Thursday, September 2, 2021

தேவநிழல் வாக்குத்தத்த செய்தி | செப்டம்பர் 2021 | வாழ்வினை அருளவே வந்தேன்!

 


தேவநிழல் வாக்குத்தத்த செய்தி

செப்டம்பர் 2021

வாழ்வினை அருளவே வந்தேன்!

..நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன் (யோவான் 10:10)

வாழ்க்கை என்றால் என்ன?

தத்துவஞானிகள், வாழ்க்கை என்பது ஒன்றுமில்லை. வாழ்விற்கும் சாவிற்கும் இடையே உள்ள ஒன்று சொல்வார்கள்.  வாழ்க்கை என்பது அவ்வளவு சாதாரணமான, உப்புசப்பில்லாத ஒன்றா?!

நம்முடைய அன்றாட வாழ்க்கையில்,  வாழ்க்கையை பற்றிய பல்வேறு மனப்பாங்குகளை கொண்ட மனிதரை நாம் சந்திக்கிறோம்.   ஒரு  கல்லூரி மாணவனுக்கு, வாழ்க்கை என்பது ஆட்டம், பட்டம் கொண்டாட்டம். ஒரு கலைஞனுக்கு, வாழ்க்கை என்றாலே மேடை, புகழ் மற்றும் பெயர்.  ஒரு அரசியல்வாதிக்கு வாழ்க்கை என்பது மக்கள், பதவி மற்றும் பட்டம்.  சிலருக்கு வாழ்க்கை என்பது ஒரு வரப்பிரசாதம். சிலருக்கு அது விரக்தி வேதனை.  பார்க்கப்போனால், வாழ்க்கை சிலருக்கு புன்முறுவலின் பூங்காவாகவும், பலருக்கு புலம்பலின் பள்ளத்தாக்காகவும் தன்னை வெளிப்படுத்துகிறது.

வாழ்க்கையில் மேடுகளும் உண்டு, பள்ளங்களும் உண்டு.  யாரும் இதிலிருந்து தப்பிக்கமுடியாது. நாம் வாழும் இவ்வுலகத்தில், சாதனையாளர், செல்வந்தர் மற்றும் பேர்புகழ் அடைந்தோரும், ஒரு கட்டத்தில் வாழ்க்கையின் சவால்களை சந்திக்கமுடியாமல்  தங்களை உயிரை மாய்த்துக்கொள்கிறார்கள். ஆனால் ஏழை எளியோர், பசியுற்றோர், பாடுகளை சகித்திடுவோர் ஒரு புது விடியலை எதிர்பார்த்து அடுத்த நாளுக்காக காத்திருக்கிறார்கள்.  மரணம் ஒரு குடும்பத்தை தாக்குகையில்ல், உறவுகளை இழந்தவர்களின்  வாழ்க்கை வீணும், வியர்த்தமும் பொருளற்றதுமாய் மாறிவிடுகிறது.  ஆனால் அதே சமயம், ஒரு குழந்தையின் பிறப்பு  அவர்களுடைய வாழ்வில் ருசியை கூட்டி வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியும் ரசிக்க வைக்கிறது.  ஆக, பலவிதங்களில், வாழ்க்கை நமக்கு என்ன தருகிறது (அல்லது பிடுங்கிக்கொள்கிறது) என்பதன் அடிப்படையிலே தான் அநேகரின் வாழ்க்கை மதிப்பிடப்படுகிறது, விரும்பப்படுகிறது.

இப்படியிருக்க, கிறிஸ்தவ ஜீவியம் எந்த அளவுக்கு தனித்தன்மை வாய்ந்தது?

