Wednesday, December 2, 2020

இரக்கங்களின் தகப்பன் |தேவநிழல் வாக்குத்தத்த வார்த்தை | டிசம்பர் 2020

 


தேவநிழல் வாக்குத்தத்த வார்த்தை                                                           டிசம்பர் 2020 |
இரக்கங்களின் தகப்பன்!

 

கர்த்தர் யாக்கோபுக்கு இரங்கி, பின்னும் இஸ்ரவேலரைத் தெரிந்துகொண்டு, அவர்களை அவர்கள் தேசத்திலே தாபரிக்கப்பண்ணுவார்; அந்நியரும் அவர்களோடு சேர்க்கையாகி யாக்கோபின் வம்சத்தோடே கூடிக்கொள்வார்கள் (ஏசாயா 14:1)

 

இந்த ஆண்டின் துவக்கத்திலும், நிர்பயா வழக்கில் தூக்குத் தண்டனை தீர்ப்பை பெற்ற கைதிகள் இந்திய ஜனாதிபதியிடம் தங்கள் கருணை மனுக்களை சமர்ப்பித்திருந்தார்கள். அவர்களுடைய மனு ஏற்கப்படவில்லை, குறித்த நாளில் அவர்களுடைய தண்டனை நிறைவேற்றப்பட்டது.   மகளை இழந்த குடும்பத்திற்கும்,  ஒட்டுமொத்த தேசத்திற்கும் அது ஒரு பெரிய நிவாரணமாக அமைந்தது. "நியாயம் வழங்கப்பட்டது"  என்பது  தலைப்பு செய்தியானது.

 

ஒருவேளை, ஜனாதிபதி, கருணை மனுவுக்கு ஒப்புதல் அளித்திருந்தால் தேசத்தின் பிரதிபலிப்பு எப்படி இருந்திருக்கும்? அதிர்ச்சி, ஆச்சரியம், அக்கிரமம்?! என்றெல்லாம் சொல்லி ஜனங்கள் கொதித்தெழும்பியிருப்பார்கள்.  பாதிக்கப்பட்ட குடும்பம் இச்செயலை "அநீதி அநீதி" என்று புலம்பியிருக்கும்.    இக்குற்றம் உண்மையில் ஒரு கொடிய தண்டனைக்கு ஏதுவான குற்றம் என்பதில் சந்தேகமில்லை. ஆனாலும், இப்படிப்பட்ட கயவர்களுக்கும் கருணை (அல்லது இரக்கத்திற்கு)சட்டத்தில் இடம்கொடுக்கப்பட்டுள்ளதே. அது ஏன்?

 

தேவனுடைய நாமம்

கர்த்தர்  அவனுக்கு முன்பாகக் கடந்துபோகிறபோது,  அவர்: கர்த்தர், கர்த்தர்; இரக்கமும், கிருபையும், நீடிய சாந்தமும், மகா தயையும், சத்தியமுமுள்ள தேவன். ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர்; குற்றவாளியைக் குற்றமற்றவனாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர் என்று கூறினார் (யாத்திராகமம் 34:6,7)

ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபின் தேவன் மோசேக்கும் (அவர் மூலம் இஸ்ரவேல் ஜனத்தாருக்கு) வெளிப்படுத்துவது  என்னவென்றால், தேவன் யார் என்பதையும், அவருடைய தன்மை இன்னது என்பதையும்.   தேவனுடைய பண்புநலன்களில் முதலாவதாக பட்டியிலடப்படுவது, அவர் இரக்கமுள்ளவர்.  தேவன் என்றாலே இரக்கத்தின் உருவம் என்று காண்கிறோம். ஒரு ஜனாதிபதியானவர் அடிப்படையில் இரக்கமற்ற நபராக இருக்கலாம். ஆனால், அவருடைய அலுவலகம், அவர் விரும்பினால், தண்டனையை குறைக்க அவருக்கு அனுமதியளிக்கிறது.  ஆனால், தேவனை பொருத்தவரையில், இரக்கம் காண்பிப்பது  அவருடைய தன்மையாகவே உள்ளது. சட்டத்தில் அதற்கான அனுமதி இருந்தாலும், இல்லாவிட்டாலும், அவர இரக்கமுள்ளவராகவே உள்ளார்.  அன்புகூறுவதும், மன்னிப்பதும், கனிவுடன் நடந்துகொள்வதும்  அவருடைய  தனித்தன்மை.  மூலமொழியில்,  இரக்கம் என்ற பதம் மனதுருக்கம், அன்பு மற்றும் கனிவினை குறிப்பிடுவதாகவும் உள்ளது.

