Saturday, June 4, 2022

வாக்குத்தத்த வார்த்தை | ஜூன் 2022 | இயேசுவின் சந்தோஷம்


 வாக்குத்தத்த வார்த்தை | ஜூன் 2022 | இயேசுவின் சந்தோஷம்

இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள்,  அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்.  (யோவான் 16:24)

ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்,

கிட்டத்தட்ட இரண்டுவருட இடைவெளிக்கு பின், ஜூன் மாதம் மறுபடியும் ஒரு   புதிய கல்வியாண்டின் துவக்கமாக நம்முடைய பிள்ளைகளுக்கு அமையப் போகிறது. கோவிட்-19 ஏற்படுத்தின தாக்கத்தால், இந்த ஆண்டின் பள்ளி இறுதி தேர்வு ஒரு அசாதாரண் சூழலில் கோடை விடுமுறையில் நடத்தப்பட்டது. சில பள்ளிகள் குறுகியகால கோடைவிடுமுறையை அளித்திருந்தாலும், பல  விரைவில் திறக்க ஆயத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.  அடுத்த ஒரு சில நாட்கள் பிள்ளைகள் தங்கள் நேரத்தை குதூகலத்துடன் கொண்டாடி மகிழப்போகிறார்கள் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.  ஆனால் பெற்றோருக்கோ கல்விக் கட்டணமும், ஏனைய செலவீனங்களும் தொண்டையை நெறிக்கக்கூடியதாக அமையப்போகிறது.  குழந்தைகளுக்கு குஷி, பெற்றோருக்கு கிலி!

நீங்களும் உங்கள் குடும்பத்தினரும், இந்த கோடைகாலத்தில், எப்படிப்பட்ட பாதையின் ஊடே சென்றுகொண்டிருந்தாலும், இம்மாதத்திற்கான உங்களுடைய வாக்குத்தத்த வார்த்தை “உங்கள் சந்தோஷம் நிறைவாக கேளுங்கள்”.  அல்லேலூயா!  அவ்வசனத்தை இன்னொரு ஆங்கில மொழிப்பெயர்ப்பு இப்படியாக சொல்லுகிறது, “உங்கள் இருதயங்கள் மகிழ்ச்சியினால் நிரம்பியிருக்க கேளுங்கள்”. இயேசுவானவர் சந்தோஷத்தை அருளுவதற்கல்ல, தம்முடைய சந்தோஷத்தை தருவதற்கே நம்மை அழைக்கிறார்.  இயேசுவானவர் “சொற்ப” சந்தோஷத்தை அருளுவதற்கல்ல, “நிறைவான” மகிழ்ச்சியை தருவதற்கே அழைக்கிறார்.  “உங்கள் சந்தோஷம் நிறைவாக இருக்கவேண்டும்” என்பதன் அர்த்தம் என்ன?

மகிழ்ச்சியை பற்றி கருத்துள்ளவர்

மகிழ்ச்சிக்கான கிரேக்க பதம் சாரா. அதன் பொருள் உற்சாகம், உற்சாகமிகுதி, சந்தோஷம், மகிழ்ச்சி.

4 சுவிசேஷ நூல்களிலும், சந்தோஷம் என்ற பொருள்படும் JOY என்ற வார்த்தை 24 தடவை வருகிறது. இயேசுவானவர் சந்தோஷத்தை குறித்து உண்மையில் கருத்துள்ளவராகவே இருந்தார். சமாதானத்தை தவிர்த்து, நான் நினைக்கிறேன், சந்தோஷம் என்ற பதத்தை அவர் குறிப்பிடும்போதே அவர் “என் சந்தோஷம்” என்றார்.  இயேசு சொன்னார், “என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன்”. இந்த சந்தோஷத்தை உங்கள் வாழ்க்கையில் கண்டடைவது எப்படி? இது எவ்விதத்தில் உங்களில் பூரண்மாகும்?  நாம் நம்முடைய சந்தோஷத்தை மட்டுமே அனுபவிக்கிறோமா அல்லது கர்த்தருடைய சந்தோஷத்தை அனுபவிக்கின்றோமா? சமாதானம் மற்றும் சந்தோஷத்தின் கிறிஸ்து இயேசுவுக்குள் மட்டுமே நாம் அனுபவிக்கமுடியும்.