 

கிறிஸ்துவுக்குள் (ஓரு புது ஜீவன்)

தேவன் தம்முடைய சுவாசத்தை ஆதாமுக்குள் செலுத்தினபோது முதல் மனிதன் ஆதாம் (ஆதாம் என்றால் மனுஷன்) ஜீவாத்துமாவானான் என்று வேதாகமம் சொல்லுகிறது. உலகத்தில் மனிதர்களாய் பிறந்த நாம் ஆதாம் மற்றும் அவருடைய சந்ததிக்குள் பிறந்தவர்கள். நாம் வாழும் இந்த வாழ்க்கை அல்லது நாம் சுவாசிக்கு சுவாசக்காற்று தேவனிடத்திலிருந்து வந்தது அல்லது தேவனுடையது.   மனிதன் பாவத்தில் விழுந்த நாளிலே இந்த வாழ்க்கை சீர்கெட்டுப்போனது. மனிதன் சரீரப்பிரகாரமாய், பிழைத்தாலும், அவனுடைய ஆவி மரித்துபோனது.    ஒருவன் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு பாவமன்னிப்பை பெற்றுக்கொள்ளும்போது, அவன் புதுமனிதனாக பிறக்கிறான்.  அதனைத் தான் நாம் “மறுபிறப்பின்” அனுபவம் என்று சொல்கிறோம். பவுல் சொல்லுகிறார்  கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்”  இயேசுவானவர் இந்த வாழ்க்கையை பற்றியே பேசினார்! ஒரு பரிபூரண வாழ்க்கை!

 

இந்த மாதத்தின் வாக்குத்தத்தம் ஒரு புதிய வார்த்தையன்று. மாறாக, நமக்கு ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள வார்த்தையின் நினைப்பூட்டலே.  உங்கள் வாழ்க்கையை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்று எனக்கு தெரியாது! உங்கள் வாழ்க்கையில் விஞ்சியிருப்பது மகிழ்ச்சியா? துயரமா? விரக்தியா? கலக்கமா? ஆனால் இன்றைக்கு இயேசு நமக்கு நினைப்பூட்டுவது என்னவென்றால் நீங்கள் அவரிடத்திலிருந்து பெற்றுக்கொண்ட வாழ்க்கையே ஒரு பரிபூரண வாழ்க்கை! இந்த தியானத்தில்,“நான் அவர்களுக்கு வாழ்வினை கொடுக்க வந்தேன்” என்று இயேசு சொன்னதன் பொருள் என்னவென்பதையும், வேதவசனங்களிலிருந்து இந்த வாழ்க்கையை நாம் எப்படி வாழ்வேண்டும் அல்லது பிரதிபலிக்கவேண்டும் என்பதையும் நாம் புரிந்துகொள்ள முயலுவோம்!

வேறுபடுத்தும் காரணி: பழையதும் புதியதும்!

ஒருவர் வேடிக்கை சொன்னார்:“பன்றிக்குட்டியை தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கி எடுப்பதால் அது நாய்க்குட்டியாகாது”.  இயேசுவை ஏற்றுக்கொண்டு நாம் திருமுழுக்கு பெறும்போது புது சிருஷ்டியாய் பிறக்கிறோம் என்பது உண்மை என்றாலும்,  ஞானஸ்நானத்தில் எந்த ஒரு உருமாற்றமும் நேரிடுவதில்லை. இயற்கை தோற்றத்தில் நாம் இருக்கின்ற வண்ணமாகவே இருப்போம். ஆவிக்குரிய மண்டலத்தில், நாம் புதுவாழ்வு வாழும்படிக்கு அழைக்கப்பட்ட புது சிருஷ்டி.  இயேசுவால் போதிக்கப்பட்ட, இயேசுவை முன்மாதிரியாக கொண்ட, இயேசுவை வெளிப்படுத்தும் ஒரு வாழ்க்கை. கிறிஸ்தவனல்லாத ஒருவன் சந்திக்கும் – உடல், உள்ளம் மற்றும் உணர்வுரீதியிலான – அனைத்து போராட்டங்களை நாமும் சந்திக்கிறோம்.  வாழ்க்கை நமக்கு முன்பாக ரோஜாக்கம்பளத்தை விரிக்கவில்லை.  மாறாக சுமப்பதற்கு ஒரு. சிலுவை நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

அப்படியானால், நான் வாழும் இந்த வாழ்க்கை எப்படிப்பட்டது?