ஏன் இரக்கம்?

சட்டத்தின் பார்வையில் மரண தண்டனை விதிக்கப்பட்டவன், அத்தண்டனையிலிருந்து தப்பித்துகொள்ளமுடியாது.   ஆனால் கருணையின் அடிப்படையில் அவன் விடுவிக்கப்படலாம், அவனுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை குறைக்கப்படலாம்.  அதனை நாம் கடின உழைப்பின் மூலம் அல்லது ஏதாவது ஒரு தொகையை செலுத்தியோ பெற்றுக்கொள்ளமுடியாது.  மரணதண்டனை அளிக்கப்பட்ட அல்லது ஆயுள்தண்டனை பெற்றுக்கொண்ட ஒருவர் கருணையை பெற நாடலாம அல்லது கொடுக்கப்படலாம்.  கருணையை பெற்றவர் குற்றவாளி இல்லை என்று தீர்க்கப்படுகிறதில்லை.  அவன் குற்றஞ்சாட்டப்பட்டவன் அல்ல, அவன் குற்றவாளி என்று தீர்க்கப்பட்டவன்.   இந்த குற்றவாளி பெற்றுக்கொள்ளும் தயவு அல்லது இரக்கம் என்னவென்றால், இவனுக்கு வாழ்வதற்கான ஒரு புதிய வாய்ப்பு அளிக்கப்படுகிறது!  இரக்கம் என்பது நம்முடைய தகுதி அடிப்படையில் அருளப்படுவதன்று;   அது கொடுப்பவரின் தாராளமனப்பான்மையின் அடிப்படையிலானது - கருணையை காண்பிக்கிறவரின் மனப்பாங்கு!

யாக்கோபு (அ) இஸ்ரவேல் (அ) சபை

யாக்கோபு தேவனால் தெரிந்துகொண்ட மக்களை குறிக்கிறது.  தேவனுடைய கண்ணின் மணியான இஸ்ரவேல் தேசத்தை குறிக்கிறது.  இன்று திருச்சபை 'ஆவிக்குரிய இஸ்ரவேல்' என்று அறியப்படுகிறது.  இஸ்ரவேல் தேசம் தேவனால் அன்பு பாராட்டப்பட்டு பராமரிக்கப்பட்டாலும்,  தேவனோடுகூட இருந்த உறவில் அவர்கள் அடிக்கடி தடுமாறினார்கள்,   வழிவிலகினார்கள்.  அவர்கள் தங்கள் முதுகை காட்டினதுமட்டுமன்றி, அந்நிய, பொய் தெய்வங்களுக்கு பின்னாக சென்று,  அவர்களை படைத்த, அவர்களை ஆதரிக்கும் தேவனை துக்கபடுத்தினார்கள்.   அவர்கள் எப்பொழுதெல்லாம் வழிதவறினார்களோ, அவர்கள் மிகுதியான பிரச்சனைகளையும், சத்துருக்களினால வந்த ஒடுக்கத்தையும் அனுபவித்தார்கள். அவர்கள்மேல் அளவற்ற அன்பை கொண்ட தேவனால் இதனை பொறுக்கமுடியவில்லை.   சிலவேளைகளில், சத்துருக்களின் கைகளுக்கு அவர்களை ஒப்புக்கொடுத்தார்.   சிலவேளைகளில்  அவர்கள் எதிரிபடைகளால் சிறைபிடிக்கப்பட்டார்கள்.  ஆனாலும் அவர்கள் ஒருகட்டத்தில் மனம் திரும்பி தேவனுக்கு இரக்கத்திற்காக மன்றாடினபோது, தேவனுடைய அநாதி சிநேகமும், அளவற்ற மனதுருக்கமும், புல்லின்மீது பொழியும் அதிகாலை பனிபோல் அவர்களை ஆற்றித்தேற்றி பெலப்படுத்திற்று.  காலைதோறும் அவருடைய கிருபைகள் புதியதாய் உள்ளது. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாராதவர்.  ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அவர் உங்கள்மேலும், என்மேல் பாராடும் இரக்கம் மாறவில்லை. அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர். 

