யாவேயின் நல்ல திட்டம்
வாக்குத்தத்தம் ஆகஸ்ட்
2021
கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்; அவருடைய ஆத்துமா தன்னைக் குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது, அவர் தமது சந்ததியைக் கண்டு, நீடித்தநாளாயிருப்பார், கர்த்தருக்குச் சித்தமானது அவர் கையினால் வாய்க்கும் (ஏசாயா 53:10)
காவல்நிலையத்தின் மூடப்பட்ட கதவுகளுக்கு பின்னால் நடக்கும் ஒரு காட்சி அல்லது ஒரு அவலத்தை நாம் அடிக்கடியாக கேள்விப்படுவதுண்டு. புலன்விசாரனையில் உண்மையை கண்டறிய குற்றஞ்சாட்டப்பட்ட நபர்காவலர்களால் அடித்து, துன்புறுத்தப்பட்டு சித்திரவதை செய்யப்படும் வழக்கம் இன்றும் காணப்படுகிறது. அத்தகைய செயல்முறை மனிதஉரிமை ஆர்வலர்களால் தொடர்ந்து கண்டிக்கப்பட்டு, கேள்விக் கேட்கப்பட்டுவந்தாலும், சில சமயங்களில், பலே குற்றவாளிகளிடமிருந்து உண்மையை வெளியே கொண்டுவர இந்த வழி தவிர்க்கமுடியாத ஒன்றாகவும் தோன்றுகிறது. நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒருவர் ஒரு குற்றத்தில் ஈடுபட்டிருந்தால், சட்டத்திற்கு முன்பாக அவர் அதனை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளிக்கவேண்டும். ஒருவேளை தனக்கும் அந்த குற்றத்திற்கும் சம்பந்தமில்லை என்று அவர் சாதித்தால், காவலதிகாரிகள் தங்கள் பலத்தை, பிற வழிமுறைகளை பிரயோகித்து உண்மையை கக்கவைப்பார்கள். வலிவேதனையை பொறுக்கமுடியாமல் குற்றஞ்சாட்டப்பட்டவர் குற்றத்தை ஒப்புக்கொள்வார். ஆனால், இவைகள் குற்றமே செய்யாத ஒரு நிரபராதிக்கு நேரிடுமானால், அது மிகவும் கொடுமையானது. அப்படிப்பட்ட நபரும், ஒரு கட்டத்தில், தான் குற்றமே செய்யாவிட்டாலும், போலிஸ் அடியை தாங்கமுடியாமல் தானே செய்ததாக அதனை ஒப்புக்கொள்வார்!
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த ஒரு சம்பவம். குற்றஞ்சாட்டப்பட்ட நபர் உண்மையில் ஒரு நிரபராதி என்றாலும், பொய்யான வழக்கை எதிர்கொள்ளும் சக்தி அவருக்கிருந்தாலும், அவர் தண்டனையை எந்த எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொண்டார். இப்படலத்தில், அவர் உடல்ரீதியாக மிகவும் துன்புறுத்தப்பட்டார், காயப்பட்டார், சிறுமையை அனுபவித்தார். செய்யாத குற்றத்திற்கு வருந்தவும் செய்தார். அவர் குற்றவாளி என்பதால் பாடுகளை, தண்டனையை ஏற்றுக்கொள்ளவில்லை. உண்மை குற்றவாளிகளை விடுவிக்கவே அவர் அப்படி செய்தார்? வினோதமாக உள்ளதல்லவா?! சரி, ஏன் அவர் அப்படி செய்யவேண்டும்?