காசாக்கப்படாத காசோலை!

ஆண்டவருடைய வாக்குத்தத்தங்கள் ஒவ்வொன்றும் இயேசுவுக்குள் ஆம் என்றும் ஆமென் என்றும் உள்ளது.  ஆனாலும், தேவனுடைய வாக்குத்தத்தங்கள் ஒவ்வொன்றும், நம்முடைய வாழ்க்கையில் தானாக நிறைவேறுவதில்லை.  அவைகள் நாம் முதலில் பெறவேண்டும், விசுவாசிக்கவேண்டும், ஜெபிக்கவேண்டும், பின்பு அதை நாம் சுதந்தரிக்கவேண்டும், சில இலட்சங்களுக்கான ஒரு காசோலையை நீங்கள் ஒருவரிடம் பெற்றுக்கொள்கிறீர்கள்.  காசோலையை கொடுத்தவர் அதிலே உங்கள் பெயரை எழுதிக்கொடுத்திருப்பார்.  உங்கள் வங்கி கணக்கில் அதனை டெபாசிட் செய்து அதனை அனுபவிக்கவேண்டும் என்று எண்ணத்துடன் உங்களுக்கு அதனை

கொடுத்திருப்பார்.  ஆனால், நீங்கள் ஒருவேளை அந்த காசோலையை உங்கள் வங்கி கணக்கில் போட தவறினால், அந்த காசோலை உங்களுக்கு எந்த நன்மையும் ஈட்டிடாத ஒரு வெற்று தாளாகவே இருக்கும். அதுபோலவே யோவான் 10:10-ல் இயேசு நமக்கு அருளின வாக்குத்தத்தின் முழு பலனை அனுபவிக்க நாம் அதனை பெற்றுகொண்டு சுதந்தரிக்கவேண்டும்.

காசோலையை வங்கிக்கணக்கில் போடாத மனிதன் எப்படி தன் நெருக்கடியிலிருந்து மீண்டுவரமுடியாதோ, தேவனுடைய தார்ப்பரியங்களை தன் வாழ்க்கையில் அப்பியாசப்படுத்தாத மனிதனும் பாடு அனுபவிப்பான்.

 

பவுல் சொல்லுவார், “இனி ஜீவப்பது நானல்ல, கிறிஸ்துவே என்னில் ஜீவிக்கிறார்”. ஒரே வார்த்தையில் நான் இதை, நம்முடைய பழைய வாழ்க்கைக்கும் புதிய வாழ்க்கைக்கும் இடையிலுள்ள வேறுபாடு, “நான்” அல்லது “என்னுடைய” எனும் அடையாளம் மெல்ல மெல்ல “இயேசுவின்” அல்லது “இயேசுவுடைய” என்று மாறவேண்டும்.    

முப்பரிமாண வாக்குத்தத்தம்!

a)  கிறிஸ்துவின் வாழ்வு, ஒளி தருகிறது – இருளில்லை

அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது(யோவான் 1:4)

