பிள்ளைகள்
திருப்தியடையட்டும்!
இயேசு அவளை நோக்கி:
முந்திப் பிள்ளைகள் திருப்தியடையட்டும்…; பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து,
நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார் (மாற்கு 7:27)
ஆதியாகமத்தில் சிருஷ்டிப்பின்
கதை ஒரு பெருவெடிப்புடன் ஆரம்பிப்பதில்லை.
அண்டசராசரத்தை தன் வார்த்தையை கொண்டு உண்டாக்கினவரோடு தொடங்குகிறது. அவர் சொன்னார், அது உண்டாயிற்று! ஆனாலும், மனிதர்களாகிய நாமோ ஒரு வார்த்தை, ஒரு கட்டளையினால்
உண்டாக்கப்படவில்லை. தேவனுடைய கரங்களே நம்மை உண்டாக்கி உருவேற்படுத்தி வடிவமைத்தன.
ஆதாமின் நாசிக்குள் தேவன் தம் சுவாசத்தை ஊதினதால், முதல் மனிதன் ஆதாம் ஜீவாத்துமாவானான்.
ஆனாலும், சிருஷ்டிக்கர்த்தர் உயிரினங்களை படைக்கும் பணியை உயிரினங்களிடமே ஒப்படைத்தார்.
ஒவ்வொரு உயிரினத்திற்கும் அதன் குட்டிகளை, குஞ்சுகளை, குழந்தைகளை பெற்றெடுக்கும் திறன்
வழங்கப்பட்டது. படைப்பின் வரலாற்றில், ஆதாமும் ஏவாளும் கூடிவந்து தங்களுக்கென்று ஒரு
மகவை ஈந்தெடுத்து முதல் பெற்றோர் ஆயினர். தேவன்
அவர்களுடைய படைப்பாளி, சிருஷ்டிகர் அல்லது அவர்களுடைய வடிவமைப்பாளர் மட்டுமல்ல, அவர்களின்
தகப்பனாகவும் திகழ்கிறார். ஆம், வேதத்தின்படி தேவனுடைய முதல் மனுஷகுமாரன் ஆதாம்! தேவன் ஆதாமுக்கு மட்டுமா தகப்பன்? ஆதாமுக்குள் பிறந்த அவனுடைய சந்ததியாகிய
மனுகுலம் முழுவதற்கும் அவரே தந்தை! நம் பரமபிதா!
சிருஷ்டிப்பில் ஆதாம் ஏவாளோடு தேவன் பாராட்டின பெற்றோர் பிள்ளை உறவு, அவர்களுடைய வாழ்க்கையில் பாவம் பிரவேசித்தபோது சிதைவுண்டது. தேவன் அவர்களுடைய தேவைகளை சந்திப்பவராக இருந்தாலும், தகப்பன்-பிள்ளை உறவை அவர்கள் இழந்துபோனார்கள்!
குமாரன் மீட்கிறார்
மனிதன் தன் தகப்பனோடு இருந்த
உறவை இழந்தாலும், தந்தையானவர் அதனை மீட்டுக்கொள்ளவே விரும்பினார். பரிசுத்தமும் நீதியும் நிறைந்த தகப்பனுக்கு முன்
காணப்பட்ட ஒரே தெரிவு தன் ஒரே பேறான குமாரன் ஆண்டவர் இயேசு
கிறிஸ்துவை பூமிக்கு அனுப்பி மனுகுலத்தின் பாவத்திற்கான தண்டனையை அவர்மேல் சுமத்தி
அவரை பரிகார பலியாக்கி அதன்மூலமாய் ஏதேன் தோட்டத்தில் இழந்த உறவை அவர் மீட்டெடுத்தார்.
தேவனால்
பிறந்தவர்கள்
இயேசு கிறிஸ்துவை தன் சொந்த
இரட்சகராக ஏற்றுக்கொள்கிறவன் பாவமன்னிப்பை பெற்றுக்கொள்வது மட்டுமல்ல, பாவத்தின் தண்டனையிலிருந்தும்
அவன் மீட்கப்படுகிறான். நம்முடைய இரட்சிப்பில், நம்முடைய ஞானஸ்நானத்தில், அவன் ஒரு
புதுபிள்ளையாக, கிறிஸ்துவுக்குள் புது சிருஷ்டியாக பிறக்கிறான். மாமிசத்தில்,
அவன் ஒரு வேளை சரீரப்பிரகாரமான பெற்றோரின் உதவியோடுகூட பிறந்திருக்கலாம். ஆவிக்குரிய
ரீதியில், ஒரு மனிதன் இயேசுவை ஏற்றுக்கொள்ளும்போது, அவன் தேவனுடைய பிள்ளையாக மாறுகிறான். அல்லேலூயா! என்ன ஆச்சரியம்? தேவனோடுகூட நமக்கு இருந்த அந்த ஆதி உறவை நாம் திரும்ப
பெற்றுக்கொள்கிறோம்! தேவன் நம்முடைய தந்தையாகிறார்! நாம் அவருடைய பாக்கியமிகு பிள்ளைகளாகிறோம்.