திட்டங்கள் அல்லது அதனுடைய
வெற்றிகரமான நிறைவேறுதலைக் குறித்து நாம் யோசிக்கும்போதெல்லாம் இரண்டு வேதவாக்கியங்கள்
என் நினைவிற்கு வருகிறது. சங்கீதம் 1:3 மற்றும் எரேமியா 29:11. முந்தைய
வசனம், கர்த்தருடைய வேதத்தை எவன் தன் இருதயத்தில் மறைத்து வைக்கிறானோ, அவன்
செய்வதெல்லாம் வாய்க்கும். அதன் பொருள், ஒரு வேலை, ஒரு தொழில், ஒரு ஊழியம்
அல்லது பள்ளி கல்லூரி படிப்பு என்று எதுவாக
இருந்தாலும் அது வெற்றியுள்ளதாக மாறும். இரண்டாவதில், அவருடைய திட்டங்கள் எல்லாம் நன்மைக்கே தீமைக்கானதன்று என்று கர்த்தர்
நினைப்பூட்டுகிறார். ஒரு எதிர்காலம், ஒரு நம்பிக்கையை கொடுக்கக்கூடிய திட்டங்கள், செழிக்கசெய்யும்
திட்டங்கள், வளமான தீர்மானங்கள். இந்த வசனங்கள்
நமக்கு மிகவும் பிரியமானவைகள். இவைகள் நம்
வாழ்க்கையில் நிறைவேறவேண்டும் என்று விரும்புகிறோம். நல்லது. இன்னொரு பக்கம், கர்த்தருக்கு
பிரியமானது, கர்த்தருடைய நல்ல திட்டம், கர்த்தருடைய சித்தம் ஒரு குறிப்பிட்ட மனிதனுடைய கையிலே உறுதியாய்
வாய்க்கும், வெல்லும், செழிக்கும் என்றெல்லாம் சொல்லப்பட்டுள்ளது. நான் குறிப்பிடும் இந்த மனிதர் சங்கீதம் 1-ல்
உள்ள பாக்கியவானோ அல்லது எரேமியா
29ல் வாசிக்கும் இஸ்ரவேலோவன்று. தவறாக
குற்றஞ்சாட்டப்பட்டு அடிக்கப்பட்டு, நொறுக்கப்பட்டு, துன்புறுத்தப்பட்டு முடிவில் சிலுவையில்
அறையப்பட்டவர் இவர்! ஏன் அவருக்கு இந்த கதி?
தேவனுடைய வாழ்வு (அ) தேவனால் வாழ்வு
வேதாகமத்தில் இரண்டு முக்கிய
வரலாற்று நிகழ்வுகள், அல்லது வரலாற்றை திருப்பிப்போட்ட நிகழ்ச்சிகளை வாசிக்கிறோம். இரண்டுமே தேவனை அடைய மனிதன் எடுத்த
முயற்சிகள். ஒரு சம்பவத்தில், வலிமையான ஒரு மனிதன்,
கோபுரம் ஒன்றை கட்டி பரலோகத்திற்கு செல்ல முயற்சிக்கிறான். தேவன் அவனுடைய முயற்சியை தவிடுபொடியாக்கி மக்களின் பாஷையை
குழப்பிப்போட்டார். இன்னொரு சம்பவத்தில், தேவனிடத்திலிருந்து அல்லது தேவனுடைய
தீர்க்த்தரிசியிடத்திலிருந்து செய்தி வர தாமதமானபோது, மக்கள் தங்களுக்கென்று ஒரு தெய்வத்தை உண்டாக்கிகொண்டார்கள்: ஒரு பொன் கன்றுகுட்டி.
தேவன் இத்திட்டத்தை தீட்டினவர்கள்மேல்
பூமியதிர்ச்சி வரச்செய்து அவர்களை பூமி விழுங்கும்படி செய்தார். வேதவாக்கியம் தெளிவுபட உரைக்கிறது,
"மனுஷனுக்கு செம்மையாய் தோன்றும் வழிகள் உண்டு. அதன் முடிவோ மரணம்'. மனிதனுடைய
வழிகள் தேவனுடைய வழிகள் அல்ல.