இம்மையும் மறுமையும்

 

நாம் வாழும் இவ்வுலகில், கேளிக்கை மற்றும் குதூகுலத்திற்காக மக்கள் ஆயிரக்கணக்கில் செலவுசெய்கிறார்கள்.  அதிகரிக்கும் அழுத்தங்கள், வலிகள் மற்றும் பிரச்சனைகளின் விளைவாக மக்களால் மகிழ்ச்சியை அனுபவிக்கமுடியவில்லை என்பது உண்மையில் ஒரு கசப்பான உண்மை.  அவர்கள் நகைச்சுவை நிகழ்ச்சிகள் மற்றும் மதுமான விருந்துகளில் தங்கள் மகிழ்ச்சியை தேடுகிறார்கள்.  ஆனால், அந்த சந்தோஷம் சற்று நேரம் மட்டுமே தங்குகிறது.  அவர்கள் உயர பறந்து தாழ விழுகிறார்கள்!  நல்ல சம்பவங்கள் நடக்கும்போது அவர்கள் குதுகலிக்கிறார்கள், கேடுபாடு நேரிடும்போது அவர்கள் குழம்பிப்போகிறார்கள்.  பிரசங்கியார் எழுதுகிறார், அழ ஒரு காலமுண்டு, நகைக்க ஒரு காலமுண்டு; புலம்ப ஒரு காலமுண்டு, நடனம்பண்ண ஒரு காலமுண்டு;” (பிரச 3:4)” ஆனால் இயேசுவோ “பரிபூரண சந்தோஷத்தை குறித்து பேசுகிறார். நீங்காத சந்தோஷம்!  நாம் எல்லாரும் கஷ்ட நஷ்டர்ங்கள், போராட்டங்கள், பாடுகள் மற்றும் பிர்ச்சனைகளை சந்திக்காமல் இல்லை. அப்படியானால் நாம் எப்படி அதிலும் சந்தோஷமாய், உற்சாகமாய் இருக்கமுடியும்? வேதம் சொல்லுகிறது, இயேசு தாமே தம் ஆவியில் கலங்கினார் என்று, லாசருவின் மரணத்தை கண்டு கண்ணீர்விட்டார் என்று! அப்படியானால் இயேசுவின் சந்தோஷம் என்பது எது?

 நான் உங்களுக்கு சொல்லுகிறேன்!

 இயேசு கிறிஸ்து, பல இடங்களில், பழைய ஏற்பாட்டு வேதவசனங்களின் மெய்யான அர்த்தத்தை, பொருள் விளக்கத்தை சரியாக எடுத்து சொன்னதுமட்டுமல்ல,  அதனை எப்படி புரிந்துகொண்டு பின்பற்றவேண்டும் என்றும் அவர்களுக்கு உணர்த்தினார்.  தேவனுடைய நியாப்பிரமணங்களை எல்லாம் அவர ஒரு வரியில் சுருக்கிக் கூறினார். இன்றும், சந்தோஷத்தை பற்றி, இயேசு குறிப்பிட்ட மூன்று சிறப்பான சூழ்நிலைகளை கவனித்து, நாம் வாழ்க்கையில் நாம் பற்றிக்கொள்ளவேண்டிய மூன்று வித்தியாசமான சந்தோஷங்களை பற்றி படிக்கப்போகிறோம்.  

 

(1)   மேலான சந்தோஷம் (நம்முடையதல்ல, பிறருடையது) (லூக்கா 15)

 

அதுபோல மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதருக்கு முன்பாகச் சந்தோஷமுண்டாயிருக்கிறது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் (லூக்கா 15:10)