சிறப்புரிமை
பெற்றோர்!
அண்டசராசரத்தை தம் கரங்களில்
ஏந்திக்கொண்டிருக்கும் உன்னத தேவனுடைய பிள்ளைகளாக நாம் ஏற்கப்படுவோமானால், நம் வாழ்க்கை
நிலை எவ்வளவு மேன்மையுள்ளதாக இருக்கும்! இதனை
புரிந்துகொள்ள ஒரு எடுத்துக்காட்டை உங்கள் முன் வைக்கிறேன். வாரிசில்லாத கோடீஸ்வரர்
ஒருவர் ஒரு ஏழை பையனை தத்தெடுக்கிறார். புத்திர சுவீகாரத்தை சட்டப்பூர்வமாக்கும் வகையில்
தன்னுடைய சொத்துக்கெல்லாம் இவன் தான் வாரிசாக இருப்பான் என்ற ஒரு உயிலையும். எழுதுகிறார். அந்த பையன் இனியும் தெருமுனையில் இருக்கவேண்டிதில்லை.
உடுத்த நல்ல உடை, நல்ல உணவு, வசதியான வீட்டை இவன் இப்போது அனுபவித்திடுவான். இதை அவன் நடைமுறைப்படுத்த, அந்த பையன் அந்த பத்திரத்தில்
கையெழுத்திட்ட கோடீஸ்வரனை நம்பி, புது வீட்டிற்குள் பிரவேசித்து, புது வாழ்க்கை ஆரம்பிக்கவேண்டும்!
ஒரு நிறைவான வாழ்க்கை. கோடீஸ்வரனாகிய தந்தையும், பிள்ளை இப்பொழுது சிறந்த வாழ்க்கை
அனுபவிக்கவேண்டும் என்றே விரும்புவார். அவ்விதமே, தேவகுடும்பத்தில் இணைந்திட்ட தேவனுடைய
பிள்ளையும் சிறப்பானதையே அனுபவிக்கவேண்டும் என்று தேவன் விரும்பிடுவார்! அவர் பொக்கிஷங்களில் சிறந்த பொக்கிஷமாகிய நித்திய
வாழ்வை வாக்குப்பண்ணுகிறார்! உலகம் தரக்கூடாத
ஒன்றை அவர் நமக்கு கொடுக்கிறார்: புத்திக்கெட்டா சமாதானமும், சொல்லொண்ணா சந்தோஷமும்!
அல்லேலூயா! நாம் நினைப்பதற்கும், வேண்டிக்கொள்வதற்கும்
மிகவும் அதிகமாய் செய்ய, கொடுக்க நம்முடைய பரலோக தந்தையால் கூடும்!
தவறான
முன்மாதிரிகள், சரியான பாடங்கள்
இஸ்ரவேல், எகிப்திய அடிமைத்தனத்திலிருந்து
விடுவிக்கப்பட்டு, வாக்குத்தத்த பூமிக்கு நேராக
நடத்தப்பட்ட நிகழ்வானது இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும்போது பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து
நித்திய வாழ்வுக்கு நேராக நடத்தப்படும் நம்முடைய வாழ்க்கைக்கு ஒரு நிழலாட்டமாய் உள்ளது.
பாலும்தேனும் ஓடும் தேசத்தை நோக்கி தம் தலைவர் மோசேயை அவர்கள் பின்பற்றி சென்றார்கள். சேரவேண்டிய இடத்தை சென்றடைய அவர்கள் வனாந்திர பாதையில் செல்லவேண்டியிருந்தது. வனாந்திர
வழியிலும் அவர்களுடைய தேவைகளை சந்திக்க தேவன் போதைய ஏற்பாடுகளை செய்யாமலில்லை. ஆனாலும்
இவர்கள் சோர்ந்துபோய் தேவனுக்கு விரோதமாக முறுமுறுக்க தொடங்கினார்கள். தேவனுடைய செயல்களில் சந்தோஷமடையாத அதிருப்தியாளர்களாக
அவர்கள் மாறினார்கள். முடிவில், வாக்குத்தத்த பூமியை அடையாமல் மடிந்துபோனார்கள். தேவன் அவர்களை நிரப்ப விரும்பினார்.