தேவனுடைய பிள்ளை ஒருபோதும் தன் திட்டத்தை தேவன் நிறைவேற்றவேண்டும் என்று தேவனிடம் மன்றாடக்கூடாது. மாறாக, தேவனுடைய திட்டங்கள் மற்றும் தேவனுடைய பிரியத்திற்கு முழு இருதயத்தோடு தன்னை ஒப்புக்கொடுக்கவேண்டும். நாம் செல்லும் பாதை ஒருவேளை கரடுமுரடான, முட்கள்நிறைந்த, குறுகலான பாதையாக இருக்கலாம். அதன் முடிவோ ஜீவன்! கானானுக்கு போகும் வழி வனாந்திரம். ஆனால் முடிவில் இருந்ததோ பாலும் தேனும் ஓடும் பூமி. ஒருவேளை நீங்கள் விரும்புகிற வண்ணமாய் காரியங்கள், கனவுகள் நிறைவேறாது போயிருக்கலாம்? ஒருவேளை நீங்கள் எதிர்ப்பார்த்ததற்கு தலைகீழாகவும் சமபவங்கள் நடந்துகொண்டிருக்கலாம். அப்படியானால், இந்த செய்தி உங்களை நோக்கியே வருகிறது. இதுவே உங்களுக்கான வாக்குத்தத்தம். தொடர்ந்து நீங்கள் இந்த செய்தியை வாசிக்கும் முன், உங்கள் சிந்தனைகள், உங்கள் சித்தம், உங்கள் உணர்ச்சிகள், உங்கள் திட்டங்கள், உங்கள் இலக்குகள், உங்கள் ஏமாற்றங்கள், உங்கள் விரக்தி என்று ஒவ்வொன்றையும் தேவனுடைய கரத்தில் ஒப்புக்கொடுக்கவேண்டும். தேவனுடைய வாழ்வை தெரிந்தெடுங்கள்தேவனால் வரும் வாழ்வைக் காட்டிலும், தேவனுடைய வாழ்வை தெரிந்தெடுங்கள். இன்னொரு விதத்தில் சொன்னால், உங்கள் திட்டங்களை அல்ல, தேவனை தெரிந்தெடுங்கள்!
யாவேயின் சூத்திரம்!
இயேசுவின் நாட்களில் வாழ்ந்த
மக்களால் தேவனுடைய திட்டத்தை புரிந்துகொள்ளமுடியவில்லை. இஸ்ரவேலர் எல்லாம் தாங்கள் மீட்கப்படவேண்டும்
என்று வேண்டிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அரண்மனையிலிருந்து ஒரு அரசன் தோன்றுவான்
என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் யாவேயின்
இரட்சகர் முன்னனையில் கிடத்தப்பட்டவராக
அறிமுகமானார். அவர்கள் எதிர்நோக்கியிருந்தது
ஒரு இராஜாவை. யாவேயின் மீட்பரோ ஒரு
தச்சனின் வீட்டில் பிறக்கிறார். அவர்கள் எதிர்நோக்கியிருந்தது
ஒரு யுத்தவீரனை. யாவேயின் குமாரனோ தான் கைதுசெய்யப்பட்ட போது, தனக்காக வழக்காடாத ஒரு
அமைதிபுருஷனாக விளங்கினார். ஆனாலும் தேவனுடைய திட்டம் அவருடைய கரத்திலே வாய்த்தது,
செழித்தது, பூத்தது! இன்றும், உலகம்
முழுவதிலும் கோடானுகோடி ஜனங்களோடுகூட நீங்களும் நானும், நம்முடைய பாடுகளை, பாவங்களை சுமந்த இந்த ஒரு மனிதனின்
மூலம் நித்திய ஆசீர்வாதத்திற்குள் பிரவேசித்திருக்கிறோம். அந்த ஒரு மனிதன் இயேசுவின் மூலம் தேவனுடைய நல்ல
திட்டம் நிறைவேறியது. தொடர்ந்து நிறைவேறி வருகிறது.