இயேசு சொன்னார், “நானே உலகத்தின் ஒளி. என்னை பின்பற்றுகிறவன் இருளிலே நடவான்”. அடிப்படையில், இருள் என்றால் வெளிச்சமில்லாமை.  இருள் ஒருவரும் கிரியை செய்யக்கூடாத காலம். வெளிச்சம் இல்லாவிடில் உங்களால் வழியை கண்டுபிடிக்கமுடியாது.  நீங்கள் தொடர்ந்து இருளிலே நடந்தால் நீங்கள் தடுக்கி தடுமாறுவீர்கள். இருள் பயத்தையும, திகிலையும், அநிச்சயத்தையும் ஒருவருடைய மனதில் உருவாக்கும்.  நீங்கள் இயேசுவை ஏற்றுக்கொண்டபோது ஒளியினுள் வந்தீர்கள். உங்களுடைய வாழ்க்கையில் இருளே இராது என்று இயேசு சொல்லவில்லை.  மாறாக, நாம் இருளில் தடுமாறவோ, போராடவோ மாட்டோம் என்று சொன்னார். நம்மீது பிரகாசிக்கும் தேவனுடைய ஒளி(ஏசா 60:1) இருளை மேற்கொள்ள அல்லது இருளிலும் பயணிக்க நமக்கு உதவிடும்.  இந்த ஒளி என்பது கர்த்தருடைய வார்த்தை. கர்த்தருடைய வசனம் உங்கள் கால்களுக்கு தீபமும், பாதைக்கு வெளிச்சமாய் மாறாவிடில், நீங்கள் இருளிலேயே தொடர்ந்து இருப்பீர்கள். எ.கா. தன் சகோதரனை பகைக்கிறவன் கொலைபாதகன் என்று வேதம் போதிக்கிறது.  தன் சகோதரனை பகைக்கிறவன் இன்னும் இருளில் இருக்கிறான் என்று யோவான் எழுதுகிறார். இந்த வார்த்தை உங்கள் வாழ்க்கையில் மாமிசமாக மாறாதபட்சத்தில், நீங்கள் உங்களையே சுயமதிப்பீடு செய்துகொண்டு, வசனத்தின் எந்த பகுதி இன்னும் ஒளியடையவில்லை என்பதை கண்டுபிடிக்கவேண்டும்.

(b) கிறிஸ்துவின் வாழ்வு, முழுமை தருகிறது  குறைவில்லை

திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன் (யோவான் 10:10)

ஒளிமட்டுமல்ல, கிறிஸ்துவின் ஜீவன் என்றாலே முழுமையானது, நிறைவானது. வசதிக்கும் மனரம்மியத்துக்கும் வித்தியாசம் உண்டு.  இயேசுவின் வாழ்க்கை சொல்லொண்ணா சொத்துக்களை, செளகரியத்தை நமக்கு வாக்குபண்ணுவதில்லை. புத்திக்கெட்டா சமாதானத்தை அது நமக்கு வாக்களிக்கிறது.  உலகம் ஐஸ்வர்யத்தில் தன் பிரியத்தை, தன் சந்தோஷத்தை தேடுகிறது.  இயேசுவை தன் மேய்ப்பராக ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் இந்த நன்மை வாக்களிக்கப்படுகிறது.  இல்லை, நீங்கள் ஒரு பிச்சைகாரனின் வாழ்க்கையை வாழும்படிக்கு அழைக்கப்படவில்லை. நான் கேட்பதற்கு முன்பாகவே பரலோகத்தில் வாழும் என் பிதா என் தேவை (சிறிதோ பெறிதோ) இன்னதென்று அறிந்திருக்கிறார். நாம் நினைப்பதற்கும், வேண்டிக்கொள்வதற்கும் மிகவும் அதிகமாய் செய்பவர் அவர்.  தனக்கும் தன் சகோதரனுக்கும் இருந்த ஒரு நிலத்தகராறில் நியாயத்தை சொல்லும்படி கேட்டுக்கொண்ட ஒரு மனிதனை பார்த்து இயேசு, திரளான சொத்துக்களை குவித்த ஒரு மனிதனை பற்றிய உவமை ஒன்றினை சொன்னார்.  அவன் தான் சேர்த்துவைத்த சொத்து போதாது என்று கருதி இன்னும் கூடுதலான சொத்துக்களை சேர்த்துவைக்க திட்டமிட்டான். அவ்வேதபகுதி இப்படியாக சொல்லுகிறது,“தேவனோ அவனை நோக்கி: மதிகேடனே, உன் ஆத்துமா உன்னிடத்திலிருந்து இந்த இராத்திரியிலே எடுத்துக் கொள்ளப்படும், அப்பொழுது நீ சேகரித்தவைகள் யாருடையதாகும் என்றார். இயேசுவானவர் நமக்கு கொடுக்கவும், போதிக்கும்படியும் வந்த முழுமை அல்லது நிறைவு இதுவே.  இயேசுவானவர் நம் தேவைகளை அறிந்தவர், தம் வழியிலே சந்திக்கவல்லவர், விருப்பமுள்ளவர் என்ற ஒரு உள உறுதியுடன் வாழ்வதே அந்த வாழ்க்கை.