வனாந்திரத்தில்
விருந்து
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கழித்து,
இயேசுவானவர் 5000-த்திற்கும் அதிகமானோருக்கு வனாந்திரத்தில் விருந்து வைத்தார். ஐந்து
அப்பம் இரண்டு மீன்களை கொண்டு திரளான ஜனங்களின் பசியை ஆற்றினார். பசி போக்க ஏதோ கொஞ்சம் உணவை இயேசு அவர்களுக்கு கொடுக்கவில்லை,
இயேசு அவர்களுக்கு வயிறார உணவளித்தார். அவர்களின் வயிறு நிரம்பிற்று! கிணற்றில் தண்ணீர்
மொண்டுகொள்ளும்படி வந்த சமாரிய பெண்ணிடம், என்றென்றைக்கும் தாகமெடுக்காத ஜீவத் தண்ணீரை கொடுத்தார். அவள் நிரப்பப்பட்டாள்! இயேசு தம் சீடர்களை
பார்த்து சொன்னார், ஒருவன் தாகமாயிருந்தால் அவன் என்னிடத்தில் வந்து பானம்பண்ணக்டவன்
என்றார். என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள
நதிகள் ஓடும் என்றார். நிரம்பி வழியும் வாழ்க்கை!
நாம்
பிள்ளைகள்?!
பிசாசினால் கொடிய வேதனைக்குள்ளான
தன் மகளின் விடுதலைக்காக இயேசுவிடம் கானானிய பெண் ஒருவள் மன்றாடினபோது, தம் பிள்ளைகளான
இஸ்ரவேலர்களின் நலனுக்காகவே வந்தேன் என்கிறார்.
வேறுவிதத்தில் சொன்னால், நான் என் பிள்ளைகளின் தேவைகளை சந்திக்க, அவர்களை திருப்திபடுத்த,
அவர்களை சகலவித நன்மையினாலும் நிரப்பவே வந்துள்ளேன் என்றார். அப்படியானால் இந்த புறஜாதி பெண்ணை இயேசு புறக்கணித்தாரா?
இல்லை. வேதம் சொல்லுகிறது, “அவர்
எந்த மனிதனையும பிரகாசிப்பிக்கும் மெய்யான ஒளி.
இயேசு சொன்னார், “என்னிடத்தில் வருகிறவனை நான்
ஒருக்காலும் புறம்பே தள்ளுவதில்லை” என்றார். அவளுடைய விசுவாச வார்த்தைளை கொண்டு இயேசுவை ஆச்சரியப்படுத்தின
வேளையில் அவளுடைய மகள் விடுதலையானாள் என்று
நாம் வாசிக்கிறோம். கலங்கிப்போன தாய் அன்று தேவன்மீது விசுவாசம் வைத்து தேவனுடைய மகளாக
மாறி, தேவனால் வரும் நிறைவை அனுபவித்தாள்.
அல்லேலூயா!
அங்க
அடையாளங்கள்
அந்த நாளில், அவள் ஒரு அந்நிய
பெண்ணாக இருந்தாலும், இயேசுவின் மேல் தன் விசுவாசத்தை வெளிப்படுத்தினபோது அவள் தேவனுடைய
ஆசீர்வாததை பெற்றுக்கொண்டாள். பிள்ளை உயிர்பிக்கப்படும்
முன் புதிய உறவு ஒன்று ஸ்தாபிக்கப்பட்டது.
உங்கள் வாழ்க்கையில் ஏதாகிலும்
தேவை, குறைவு காணப்படுகிறதா? நீங்கள் கிறிஸ்தவராக இருக்கலாம். ஆனாலும் உடல் மற்றும்
உளவியல் சார்ந்த தேவை, பற்றாக்குறை, பஞ்சத்தில் போராடிக்கொண்டிருக்கலாம். திருப்தியற்ற,
நன்றியுணர்வற்ற, நிறைவில்லாத வாழ்க்கை வாழ்ந்துவருகிறீர்களா? அப்படியானால், எங்கே தவறு
நடக்கிறது என்பதை உங்கள் உள்ளத்தை ஆராய்ந்து நீங்களே கண்டுபிடிக்கவேண்டும். நீங்கள்
பிள்ளையானால், நிரப்பப்படுவீர்கள்!