எப்படி அது?
கிறிஸ்து இயேசு: மகிமையின் நம்பிக்கை
அப்போஸ்தலர் பேதுரு சொல்லுகிறார்,
நாம் கிறிஸ்துவோடுகூட பாடனுபவித்தால், அவரோடுகூட ஆளுகை செய்வோம். இன்னொரு விதத்தில் சொன்னால், அவர் அடைந்த
உயரத்தை நாம் அடைய அவர் போன பாதையை
நாம் தெரிந்தெடுக்கவேண்டும். அவரே நம் முன்மாதிரி.
அவரே நம்முடைய எடுத்துக்காட்டு. எபிரேய நிருபத்தின் ஆக்கியோன் சொல்லுகிறார் "விசுவாசத்தை
தொடக்குபவரும் அதை முடிப்பவருமாகிய இயேசுவையே நோக்கிடுங்கள்'. ஆம், தேவனுடைய நல்ல திட்டம் உங்கள் வாழ்க்கையில்
நிறைவேற இயேசுவையே நோக்கிடுங்கள். தேவனுடைய திட்டங்கள் ஒருபோதும் தீமைக்கல்ல, அவைகள்
நம்முடைய நன்மைக்கு, நம்முடைய செழிப்புக்கே. ஏசாயா 53:10ல், யாவேயின் நல்ல திட்டங்களை நிறைவேற்றி
முடித்த ஆண்டவர் இயேசுவின் வாழ்க்கையில் நாம்
மூன்று முக்கிய அமசங்களை கவனிக்கிறோம். அந்த வசனத்தில் நம்மை மகிமையான அனுபவத்திற்குள் நடத்திசெல்லக்கூடிய
மூன்று எபிரேய வார்த்தைகளின் ஆழத்திற்குள்
சென்று இந்த மூன்று சத்தியங்களை படித்திடுவோம்.
1.டாகா(நொறுக்கப்பட்டார்)
கர்த்தரோஅவரை நொறுக்கச் சித்தமாகி..(ஏசாயா 53:10)
நொறுக்கப்படுதல் என்று தமிழில் உள்ள டாகா என்ற எபிரேய வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உண்டு. அதன் பொருள் ஒருவரை கூர்மையான ஆயுதத்தை கொண்டு குத்துவது, காயப்படுத்துவது, நசுக்குவது, துண்டுதுண்டாக உடைப்பது, வெட்டுவது, ஒடுக்குவது போன்றவைகள். தகப்பன் தன் மகனை துண்டு துண்டாக உடைக்கிறார்ஆம். இயேசுவுக்கு அது தான் நடந்தது. அவருடைய சரீரம் நமக்காக கிழிக்கப்பட்டு உடைக்கப்பட்டது. பாவ, மரணம் மற்றும் நரகத்தின் பிடியிலிருந்து நம்மை விடுவிக்க தேவன் தெரிந்தெடுத்த (ஓரே) வழி அது. காவல்நிலைய சம்பவத்தை போலன்றி, இங்கு குற்றஞ்சாட்டப்பட்டவர் அதிகாரிகளால் துரத்தி கண்டுபிடிக்கப்பட்டவரில்லை. தாமாக, மனமுவந்து, முழுமனதுடன் அடிக்கப்படுவதற்கு ஒப்புக்கொடுக்கப்பட்டவர். நீங்களும் நானும் பிழைத்திருக்கும்படி நசுக்கப்பட்டவர். நினைவில் நிறுத்துங்கள், இது தேவனுடைய நல்ல திட்டம். உங்கள் வாழ்க்கையிலும் நீங்கள் போகும் பாதை, அல்லது உங்கள் பயணம் உங்களை நோகடிக்கிறதா? ஒரு வேளை இந்த வியாதி அல்லது இந்த இழப்பு உங்களை அண்டியிருக்கக்கூடாது என்று நினைக்கிறீர்களா? ஒரு கொடிய வியாதி, வைரஸின் தாக்கம், ஒரு விபத்து உங்கள் வாழ்க்கையில் ஈடுசெய்யமுடியாத பாதிப்பை ஏற்படுத்தியிருக்கலாம். நான் ஜெபிக்கிறேன், நான் தசமபாக காணிக்கைகளை செலுத்துகிறேன், நான் என் வேதத்தை வாசிக்கிறேன், மிஷனரிகளுக்கு காணிக்கை