 இயேசு கிறிஸ்துவின் நாட்களில் வாழ்ந்த மதவாதிகள் பாவிகளுடன் அவர் பேசுவதை, போஜனம்பண்ணுவதை ஏற்கமுடியாமல் முறுமுறுத்தார்கள்.  இயேசு மூன்று உவமானங்களை சொல்லி அவர்களுக்கு பதிலுரைத்தார்.  தொலைந்துபோன ஆடு, தொலைந்துபோன நாணயம் மற்றும் தொலைந்துபோன குமாரன்.  இந்த எல்லா கதைகளிலும் பிதாவாகிய தேவனுடைய இருதயம் எப்போதும் பாவிகளை இரட்சிக்கவே பின்தொடருகிறது என்றார்.  இயேசு தாமே, பாவிகளை இரட்சிக்கவே நான் வந்தேன் என்கிறார்.  பரலோகத்தை பற்றிய எந்த ஒரு பார்வையும் இல்லாத மதவாதிகளை பார்த்து, இரட்சிக்கப்படும் ஒரு பாவியின் நிமித்தம் பரலோகம் ஆனந்த சந்தோஷமடைகிறது என்று சொன்னார். தூதர்களின் கொண்டாடும் காட்சியை இயேசு அவர்களுக்கு காண்பித்தார்.  நாம் எல்லாரும் பரலோகம் செல்ல விழைகிறோம், பரலோகத்தை பற்றி பிரசங்கிக்கிறோம், பரலோகத்தில் செய்யப்படுவதுபோல் பூமியில் செய்யப்படவேண்டும் என்று  ஜெபிக்கிறோம். அப்ப்டியானால், நம்முடைய சந்தோஷத்தை நாடுவதற்கான வழியை தேடாமல், பரலோக சந்தோஷத்திற்காய் நாம் பாடுபடவேண்டும்.  நம்முடைய நோக்கம் இழந்துபோன ஆத்துமாக்களாக இருக்குமென்றால், கர்த்தர் மெய்யாகவே நம்முடைய இருதயங்களை பரலோகத்தின் சந்தோஷத்தினால், அல்லது மேலான சந்தோஷத்தால் நிரப்புவார்.

 (2)     அசாதாரண சந்தோஷம் (பாதுகாப்பில் அல்ல, பாடுகளில்) (Luke 6)

மனுஷகுமாரன் நிமித்தமாக ஜனங்கள் உங்களைப் பகைத்து, உங்களைப் புறம்பாக்கி, உங்களை நிந்தித்து, உங்கள் நாமத்தைப் பொல்லாததென்று தள்ளிவிடும்போது நீங்கள் பாக்கியவான்களாயிருப்பீர்கள். அந்நாளிலே நீங்கள் சந்தோஷப்பட்டுக் களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; அவர்களுடைய பிதாக்கள் தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள்.(லூக்கா 6:22-23)

 

தன்னுடைய மலைப் பிரசங்கத்தில் இயேசு கிறிஸ்து “பாக்கிய வசனங்கள்" என்று சொல்லப்படும் மகிழ்ச்சியான கிறிஸ்தவ வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை குணநலன்களை பட்டியலிட்டார்.   அவர் சொல்கிறார்,  நாம் கிறிஸ்துவின் நிமித்தம் பகைக்கப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு, நிந்திக்கப்பட்டு அவமானப்படுத்தப்படுவமானால், நாம் மகிழவேண்டுமே ஒழிய, அழக்கூடாது என்று இயேசு சொல்லுகிறார்.  சொல்லபோனால், நாம் மகிழ்ந்து குதிக்கவேண்டும் என்று குறிப்பிடுகிறார்! ஒருவேளை இது வினோதமான ஒன்றாக தோன்றலாம்.  ஆனால் இது கர்த்தருடைய பரிந்துரை.   மக்கள் நம்மை காயப்படுத்தலாம், தவறாக நடத்தலாம், மோசமாக நடத்தலாம், நிந்திக்கலாம், ஏன் கிறிஸ்துவின் நிமித்தம் நம்மை வெறுக்கவும் செய்யலாம்.  ஆனால் அவைகளை சந்தோஷத்துடன் ஏற்றுக்கொள்வதற்கான ஒரு மனநிலையை வளர்த்துக்கொள்ளவேண்டும்.  இயேசு கிறிஸ்துவின் சகோதரனும், அப்போஸ்தலனுமாகிய யாக்கோபு தன்னுடைய நிருபத்தில் "என் சகோதரரே பலவிதமான சோதனகளில் அகபபடும்போது அதை சந்தோஷம் என்று எண்ணுங்கள்” என்று சொல்லி நம்மை ஊக்கப்படுத்துகிறார். தேவ கிருபையே அன்றி இது சாத்தியப்படாது. ஆனால் நாம் அதை கேட்கவேண்டும்? நம்முடைய பிரதிபலிக்கும் மகிழ்ச்சி நாம் எதை சந்திக்கிறோமோ அதன் அடிப்படையில்  உண்டாவதன்று.  ஒவ்வொரு அடியும், ஒவ்வொரு அவமானமும், ஒவ்வொரு பாடும் பரலோகத்தில் முழு பெலனை கொண்டுவரும் என்ற அறிவில் உண்டாகவேண்டும். அல்லேலூயா! பரலோக பலன் நம்முடைய நோக்கமாக இருந்தால், நம்முடைய உள்ளங்களை அவர் மெய்யாகவே  அசாதாரண சந்தோஷத்தினால் நிரப்புவார்.