(c) கிறிஸ்துவின் வாழ்வு, நம்பிக்கை தருகிறது –  கலக்கமில்லை

இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;(யோவான் 12:25)

கிறிஸ்து நமக்கு கொடுக்கும் வாழ்க்கையில் நாம் அனுபவிக்கக்கூடிய மூன்றாவது பெரும் பாக்கியம் அல்லது, சொல்லப்போனால், மிகச் சிறந்த ஆசீர்வாதம் நித்தியத்தை குறித்த நம்பிக்கை.  இயேசுவானவர், திரும்ப திரும்ப, மரணத்திற்கு பின்னான ஒரு வாழ்க்கையை குறித்து பேசியுள்ளார். மரணத்தை ஜெயிக்கும் ஒரு வாழ்க்கை.  மரணத்திற்கு பின் துளிர்விடும் வாழ்க்கை. இந்த நாட்களில் மனிதர்களை பீடிக்கும் பெரிதான பயங்களில் ஒன்று மரணத்தை குறித்த பயம் அல்லது எதிர்காலத்தை பற்றிய பயம். நாம் இன்னமும் நம்முடைய அடுத்த நாள் அல்லது மறுவாழ்வை குறித்த பயத்திலும், கலக்கத்திலும் வாழ்க்கையை கழிப்போமானால், இயேசுவானவர் நமக்கு தந்தருளிய ஆசீர்வாதமான வாழ்க்கையை பற்றிப்பிடிக்கவில்லை என்று தான் பொருள்.

 

பூமியில் நாம் வாழும் வாழ்க்கையை குறித்து நான் கேள்விப்பட்ட ஒரு சொற்றொடர் இப்படியாக செல்லுகிறது, “வாழ்க்கை என்பது நித்தியத்திற்கான ஆயத்தம். மரணம் என்பது பரலோகத்தை சுதந்தரிப்பது”.  இயேசு ஜீவன் என்று இங்கே குறிப்பிடும்போது மரணத்திற்கு முன்னான ஒரு வாழ்வினை அவர் மையப்படுத்தவில்லை. இயேசு உயிர்த்தெழுதலுக்கு அடுத்து உள்ள ஒரு வாழ்வை, ஒரு ஜீவனை குறிப்பிடுகிறார்.  அவர் பயன்படுத்தும் வார்த்தையை கவனியுங்கள்.  பூமியில் இருக்கையில், வாழ்க்கை ஒரு போராட்டமாக, ஒரு நெருக்கடியாக, ஒரு யுத்தமாக காணப்படலாம்.   ஆனால் அது நம்மை அதைரியப்படுத்தவோ, திசைத்திருப்பவோ கூடாது. நம்முடைய குவிமையம் எப்போதும் நித்திய ஜீவனாக இருக்க வேண்டும்.  என் நம்பிக்கையானது, என்னுடைய பொருளாதார சமுதாய, சரீர நிலைகளுக்கு அப்பார்பட்டு, என் இரட்சகரோடுகூட எனக்கு ஒரு நீடித்த வாழ்க்கை  உண்டு என்பதை வெளிப்படுத்துகிறது. இயேசுவின் வார்த்தைகள் எனக்கு இந்த நம்பிக்கையை கொண்டுவருகிறது.  இயேசுவின் வாழ்வு நமக்கு ஒரு மனவுறுதியை வாக்குப்பண்ணுகிறது.  அல்லேலூயா!