அனுப்புகிறேன். எல்லாவிதத்திலும் நான் தேவனுக்கு பிரியமான ஒரு வாழ்க்கையை வாழ்கிறேன். ஆனாலும், ஏன் இந்த நஷ்டம்? ஏன் இந்த நெருக்கடி? ஒருவேளை உங்கள் நண்பர் அல்லது குடும்பத்தில் ஒருவர் இந்த பாதையின் ஊடே சென்றுகொண்டிருக்கலாம். திடன் கொள்ளுங்கள். தப்பான ஒன்றையும் செய்யாத நம்முடைய தேவன் உங்களை ஆசீர்வாதமாக்கவே உங்களை நொறுக்கியிருக்கிறார். உடைக்கப்பட்ட நளததைலத்தின் குப்பி அந்த அறை முழுவதையும் நறுமணத்தால் நிரப்பிவிட்டது.
.. அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்;(ஏசாயா 53:10)
டாகா உடல்ரீதியிலான உபாதையை குறிக்குமானால், சாலா உளரீதியிலான காயங்களை குறிக்கிறது. சிலுவையில் அறையப்படும் முன், ஆண்டவராகிய இயேசுவும் உள்ளத்தை உடைக்கும் உணர்ச்சி போராட்டத்தை சந்தித்தார். அவரோடுகூட சாப்பிட்டவன் அவரை காட்டிக்கொடுத்தான். அவருக்காக தன் உயிரையும் கொடுப்பேன் என்று சொன்னவன் அவரை மறுதலித்தான். அவருடைய சுகத்தையும், அவருடைய விடுதலையையும் அனுபவித்தவர்கள் “சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்” என்று கோஷம் போட்டார்கள். கெத்சமேனே தோட்டத்தில், இயேசுவின் வியர்வை துளிகள் இரத்தமாய் சிந்தின. பயங்கர மனஅழுத்தம்,துயரம், துக்கம் மற்றும் பெலவீனம்.
உங்கள் அன்பான உறவுகளின் இழப்பை எண்ணி இன்றும் துக்கத்தில் மூழ்கி உள்ளீர்களா? அழுகிறீர்களா? புலம்பிக்கொண்டிருக்கீறீர்களா? தொழில், வேலை, வருமானம், வாய்ப்புகள், குடும்ப உறவுகள் போன்றவைகளின் இழப்பிலிருந்து வெளியே வரமுடியவில்லையா? இது அநியாயம் என்று நினைக்கிறீர்களா? ஒருவேளை நீங்கள் படும் வேதனை உங்களை விசுவாச பாதையிலிருந்து விலகவும் செய்திருக்கலாம். நான் ஏன் இந்த சபைக்கு போகவேண்டும்? நான் ஏன் இந்த ஜெபத்தில் கலந்துகொள்ளவேண்டும்? நான் ஏன் உபவாசிக்கவேண்டும்? ஏன்? ஏன்? ஏன்? ஆம். ஒரு கட்டத்திற்குமேல் நீங்கள் தொடர்ந்து துக்கித்துக்கொண்டிருந்தால், நீண்ட காலம் கவலைப்பட்டால், உங்கள் விசுவாசம் மட்டுமல்ல, தேவன்மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பும் தனிந்துபோகும். இப்படிப்பட்ட உணர்ச்சி போராட்டத்தை சந்தித்த இயேசுவானவர் தேவதூதனால் பெலப்படுத்தப்பட்டார். ஒருவேளை நீங்களும் இபப்டிப்பட்ட போராட்டங்களை சந்தித்துவந்தால், உங்களுக்கும் தேவன் பரத்திலிருந்து ஒத்தாசை அனுப்புவார். உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும். உங்கள் துயரமும் தேவனுடைய நல்ல திட்டத்தின் ஒரு பங்காகவே உள்ளது. அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா?