 

(3)   நித்திய சந்தோஷம் (பூமியில் அல்ல, பரலோகத்தில்) (மத் 25)

 அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின் மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.(மத்தேயு 25:23)

 

இது ஆண்டவர் இயேசு பேசின இராஜ்ஜியத்தின் உவமைகளில் ஒன்று.  அது மூன்று வேலைக்காரர்களை பற்றியது.  தங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட தாலந்துகளில் இரண்டு பேர் உண்மையுள்ளவர்களாக இருந்தனர், ஒருவன் மட்டும் சோம்பேறியாகவும் சந்தேகப்பிராணியாகவும் இருந்தான்.  எஜமானுக்கு உபயோகமாக இருந்தவர்கள், மேலான காரியங்களுக்கு அதிபதிகள் ஆக்கப்பட்டனர்.  அசட்டையாக இருந்தவன் தண்டிக்கப்பட்டான்.  ஒவ்வொரு தேவனுடைய பிள்ளைக்கும், அது விசுவாசியானாலும் சரி, ஊழியரானாலும் சரி, அது தனித்துவமான ஒரு வார்த்தை, தாலந்தை தேவன் கொடுத்துள்ளார் என்பது நாம் மறுக்கமுடியாத உண்மை.  தன் வேலைக்காரர்கள் உண்மையுள்ளவர்களாக மட்டுமல்ல, பயனுள்ளவர்களாகவும் இருக்கவேண்டும் என்று எஜமான் விரும்பினார். “நீங்கள் என்னிலும் நான் உங்களிலும் நிலைத்திருந்தால் மிகுந்த கனிகளை கொடுப்பீர்கள்” என்று சொன்னார்.  தனக்கு கொடுக்கப்பட்ட நேரம், தாலந்து, உபகரணங்கள் மற்றும் திறமைகளை வீணடிக்காமல் தேவனுடைய இராஜ்ஜியத்திற்கு மிகுந்த பலனை/லாபத்தை கொடுக்கும் ஒரு வேலைக்காரன், ஒரு தேவஊழியன் கர்த்தருடைய சந்தோஷத்திற்குள்ளாக பிரவேசிக்கும் பாக்கியத்தை பெறுகிறான். ஒருவிதத்தில் இது ஒரு தெய்வீக சமாதானம், இளைப்பாறுதல் மற்றும் ஒரு நித்திய மகிழ்ச்சிக்குள்ளாக பிரவேசிப்பதை குறிப்பிட்டாலும், இன்னொரு விதத்தில், மிகச் சாதாரண அளவில், கர்த்தருடைய சந்தோஷத்தை அனுபவிக்கும் ஒரு வாழ்க்கையாகவும் இதனை நாம் எடுத்துக்கொள்ளலாம். அல்லேலூயா! நம்முடைய பிரயாசம் எப்போதும் கர்த்தருக்கு உழைப்பதும் மற்றும் அவருக்கு கனிக்கொடுப்பதாக மட்டுமே இருந்தால்,  கர்த்தர் மெய்யாகவே நம்முடைய இருதயங்களை நித்திய மகிழ்ச்சியினால் நிரப்புவார்.