இந்த பன்னிரெண்டாவது மாதத்திலும், நம்மை சுற்றியுள்ள காரியங்கள் இருளாகவும், நிச்சயமற்றதாகவும் தோன்றினாலும், தேவன் தம்முடைய இரக்கத்தின் கரத்தை உங்களை நோக்கி, உங்கள் குடும்பத்தை நோக்கி நீட்டுகிறார்.   நீங்கள் செய்யும் ஒவ்வொன்றையும் - சரியோ தவறோ -  அதனை தேவன் அறிந்தவராக இருக்கிறார். இன்று உங்கள் குற்றங்களை சுட்டிக்காட்டுவதற்கன்று,  தம்முடைய அன்பினை வெளிப்படுத்தவே பிரச்சனமாகி உள்ளார்.

இன்றும் அநேக குடும்பங்களில் ஒரு உற்சாகமற்ற, நம்பிக்கையற்ற, பொருளற்ற சூழலே காணப்படுகிறது.  இன்னும் ஒரு வருடம் தங்கள் வாழ்க்கையில் வரவேண்டுமா என்று அங்கலாய்க்கும் மக்கள் உண்டு.  அவர்களுடைய சிறப்பான முயற்சிகள் வீணானதுமன்றி,  அவர்கள் மரணஇருளின் பள்ளத்தாக்கின் வழியேயும் நடக்கிறார்கள்.

குமாரன் குமாரனை விளிக்கிறான்

இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிடத்தொடங்கினான். (மாற்கு 10:48)

பிசாசு பிடித்த மகளின் தாய் ( மத் 15:22) சந்திரரோகியின் தகப்பன் (மத் 17:15) குருட்டு பர்திமேயு (மாற் 10:48).  இவர்களுக்குள் உள்ள ஒற்றுமை என்ன?  இல்லை, அவர்கள் பெற்றுக்கொண்ட அற்புத விடுதலையை கேட்கவில்லை. இவர்கள் எல்லாரும் இயேசுவானவர் தங்களை சொஸ்தமாக்குவார் என்று அறிந்திருந்தார்கள்.  இவர்கள் எல்லாரும் இயேசுவை நோக்கி விளித்தார்கள்.   இவர்கள் எல்லாரும்  விடுவிக்கப்பட்டார்கள்.  வேறு எதாகிலும்?   ஆம்.  இவர்கள் ஒவ்வொருவரும் இறைமகன் யேசுவிடம் தங்கள் கருணை மனுக்களை  சமர்பித்தார்கள்.  இயேசு இரக்கமுள்ள தேவன் என்ற வெளிப்பாட்டினை இவர்கள் பெற்றிருந்தார்கள்.   இரக்கத்தை நாடுவதினால் இவர்களும் தாங்கள் படும் அவஸ்தை, வேதனை, வலி, மற்றும் நோவிறகான காரணம் தாங்களே என்பதை அறிந்திருந்தார்கள். இவர்கள் ஏன் என்று கேட்கவில்லை? இவர்கள் இரக்கத்தையே நாடினார்கள்!  மனதுருக்கத்தின் தேவன் இயேசு கிறிஸ்து இவர்களுடைய வாழ்க்கையில் ஒரு பெரிய மருரூபத்தை கொண்டுவந்தார். இதனை வாசித்துக்கொண்டிருக்கும் சிலரின் நிலை மேலே காணும் மக்களின் நிலையிலும் சிறப்பானதாக இல்லை.  வாசல்கள் எல்லாம் அடைப்பட்டதினால், உங்கள் எதிர்காலம் இருண்டகாலமாகவே மாறியிருக்கலாம்.   உலகத்தின் காரியங்களில் சிக்குண்டு கிடக்கும் உங்கள் பிள்ளைகளுக்கு என்னவாகுமோ என்று நீங்கள் வேதனைப்பட்டுக்கொண்டிருக்கலாம்!  நீங்கள் அனுபவித்துக்கொண்டிருக்கும் - உடல் மற்றும் உள்ளத்தின் - வியாதி பெலவீனத்திற்கு எந்தவொரு தீர்வும், எந்தவொரு உபாயமும் புலப்படவில்லை!