3.ஆவ்ஷாம் (குற்றம் சுமந்தார்)
அவருடைய ஆத்துமா தன்னைக்
குற்றநிவாரணபலியாக ஒப்புக்கொடுக்கும்போது..(ஏசாயா 53:10)
தேவனுடைய நல்ல திட்டத்தில், மனுஷகுமாரன் பயங்கரமான உணர்வுரீதியிலான வேதனைகளை அனுபவிக்கவேண்டியிருந்தது. தேவனுடைய நல்ல திட்டத்தில் மனுஷகுமாரன் செய்யாத குற்றத்தையும் தன்மேல் ஏற்று தன் வாழ்க்கையை தியாகபலியாக கொடுக்கவேண்டி இருந்தது. டாகாவில் அவருடைய முகரூபம் விகாரப்பட்டது. சாலாவில் அவருடைய அத்துமா வேதனைக்குள்ளானது. இப்போதும் மிகவும் சவாலான ஒன்று ஆவ்ஷாம். குற்றத்தை ஏற்றுக்கொள்வது. உடல்வேதனையைக் கூட நாம் பொறுத்துக்கொள்ளலாம். உணர்ச்சி காயங்களையும் சகித்திடலாம். ஆனால் செய்யாத ஒன்றிற்கு குற்றவாளி என்று முத்திரை குத்தப்படுவது ஜீரணிக்கமுடியாத ஒன்று. இந்த கொடுமையை விளக்கிட ஒரு கற்பனை சம்பவத்தை சொல்லுகிறேன். (உண்மையிலும் இப்படி நடக்கிறது!) ஆள்நடமாட்டமில்லாத தெரு ஒன்றில் வாலிப பெண்ஒருத்தி சில பணக்கார கயவர்களால் கற்பழித்து கொல்லப்படுகிறாள். அவ்வழியே சென்ற ஒரு நல்ல வாலிப பையன் அந்த சம்பவத்தை பார்த்து திடுக்கிடுகிறான். அவன் நிதானிக்கும் முன் அந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பி ஓடுகிறார்கள். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இந்த வாலிபனை சந்தேகத்தின் அடிப்படையில் கைதுசெய்கிறார்கள். குற்றத்தை ஒப்புக்கொள்வதற்கு போலிஸ் அடிக்கும் அடிகளையும் அவன் பொறுத்திடலாம். ஒருவேளை இந்த குற்றத்திற்கு காரணமானவர்களையும் அவன் மன்னிக்கலாம். ஆனால், சற்று யோசித்து பாருங்கள், அடுத்த நாள் பத்திரிக்கையில் இவனுடைய புகைப்படத்துடன் 'கற்பழித்தவன்' 'கொலையாளி', 'காமூகன்'” என்ற பட்டங்களுடன் தலைப்பு செய்தி வருமானால் அவனும், அவன் குடும்பத்தாரும் எப்படி உணருவார்கள்? அவன் பெயர், புகழ், கீர்த்தி எல்லாம் ஒரே நாளில் கெட்டுப் போய்விட்டது. அப்பாவி ஒருவன் அநியாய தண்டனையை அனுபவிக்கிறான். இது நீதிமான் தண்டனையை அனுபவித்துமட்டுமல்ல, அந்த குற்றத்தை செய்தவனாகவே மாறுவது. வேதம் சொல்லுகிறது, இயேசு நமக்காக பாவமானார்.
