொண்டு காரியங்களை சாதிக்க நினைக்கிறோம். பலசமயங்களில் பிரச்சனைக்கான தீர்வு நாம் எதிர்பார்க்கும் வகையில், விதத்தில் தோன்றுவதில்லை.  வலிமை மிகுந்த எதிரிபடைகளுக்கு எதிராக யோசேபாத்தின் சிறு சேனை போர்முனையில் நிற்கவேண்டும். ஆனால் அவர்கள் போர் செய்து வெற்றிக்கனி பறிக்கவில்லை. போர்களத்தில் பாடகர்கள் பாடுகையில் எதிரிகள் மடிந்தனர்.   பவுலும் சீலாவும் கட்டப்ப்பட்ட சிறைக்கைதிகளாக பாடித் துதித்தபோது சங்கிலிகள் முறிந்து  சிறைக்கதவுகள் திறவுண்டன.  ஆவி ஒரு இயற்கைக்கு மேலான ஒரு வல்லமை, ஒரு ஆற்றல் மட்டுமன்று.   அது நமக்குள் காணப்படவேண்டிய மலைகளை பெயர்க்கும் கிறிஸ்துவின் ஜீவன், கிறிஸ்துவின் தன்மையுமாகும்.  தீர்க்கத்தரிசி ஏசாயா ஆண்டவர் இயேசுவைப் பற்றி குறிப்பிட்ட தீர்க்கத்தரிசன வார்த்தையில் இதனை மிகவும் தெளிவாக்குகிறார்.  "இதோ, நான் தெரிந்துகொண்ட என்னுடைய தாசன், என் ஆத்துமாவுக்குப் பிரியமாயிருக்கிற என்னுடைய நேசன்; என் ஆவியை அவர்மேல் அமரப்பண்ணுவேன், அவர் புறஜாதியாருக்கு நியாயத்தை அறிவிப்பார். வாக்குவாதம் செய்யவுமாட்டார், கூக்குரலிடவுமாட்டார்; அவருடைய சத்தத்தை ஒருவனும் வீதிகளில் கேட்பதுமில்லை. அவர் நியாயத்திற்கு  ஜெயங்கிடைக்கப்பண்ணுகிறவரைக்கும், நெரிந்தநாணலை முறிக்காமலும், மங்கி எரிகிற திரியை அணைக்காமலும் இருப்பார். அவருடைய நாமத்தின்மேல் புறஜாதியார் நம்பிக்கையாயிருப்பார்கள் என்பதே

பாவத்தை மேற்கொள்ளவும், பிசாசினை அழிக்கவும் இந்த ஆவியியே நமக்கு உதவுகிறது. இந்த ஆவியில் நிரம்பியிருந்த செருபாபேல் தான் ஆலயத்தை திரும்பகட்டினான். நீங்களும் நானும் எந்த 

சமயத்திலும் வாழ்க்கையை, ஊழியத்தை, குடும்பத்தை, தொழிலை திரும்பவும் கட்ட நாம் தேவனுடைய ஆவி, தேவனுடைய ஜீவன், தேவனுடைய நோக்கத்தால் நிரம்பியிருக்கவேண்டும்.

5. ஒரு செய்தி

அற்பமான ஆரம்பத்தின் நாளை யார் அசட்டைபண்ணலாம்? பூமியெங்கும் சுற்றிப்பார்க்கிறவைகளாகிய கர்த்தருடைய ஏழு கண்களும் செருபாபேலின் கையில் இருக்கிற தூக்குநூலைச் சந்தோஷமாய்ப் பார்க்கிறது என்றார்.(சகரியா 4:10)

தூக்குநூல் என்பது பொதுவாக ஒரு கட்டிடத்தின் அமைப்பு, அதன் அளவீடுகள்  சரியாக உள்ளனவா என்று கணிப்பதற்கு பயன்படுத்தப்படும் ஒரு கருவி.   தேவன் நோவாவிடம் ஒரு பேழையை கட்டச் சொன்னபோது,  அதன் அளவீடுகளை தெரிந்தெடுக்கும் பொறுப்பினை  நோவாவிடம் தேவன் விட்டுவிடவில்லை.   எப்படி கட்டவேண்டும் என்ற எல்லா விவரத்தையும் அவர் குறிப்பிட்டார்.  ஆசரிப்பு கூடாரத்தை கட்ட தேவன் மோசேயிடம் சொன்னபோது,  அதற்கான விளக்கமான ஒரு வரைபடத்தையும் மோசேயிடம் தேவன் கொடுத்தார் என்பதையும் நாம் அறிவோம்.   சொல்லப்போனால், பரலோகத்தில் காண்பிக்கப்பட்ட மாதிரியின்படியே மோசே கட்டின பின்பே தேவனுடைய ஷெகினா மகிமை அதன்மேல் வந்து இறங்கிற்று.  தேவனுடைய அளவுகோள் தேவனுடைய தரத்தை காண்பிக்கிறது.   எது தேவனுடைய தரம் அல்லது அளவு?  அது கிருபை.  பழைய உடன்படிக்கையின் கீழ் இருந்தவர்கள் பலிகளை செலுத்தி நியாயப்பிரமாணத்தை கைகொள்ள முயற்சித்தார்கள்.  ஆனாலும் அவர்களுடைய பலிகள் தேவனை திருப்திப்படுத்தவில்லை  என்பதை புரிந்துகொள்ள தவறினார்கள்.  அவர் பலியை அல்ல இரக்கத்தை நாடினார் (மத்தேயு 9:13).    நாம் கிருபையினாலே விசுவாசத்தை கொண்டு இரட்சிக்கப்பட்டோம்.   வேறுபடுத்தியது வல்லமையன்று, தேவனுடைய ஆவி.   அவர்களுக்கு துணைபுரிந்ததது தலைக்கல் அன்று, கிருபை. 