 

வாழ்க்கையின் விதியமைப்பு

எபிரேயர் 12:2 அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.

முடிவாக, நான் ஒரு தங்கவிதியை உங்களுக்கு நினைப்பூட்டி இந்த நிறைவான வாழ்வை வாழ்ந்துகாட்டிய ஒரு மனிதனை உங்களுக்கு முன் வைக்க விரும்புகிறேன்.  சவால்களும், பாராட்டுகளும் நிறைந்த இந்த கிறிஸ்தவ புதுவாழ்வை வாழ்ந்திட நாம் மூன்று காரியம் செய்யவேண்டும்.

 

1.நம்முடைய கண்கள் நம்மை அழைத்தவரை காணவேண்டும், நம்மை சுற்றியுள்ள மனிதர்களையல்ல.

2.நம்முடைய கண்கள் நமக்கு முன்பாக உள்ள சந்தோஷத்தை காணவேண்டு, நம்முடைய வேதனைகள் துக்கங்களையல்ல.

3.நம்முடைய கண்கள் தேவனுடைய சிங்காசனத்தை பார்க்கவேண்டும், இருளின் அதிகாரத்தையல்ல.

 

அப்போஸ்தலர் பவுலின் வாழ்க்கை நாம் பிடித்துக்கொள்ளவேண்டிய முன்மாதிரியை நமக்கு அழகாய் சித்தரிக்கிறது. பின்வரும் வேதவசனங்கள் அவருடைய வாழ்க்கை நோக்கத்தை நமக்கு புலப்படுத்துகிறது.

 

1.கிறிஸ்துவை வெளிப்படுத்த பவுல் தன் சொந்த அடையாளத்தை இழந்தான்

 கலாத்தியர் 2:20 கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.

 

2.கிறிஸ்துவுக்காய் பாடு அனுபவிக்க பவுல் சிலுவையை உயர்த்தினான்

2 தீமோத்தேயு 2:12  அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்; நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார்;

 

3.கிறிஸ்துவை மகிமைப்படுத்த பவுல் நிபந்தனையின்றி பிரயாசப்பட்டான்

1 தெசலோனிக்கேயர் 2:9 சகோதரரே, நாங்கள் பட்ட பிரயாசமும் வருத்தமும் உங்களுக்கு ஞாபகமாயிருக்கும்; உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு, இரவும் பகலும் நாங்கள் வேலைசெய்து, தேவனுடைய சுவிசேஷத்தை உங்களிடத்தில் பிரசங்கித்தோம்

 

இயேசுவின் பரிபூரண ஜீவன் நமக்கு பின்வரும் வாக்குத்தங்களுடனே வருகிறது

-          இருளை நீக்கும் ஒளி  

-          ஆத்துமாவை நிரப்பும் முழுமை

-          நித்தியத்தை நிச்சயிக்கும் நம்பிக்கை

 

நம்முடைய நல்ல தேவன், ஏதோ ஒரு வாழ்க்கை வாழும்படிக்கல்ல,  அவர் மூலமாக ஒரு பரிபூரண வாழ்வை வாழுபடிக்கு, நம் ஒவ்வொருவருக்கும் தம்முடைய அளவற்ற கிருபையை ஈந்திடுவாராக!

அவர் வந்து உங்களுக்கு வாழ்வை அருளும்படிக்கு! அல்லேலூயா!

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!

உங்கள் சாட்சிகள்/கருத்துகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.

கிறிஸ்துவின் பணியில், உங்கள் சகோதரன்

வினோத் குமார்

9840011374

No comments:

Post a Comment

I WILL COME | PROMISE | GOD'S SHADOW MINISTRIES | MARCH 2025

  I WILL COME AND HEAL HIM PROMISE | MARCH 2025 Mat hew 8:7   And Jesus saith unto him, I will come and heal him   Dearly beloved...