உங்களுடைய வாழ்க்கையில் எத்தனை முறை இப்படி தவறாய் குற்றஞ்சாட்டப்பட்ட சூழ்நிலைகளை சந்தித்திருப்பீர்கள்? ஒன்றுமே செய்யாமல், பாவி, துரோகி, பொய்யன், திருடன் என்ற பட்டத்தை பெற்றிருக்கிறீர்கள். அந்த சமயங்களில் நீங்கள் எப்படியெல்லாம் உணர்ந்தீர்கள்? நம்முடைய இருதயம் கொதிக்கிறதா? அந்த குற்றஞ்சாட்டுகளை கேட்டு நாம் கோபங்கொள்கிறோமா? இயேசுவானவர் குற்றநிவாரண பலியாக ஒப்புக்கொடுக்கப்படவேண்டும் என்பது தேவனுடைய நல்ல திட்டம். பிரதான ஆசாரியனுக்கு எதிராக இயேசு கிறிஸ்து எந்த மான நஷ்டஈடு வழக்கையும் பதிவுசெய்யவில்லை. மாறாக, வேதம் சொல்லுகிறது, அவர் அடிக்கப்படுவதற்கு அழைத்துசெல்லப்படும் ஆட்டுக்குட்டியை போல் இருந்தார். இயேசு சொன்னது, என்னை நீதிமான் ஆக்குகிறவர் எனக்கு சமீபமாய் இருக்கிறார்.
உருவாக்கும்படி உடைக்கப்படுதல்
பரிசுத்த வேதாகமம் முழுவதிலும் தங்கள் வாழ்க்கையின் ஏதாவது ஒரு கட்டத்தில் உடைக்கப்பட்ட, நொறுக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட பல வேதாகம கதாபாத்திரங்களை நாம் பார்க்கிறோம். அவர்கள் உடைக்கப்பட்டது, தேவ தீர்மானத்தின்படி மறுபடியும் கட்டி எழுப்பப்படவே. தன்னுடைய நேசகுமாரனை பலியிடவேண்டும் என்று ஆபிரகாமுக்கு சொல்லப்பட்டபோது அபிரகாம் உடைக்கப்பட்டார். தேவன்பேரில் வைத்திருந்த விசுவாசம் சோதிக்கப்பட்டபோது யோபு உடைக்கப்பட்டார். ஆண்டவருக்காக உயிரையும் விடுவேன் என்று சூளுரைத்த பேதுருவின் உறுதி சோதிக்கப்பட்டபோது பேதுரு உடைந்துபோனார். அவனுடைய ஜெபங்களுக்கு அவன் விரும்பும் வண்ணம் பதில்வராதபோது பவுல் உடைக்கப்பட்டார். இவர்கள் எல்லாரும் கொடிய சோதனைகளை சந்தித்தார்கள். அவர்களுடைய பின் நிலைமையை நாம் அறிந்திருக்கிறோம். அது ஒரு மகிமையான முடிவு. அது தேவனுடைய நல்ல திட்டம்!
ஒருவேளை நீங்கள் உங்கள் வாழ்க்கையில் உடைக்கப்பட்டதினால் வந்த வலியை, துக்கத்தை, அநியாய குற்றச்சாட்டை சந்தித்து வருகிறீர்களா? ஒன்றை நினைவில்கொள்ளுங்கள். நீங்கள் தேவனுடைய நல்ல திட்டத்தின் மையத்தில் இருக்கிறீர்கள் என்பதை. தேவனுடைய நல்ல திட்டம் உங்கள் கைகளில் செழிக்கும், வாய்க்கும்! ஆமென்.
கர்த்தருக்கு சித்தமானது அவர் கையில் வாய்த்ததுபோல் உங்கள் கையிலும் வாய்க்கும்!
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
கிறிஸ்துவுக்குள் உங்கள் சகோதரன்,
வினோத் குமார்
தேவநிழல் ஊழியங்கள்
No comments:
Post a Comment