தேவனுடைய பிள்ளைகள் எனும் ஸ்தானத்தை
நம்முடைய வாழ்க்கையில் எப்படி நிலைநிறுத்திகொள்கிறோம் என்பதை ஒரு சில குறிப்புகளின்
மூலம் அறிந்து அறிவடைவோம்!
(1) குமாரனை பிடித்திடு!
அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை
ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி,
அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். அவர்கள்,
இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல்,
தேவனாலே பிறந்தவர்கள்.(யோவான் 1:12-13)
நம்முடைய கிறிஸ்தவ விசுவாச பயணம்
இங்குதான் தொடங்குகிறது. இது வெறுமனே கிறிஸ்துவுக்குள்
வருவதோ, கிறிஸ்துவை ஆராதிப்பதோ, கிறிஸ்துவுக்கு காணிக்கை கொடுப்பதோ, ஜெப விண்ணப்பத்தை
கொடுப்பதோவன்று. இது அவரை ஏற்றுக்கொள்வது.
ஏற்றுக்கொள்ளுதல் என்ற பதத்தின் கிரேக்க பொருள், “உறுதியுடன்
பற்றிக்கொள்வது”.
வேறு விதத்தில் சொன்னால், நாம் கிறிஸ்துவை
ஏற்றுக்கொள்ளும்போது, நாம் ஒரு பிணைப்பு, ஒரு உறவுக்குள் வருகிறோம். நாம் அவரை பிடித்துக்கொள்ளும்படி அழைக்கப்படுகிறோம். கிறிஸ்துவை நாம் நம்முடைய வாழ்க்கையில் ஏற்றுக்கொள்ளும்போது,
நாம் குமாரன் அல்லது குமாரத்தி எனும் நிலையை திரும்ப பெருகிறோம். அவ்விதமாய் நீங்கள் கிறிஸ்துவை பெற்றதுண்டானால்,
அப்போது உங்கள் வாழ்க்கை நிரப்பபட்ட வாழ்கையாகும்.
(2) சமாதானம் செய்திடு
சமாதானம் பண்ணுகிறவர்கள்
பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய புத்திரர் என்னப்படுவார்கள் (மத்தேயு 5:9)
சமாதானத்தோடு வாழ்வது ஒரு அனுபவம்.
சமாதானம் பண்ணுவது இன்னொரு அனுபவம். ஒரு குடும்பம், ஒரு உறவு, சபை அல்லது வேறு நிலையில்
சச்சரவு இருக்கும்போது, கிறிஸ்தவர்களாய் நாம் என்ன செய்கிறோ ம்? அது என் வேலை இல்லை என்று சொல்லி விட்டுவிடுகிறோமா? தேவனுடைய பிள்ளையேயானாலும், இயேசுவானவர், தேவனுக்கும்
மனுஷனுக்கும் இடையே காணப்பட்ட பிரிவை கண்டும் காணாமல் இல்லை. மனிதனை தேவனோடுகூட ஒப்புரவாக்க சமாதானத்தை உண்டுபண்ணும்
ஆக்கினையை அவர் தன்மேல் ஏற்றுக்கொண்டார். நம்முடைய
சுயம், சுயவிருப்பு வெறுப்புகளை ஒதுக்கிவைத்து,
நம்முடைய குடும்பங்களில் நாம் சமாதானத்தை நாடினால் நாம் தேவனுடைய பிள்ளைகள் என்று அறியப்படுவோம்.