 தாவீதின் குமாரன் உங்களருகே!  வாய்ப்பினை நழுவவிடாதீர்!  இது புலம்புவதற்கான, குமுறுவதற்கான, ஒப்பாரி வைப்பதாற்கான நேரம் அன்று.   பர்திமேயு தன் முயற்சியை கைவிடவில்லை.  அவன் இயேசுவை கடந்துபோகவிடவில்லை!   கானானிய பெண்ணும்,  சந்திரரோகியின் தகப்பனும் அப்படியே செய்தார்கள்! இது உங்களுடைய நேரம்.   உடனடியாக  இரக்கங்களின் தகப்பனிடன் உங்களுடைய கருணை விண்ணபத்தை அனுப்புங்கள்.  அநுக்கிரகம் செய்ய யாக்கோபின் தேவன் காத்திருக்கிறார்.   நிச்சயமாக, அவர் அதனை புறக்கணிக்கமாட்டார்.

 

அவருடைய கவனத்தை ஈர்த்தல்

தேவனுடைய இரக்கம்,  இரக்கத்தை நாடுபவனின் நிலையினை சாராமல், இரக்கம்செய்பவரின் தயாளகுணத்தை சார்ந்த ஒன்றாக இருந்தாலும்,  இதனை இறைவனிடம் பெற்றுக்கொள்ள நாமும் செய்யவேண்டிய சில படிகளை வேதாகமம் நமக்கு அறிவுறுத்துகிறது.    இரட்சிப்பு தேவனுடைய இலவச ஈவு என்பதை நாம் நன்கு அறிவோம்.  ஆனாலும், நாம்  இரட்சிக்கப்படுவதற்கு, தேவனிடமாய் கேட்கவேண்டும்,  தேவனை விசுவாசிக்கவேண்டும், தேவனண்டை நாம் பாவங்கள் அறிக்கைசெய்யவேண்டும்,   இயேசுவின் நாட்களில் அவரிடம் இரக்கத்தை பெற்றவர்கள் அவருடைய கவனத்தை ஈர்க்க புதிதானதொரு காரியத்தை செய்தார்கள்.  அது நம்முடைய கிரியை அன்று. அது நம்முடைய பங்கு. 

 

அநேக காரியங்கள் உண்டென்றாலும்,  நம்முடைய பக்திவிருத்திக்காக, இந்த செய்தியிலும் பிரதமான நாம் ஐந்து  பகுதிகளை கவனிக்கலாம். இவைகள், என் பார்வையில், தேவனுடைய இரக்கத்தை பெற்று அனுபவிக்க அடிப்படியானவைகள் என்றே கருதுகிறேன். தேவனுடைய இரக்கத்திற்காக நீங்கள் ஜெபித்துக்கொண்டிருப்பீர் என்றால், உங்கள் வாழ்க்கையில் ஆண்டவர் இடைபட்டே  ஆக்வேண்டும் என்ற நிலையில் இருப்பீரானால், என்னுடைய தாழ்மையான ஆலோசனை, இவைகளை சற்றே உற்று நோக்கிடுங்கள். காலத்தால் அழிக்கமுடியாத சத்தியங்கள் இவைகள்.