 

இராஜ்ஜியத்தின் சந்தோஷம்

 

தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது (ரோமர் 14:17)

 

சந்தோஷம் என்பது நாம் தேவனிடமிருந்து பெற்றுக்கொள்ளும் வரம் மட்டுமல்ல. சந்தோஷம் தேவனுடைய இராஜ்ஜியத்தின் ஒரு பகுதி.  இரட்சிப்பின் ஈவை பெற்று தன்னை தேவ இராஜ்ஜியத்தின் அங்கத்தினராக கருதும் எந்த ஒருவனும் இந்த சந்தோஷத்தை அனுபவிப்பான். இந்த உலகம் கொடுக்கும் சந்தோஷம் சம்பவங்களை சார்ந்தது. அது எப்போதும் தற்காலிகமானது.  ஆனால் பரிசுத்த ஆவியின் சந்தோஷம் என்பது நம்மோடுகூட எப்போதும் இருக்கும் சந்தோஷம்.  இந்த சந்தோஷம் நமக்குள் இருந்தால், எந்த ஒரு மனப்பதட்டமும், மன அழுத்தமும், எந்த தோல்வியும், எந்த காயமும், எந்த கலக்கமும், எந்த நஷ்டமும் நம்மை பாதிக்காது.   நாம் அசைக்கப்படுவதில்லை!

 

ஆனாலும் அனேகர், 10, 20 மற்றும் 30 ஆண்டுகால விசுவாசிகளாக இருந்தும்,   அவருடைய வார்த்தையை பின்பற்றி ஆவியானவருடன் ஐக்கியத்தை பாராட்ட முடியாமல் சந்தோஷம் காணாமல் தடுமாறுகிறார்கள்.

 

தம்முடைய சொந்த சந்தோஷத்தை இயேசுவால் கொடுக்க முடிந்ததற்கான காரணம் என்னவென்றால், அவருக்குள் சந்தோஷம் நிறைவாகவும், அளவற்றதாகவும் இருந்தது. அவர் பிதாவாகிய தேவனோடு நெருங்கி உறவாடினார், அவர் பிரமாணங்களில் உறுதியாக நின்றார், அவர் பரிசுத்த ஆவியில்  நிறைந்தவராக இருந்தார்.

 

ஆகையால், கர்த்தருடைய சந்தோஷம் என்பது ஒரு அடையாளமட்டுமன்று, நாம் அவருக்குள் இருக்கிறோம், அவர் நம்மில் இருக்கிறார் என்பதற்கான ஒரு சந்தேமில்லா ஆதாரம்.

 

சந்தோஷத்தின் பயணம்

 

எபி 12:2 அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.

 

தமது சந்தோஷத்தின் நிறைவினை தம்முடைய சீடர்களுக்கு, தம் மக்களுக்கு தருவேன் என்று வாக்குரைத்த இயேசு, சிலுவைக்கு அப்பால் உள்ள சந்தோஷத்தை அவர் எதிர்நோக்கினார். பரலோக மகிழ்ச்சியை அனுபவிக்க அவர் நிந்தையை பொறுத்துக்கொண்டார்.

நம்முடைய சொந்த வாழ்க்கையிலும், பரலோக சந்தோஷம் அல்லது இயேசுவின் சந்தோஷமானது நாம் ஒரு சகிப்புத்தன்மையின் ஆவியை வளர்த்துக்கொண்டாலே ஒழிய வராது.  நாம் பரலோக சந்தோஷத்தை அனுபவிப்பது மட்டுமல்ல, தேவனுடைய சிங்காசனத்தில் இருக்கும் சந்தோஷத்தையும் நாம் அனுபவிப்போம்.

கர்த்தராகிய தேவன் தாமே உங்களை மேலான சந்தோஷத்தினால், அசாதாரண சந்தோஷத்தினால், நித்திய சந்தோஷத்தினால் நிரப்புவாராக.

 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!

கிறிஸ்துவுக்குள் உங்கள்,

வினோத் குமார்

9840011374

 

 





No comments:

Post a Comment

I WILL COME | PROMISE | GOD'S SHADOW MINISTRIES | MARCH 2025

  I WILL COME AND HEAL HIM PROMISE | MARCH 2025 Mat hew 8:7   And Jesus saith unto him, I will come and heal him   Dearly beloved...