தேவனுடைய பிள்ளையை தேவன் நிரப்புவார். தேவனுக்கும்
மனிதனுக்கும் இடையில் இயேசு சமாதானத்தை உண்டுபண்ணினார். ஆத்துமாக்களினால் இயேசு திருப்தியானார்
(ஏசாயா 53)
(3)அன்பை பெருக்கிடு
உங்கள்
சத்துருக்களைச் சிநேகியுங்கள், நன்மைசெய்யுங்கள், கைம்மாறுகருதாமல் கடன்
கொடுங்கள், அப்பொழுது உங்கள் பலன் மிகுதியாயிருக்கும், உன்னதமானவருக்கு நீங்கள்
பிள்ளைகளாயிருப்பீர்கள், அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும்
நன்மைசெய்கிறாரே. (லூக்கா 6:35)
இயேசுவை நம்முடைய இருதயத்தில் ஏற்றுக்கொள்ளும்போது தேவனுடைய அன்பு நம்முடைய இருதயத்தில் ஊற்றப்படுகிறது. அதன் பொருள் யாதெனில், அன்பான தேவனை நாம் நம்முடைய இருதயத்தில் ஏற்றுக்கொள்ளும்போது தேவனுடைய மரபணு(DNA) நமக்குள் வருகிறது. அன்பான தேவனின் மரபணுவை பெற்ற நாமும் அன்பே உருவானவர்களாக மாறவேண்டும். தேவன் அன்புள்ளவர் அல்ல. தேவன் அன்பாகவே இருக்கிறார். தேவனுடைய அன்பு சுயநலமற்றது, சுத்தமுள்ளது. நாம் நம்மையே நேசிக்க அறிந்திருக்கிறோம். நம்முடைய குடும்பத்தினரையும் நேசிக்கிறோம். நமக்கு பிடித்தமானவர்களோடு சினேகம் பாராட்டுகிறோம். நல்லது. ஆனால் அது மட்டும் தேவனுடைய பிள்ளைகள் எனும் நிலையில் நம்மை நிறுத்திடாது. நாம் நம்முடைய சத்துருக்களையும் சிநேகித்து அவர்களில் அன்புகூரவேண்டும். தேவனுடைய ஜனங்களுக்கு எதிராக பகைமை, வெறுப்பு, கசப்பு, கோபம், மூர்க்கம் நமக்குள் இருக்கும்வரையில் ஒரு திருப்திகரமான, நிறைவான, முழுமையான வாழ்க்கை நம்மால் வாழவேமுடியாது. பொத்தலான பையில் போடப்பட்ட காசைப் போல் தேவனுடைய நிறைவு நம்முடைய வாழ்க்கையில் நிலைத்திருக்காது. தேவனுடைய பிள்ளைகள் என்று நாம் அறியப்படுவதற்கும், தேவனுடைய நிறைவை அனுபவிப்பதற்கும் நம் வாழ்க்கையில் காணப்படவேண்டிய முக்கிய திறவுகோல் நம் பகைஞர் மீது நாம் காண்பிக்கவேண்டிய தன்னலமற்ற அன்பு, நற்கிரியை, நன்மை போன்றவைகளாகும். நிபந்தனையின்றி உங்கள் சத்துருக்களை உங்களால் நேசிக்க முடிகிறதா? அப்படியானால் நீங்கள் அவருடைய பிள்ளை. அப்படியானால் நீங்கள் நிரப்பப்படுவீர்கள்.
(4)நீதியை நடப்பித்திடு
இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள்
இன்னாரென்றும் வெளிப்படும்; நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற
எவனும் தேவனால் உண்டானவனல்ல.(1 யோவான் 3:10)
இந்த வசனத்தில் “நீதி” என்பது
“நியாயம்,
நேர்மை, சரித்தன்மை” போன்றவைகளையே குறிக்கிறது. நம்முடைய தேவன் எப்படி தம்முடைய வழிகளிலெல்லாம்
நீதியுள்ளவராக இருக்கிறாரோ, அவருடைய பிள்ளைகளாகிய நாமும் நம்முடை நடவடிக்கைகள், பரிவர்த்தனைகள்,
மற்றும் பிறரோடுள்ள செயல்பாடுகளில் நீதியுள்ளவர்களாய் இருக்கவேண்டும். ரோமருக்கு எழுதின
நிருபத்தில், பவுல் சொல்லுகிறார்: ஆகையால் யாவருக்கும் செலுத்தவேண்டிய கடமைகளைச்
செலுத்துங்கள்; எவனுக்கு வரியைச் செலுத்தவேண்டியதோ அவனுக்கு வரியையும், எவனுக்குத்
தீர்வையைச் செலுத்தவேண்டியதோ அவனுக்குத் தீர்வையையும் செலுத்துங்கள்; தேவபக்தியுள்ள
மனிதன் ஒருவன் தன் குடும்பத்தாரிடம் எப்படி
தயவையும் இரக்கத்தையும் காண்பிக்கிறேனோ அதேபோல் தன் அயலானிடத்திலும், தன் வேலைக்காரனிடத்திலும்
அதனை காண்பிக்கவேண்டும். ஒருவரிடத்தில் ஒருவிதமாகவும்,
இன்னொருவரிடத்தில் இன்னொரு விதமாகவும் நடந்துகொள்வதும், குடும்பத்திற்கு ஒரு முகம்,
சபைக்கு ஒரு முகம், வேலைஸ்தலத்திற்கு ஒரு முகம் என்று பலமுகத்துடன் திரிவது மாய்மாலம்
மாத்திரமல்ல, அது தேவனுடைய பார்வையில் அநீதியும் கூட. தான் பிரசங்கிக்கிறதை தானே கடைபிடிக்காதவனை நாம்
தேவனுடைய பிள்ளை என்று எடுக்கமுடியாது. ஒரு திருப்தியற்ற, பாதுகாப்பற்ற வாழ்க்கையே அவர்களுக்கு மிஞ்சும். நீதியுள்ள மனிதன் நிரப்பப்பட்ட மனிதனாகவே இருப்பான்.