 

1) தவறை ஒப்புக்கொள்ளுங்கள் - அறிந்தும் அறியாமலும் செய்த தவறுகள்

தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான். நீதி 28:13

இரட்சிக்கப்படுவதற்கு ஒருவர் எப்படி பாவஅறிக்கை செய்யவேண்டியுள்ளதோ, தேவனுடைய இரக்கத்தை பெறுவதற்கு, நாம் தேவனுக்கு முன்பாக காரியங்களை வெளியரங்கமாக்கவேண்டும்.  உங்கள் வாழ்க்கையில்,  அறிக்கைசெய்யப்படாத, கையாளப்படாத பாவம் ஏதாகிலும் உண்டா என்று பரிசோதித்து பாருங்கள்.

2) சிந்தையை செவ்வைப்படுத்துங்கள் -தவறான, எதிரமறையான எண்ணங்கள், அறிக்கைகள்

துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன்  நினைவுகளையும்விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன்; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக்கடவன்; அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார் (ஏசா 55:7)

உங்கள் சிந்தனை வாழ்வு எப்படி உள்ளது? சங்கீதக்காரன் வேண்டுகிறான்,  என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும் உமது சமூகத்தில் பிரீதியாய் இருப்பதாக என்று வேண்டுகிறான்.  மெய்யாகவே எதிர்மறையான சிந்தனைகளை வாழ்கையில் எதிரானவைகளுக்கு வித்திட்டுவிடும்.  நம்முடைய சிந்தனைகளை சீர்ப்படுத்துவதை குறித்து வேதம் அதிகமாய விளம்புகிறது.  உங்கள் சிந்தனைகளை செம்மைபடுத்துங்கள், இரக்கத்தை பெறுவீர்கள்.

3)  ஆண்டவரில் அன்பாக இருங்கள் - கற்பனைகளை கைகொள்ளுதல்

என் தேவனாகிய கர்த்தரை நோக்கி ஜெபம்பண்ணி, பாவ அறிக்கைசெய்து: ஆ ஆண்டவரே, உம்மில் அன்புகூர்ந்து, உம்முடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கு உடன்படிக்கையையும் கிருபையையும் காக்கிற மகத்துவமும் பயங்கரமுமான தேவனே  (தானியேல் 9:4)

உபாகமம் 7:9-ல் தானியேல் மோசேயின் வார்த்தைகளை மேற்கொள்காட்டுகிறார்.  நெகேமியா தீர்க்கத்தரிசியும் நெகேமியா 1:5-ல் இதனையே சுட்டிக்காட்டுகிறார்.  கிருபை என்பது ஆங்கிலத்தில் இரக்கம் என்றெ உள்ளது. இதன் பொருள் என்ன?   நியாயப்பிரமாணமும் தீர்க்கத்தரிசனங்களும் ஓர் குறிப்பிட்ட இடத்தில் இணைகின்றன.    தேவனிடத்தில் அன்புகூரும் மக்களுக்கு தேவனுடைய இரக்கம் உரித்தாகுகிறது.   தேவனுடைய கட்டளைகளை கைகொள்ளும்போது நாம் தேவனிடத்தில் அன்புகூருபவர் ஆகிறோம்.   நம்முடைய அயலகத்தாரில் நாம் அன்புகூறுகையில்  நாம் தேவனில் அன்புகூருகிறோம்.

 

4) இரக்கத்தை காண்பியுங்கள்

இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள், (மத்தேயு 5:7)