விசுவாசம், வல்லமை, விட்டுக்கொடுத்தல் (மாற்கு 11:20-25)

அத்திமரம் கனிகொடாததினால் அதனை இயேசுவானவர் சபித்தார்.  மரம் வேரோடு பட்டுப்போனது. அது விசுவாச வார்த்தையை பேசுவதை குறித்த ஒரு செயல்முறை பாடம்.  சந்தேகப்படாமல் ஒரு மலையை பார்த்து "நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ" என்று சொன்னால் , அது அப்படியே ஆகும். என்று இயேசு சொன்னார்.  விசுவாச வார்த்தை அவ்வளவு வல்லமை வாய்ந்தது.   அதே பகுதியில் இயேசு விசுவாச ஜெபத்தை குறித்தும் பேசினார்.  அதற்கான நிபந்தனை என்னவென்றால், நாம் பிறரை மன்னிக்கவேண்டும் அல்லது மற்றவர்களுக்கு விட்டுக்கொடுத்து அனுசரித்துபோகவேண்டும்.  ஆழ்மனதிலே காயங்களையும், கசப்புகளையும் சுமந்துகொண்டே வாழ்க்கையை கழித்திடாமல் மன்னித்து மறக்கவேண்டும்.   மன்னித்தல் கிருபையின் கிரியையாக வெளிப்படுகிறது.   இங்கே இயேசுவானவர்  மன்னிப்பை அளிப்பது மற்றும் மன்றாட்டுக்கான பதிலை பெறுவது, இவ்விரண்டிற்கும் இடையில் காணப்படும் அழகான தொடர்பினை நமக்கு சுட்டிக்காட்டுகிறார். பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினால் மலைகள் சமபூமியாகும். அதேசமயம் ஒரு ஆலயம் கட்டி எழுப்பப்படவேண்டுமானால்,  செருபாபேல் தலைக்கல்லை கொண்டுவரவேண்டும், மக்கள் கிருபை உண்டாவதாக, கிருபை உண்டாவதாக என்று ஆர்ப்பரிக்கவேண்டும். எதிரியை நீங்கள் பரிசுத்த ஆவியின் வல்லமையால் அழித்திடமுடியும்.  ஆனால் கட்டுவதற்கு, உங்கள் வாழ்க்கையை திரும்ப கட்டுவதற்கு, மற்றவர்களின் வாழ்க்கையை திரும்ப கட்டுவதற்கு நமக்கு கிருபை தேவை தலைக்கல்லை பார்த்து நாம் கிருபை உண்டாவதாக, கிருபை உண்டாவதாக என்று சொல்லவேண்டும். 

முன்னொரு காலத்தில் நம்பிக்கையிழந்த செருபாபேல், பரிசுத்த ஆவியில் நிரம்பி (கிறிஸ்துவின் ஜீவன்) கிருபையினால் பெலன் கொண்டு (கிறிஸ்துவின் அன்பு) தேவனுடைய ஆலயத்தை கட்டிமுடித்தான் (மனிதனுடைய வாழ்க்கை). உங்களுக்கு முன்பாக நிற்கும் மலை எது? பொருளாதார குறைவா? குடும்ப உறவில் விரிசலா?  குன்றும் ஆரோக்கியமா?   அல்லது தொய்ந்துபோன தொழிலா?  எதுவாக இருந்தாலும் சரி, தேவனுடைய ஆவிக்கு முன்பாக அது சமபூமியாகும். தேவனுடைய கிருபையினால் ஆலயம் கட்டப்படும்.  ஆமென்!

செருபாபாலே எழும்பிடு! நீ கட்டும்படி அழைக்கப்பட்டாய்!  கல்லால், மண்ணால்  கட்டப்பட்ட கட்டிடமன்று.  கிருபையினால் எழும்பப்படும் கட்டிடம்! பெரிய பர்வதமே, நீ எம்மாத்திரம், செருபாபேலுக்கு முன்பாக நீ சமபூமியாவாய்!

ஆமென்!


கிறிஸ்துவுக்குள் உங்கள் அன்பான சகோதரன், 


வினோத் குமார்

தேவநிழல் ஊழியங்கள் 

9840011374, 9840995057

No comments:

Post a Comment

I WILL COME | PROMISE | GOD'S SHADOW MINISTRIES | MARCH 2025

  I WILL COME AND HEAL HIM PROMISE | MARCH 2025 Mat hew 8:7   And Jesus saith unto him, I will come and heal him   Dearly beloved...