(5) தேவனை தரித்திடு
எபேசி 5:1 ஆதலால், நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போல
தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி,
இந்த வசனத்தின் ஆங்கில மொழிப்பெயர்ப்பு ஒன்று இப்படியாக சொல்லுகிறது “தேவன் சொல்வதுபோல் செய். நீ அவருடைய பிள்ளை”. உண்மைதானே! கிரேக்கத்தில் பின்பற்றுதல் என்பது கீழ்படிதல், செய்தல், கட்டளைகளை கைகொள்ளுதல் என்றுமட்டும் பொருள்படவில்லை. அது அவரைப் போல் இருப்பது. அவராகவே இருப்பதை குறிக்கிறது. எழுத்தின்படி, நாம் அவரை நகல் செய்யவேண்டும். அல்லது எல்லா வகையிலும் நாம் அவரைப் போல் நடந்துகொள்ளவேண்டும். இயேசு தம் சீடர்களை பார்த்து சொன்னார், என்னை கண்டவன் பிதாவை கண்டான். இயேசுவின் சீடர்களும் சொல்லவேண்டும் “என்னைக் காண்பவன் கிறிஸ்துவை காண்கிறான்”. நம் நடை, பேச்சு, பாவனை, வார்த்தைகள், உணர்ச்சிகள், செய்கைகள் ஒவ்வொன்றும் கிறிஸ்துவை பிரதிபலிக்கவேண்டும். நம்முடைய வாழ்க்கை, சாதரணமாக சொன்னால், கிறிஸ்துவுக்குள் இருக்கவேண்டும்.
அவனை
திருப்தியாக்குவேன்!
மிக அதிகமாய் வாசிக்கப்பட்டு
நேசிக்கப்படும் சங்கீதம் 91 நீடித்த நாட்களினால் நான் உன்னை திருப்தியாக்குவேன் என்கின்ற
வாக்குத்தத்தோடு முடிகிறது. நாம் இங்கு வாழும்
வாழ்க்கை நீடித்த நாட்களை பற்றியதன்று, அது வாழ்க்கை தரத்தை சார்ந்த ஒன்று. தம்முடைய
பிள்ளைகளுக்கு ஒரு நிறைவான வாழ்க்கை கொடுக்கவேண்டும் என்பது தேவனுடைய வாக்குத்தத்தமும் வாஞ்சையுமாகும்.
முந்தி
பிள்ளைகள் திருப்தியடையட்டும்!
கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட தேவப்பிள்ளை,
சமாதானத்திற்காக பிரயாசப்படும் தேவப்பிள்ளை, தன்னைப் போல் பிறனை நேசிக்கும் தேவப்பிள்ளை,
எப்போதும் எல்லோருக்கும் நீதியை செய்யும் தேவப்பிள்ளை, கடைசியாக கிறிஸ்துவின் சாயலை
தரித்துக்கொண்ட தேவப்பிள்ளை மெய்யாக ஒரு நிறைவான வாழ்க்கையை வாழமுடியும்.
தேவமனுஷன் மோசேயின் ஜெபத்தோடு
நான் இச்செய்தியை நிறைவுசெய்ய விரும்புகிறேன்.
நாங்கள்
எங்கள் வாழ்நாளெல்லாம் களிகூர்ந்து மகிழும்படி, காலையிலே எங்களை உமது கிருபையால் திருப்தியாக்கும்.
ஆமென்!
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
கிறிஸ்துவுக்குள் உங்கள் சகோதரன்
வினோத் குமார்