மத்தேயு 5-ல் (வசனங்கள் 3-11) காணப்படும் 9 பாக்கிய வசனங்களில் வாழ்க்கையின் இரண்டு துருவங்களை நம்மால் பார்க்கமுடிகிறது.   ஒன்று மனப்பாங்கு, இன்னொன்று பிரதிபலன்.   இவைகள் எல்லாவற்றிலும், இரக்கம் என்ற ஒன்றை கவனிக்கையில்,  நாம் எதனை எதிர்பார்க்கிறோமோ அதனையே முதலில் கொடுக்கவேண்டும் என்று பார்க்கிறோம்.  அநேக தினங்களாக ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் தேவன் தம் இரக்கத்தை உங்களுக்கு வெளிப்படுத்தவேண்டும் என்று போராடிவருகிறீர்களா?  சற்று பரிசோதித்து பாருங்கள்.  ஒருவேளை உங்களுடைய இரக்கத்தை எதிர்பார்த்துகொண்டிருக்கும் யாராவது இருக்கிறீர்களா?  அல்லது நீங்கள் யார்மேலாவது இரக்கம் காட்டமுடியாமல இருக்கிறீர்களா?  இரக்கமுள்ளவன் இரக்கம்பெறுவான்.   கொடுங்கள் அப்பொழுது உங்களுக்கு திரும்பி கொடுக்கப்படும்.  மன்னிப்பு, அன்பு, கனிவை இவற்றை தாராளமாக வெளிப்படுத்துங்கள், நீங்கள் பெற்றுக்கொள்வீர்கள்.

 

 

 

5) தேவனுக்கு பயப்படுங்கள்

அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது (லூக்கா 1:50)

 நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தில், தேவனுக்கு பயப்படுகிற பயமே தொடக்கமாகவும், முடிவாகவும் உள்ளது.  ஞானி சாலொமோன் இரத்தின சுருக்கமாக  ஒரே வரியில் அதனை பதிவிடுகிறார்.  அவர் சொல்கிறார், கர்த்தருக்கு பயந்து அவருடைய கட்டளைகளுக்கு கீழ்படியுங்கள்:  இது மனிதன் விழுந்த கடமை.   கர்த்தருக்கு பயப்படுகிற பயத்தினால் ஞானத்தை அடைவது மட்டுமல்ல,  நாம் இரக்கத்தையும் பெற்றுக்கொள்கிறோம்.    பயம் என்று சொல்லும்போது, தேவனை கண்டு பீதி அடைவதன்று.   தேவன் யாராக இருக்கிறார் என்பதற்காக பயபக்தியுடன் அவரை தொழுதுகொண்டு அவரது கட்டளைகளை கருத்துடன் பின்பற்றுவதாகும்.  இன்றும், தேவனுக்கு பயப்படுகிற பயத்தின் அளவீட்டை சோதித்து பாருங்கள்!

நம்முடைய தவறுகளை அறிக்கைசெய்யும்போது, நம்முடைய சிந்தனைகளை தூய்மையாக்கும்போது, அவரில் அன்பாக இருக்கும்போது, பிறருக்கு இரக்கத்தை வெளிப்படுத்தி அவருடைய கட்டளைகளை எல்லாம் கைக்கொள்ளும்போது நாம் இரக்கத்தை பெற்றுக்கொள்ளக்கூடிய நிலையில் நிற்கிறோம்!

இரக்கம் உங்களை முழுமையாக்குகிறது

இயேசு அவனை நோக்கி: நீ போகலாம், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். உடனே அவன் பார்வையடைந்து, வழியிலே இயேசுவுக்குப் பின்சென்றான் (மாற்கு 10:52)

பார்வையிழந்த பர்திமேயு தான் பார்வை அடையவேண்டும் என்று அதிகமாய விரும்பினபடியால், தேவனை நோக்கி அபயமிட்டான். தேவனுடைய இரக்கமேயன்றி தன்னை வேறு எதுவும் குணப்படுத்தமுடியாது என்பதனை அவன் நன்கு அறிந்திருந்தான்.  அவனுடைய விண்ணப்பத்திற்கு இயேசு செவிசாய்த்து, அவன் வேண்டுதலுக்கு அவர் பதில் அளித்தார். அவன் பார்வையடைந்தான்.   ஆனாலும் இயேசு அவனிடம் வேறொன்றையும் சொன்னார்.  

52-ம் வசனத்தில் 'உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது' என்று தமிழில் உள்ளது.  'இரட்சித்தது' என்ற வார்த்தை மூலபாஷையில் சொஸோ (sozo) என்றுள்ளது.  இதன் உண்மையான பொருள் பொதுவான பாவத்திலிருந்துண்டான இரட்சிப்பை குறிக்கவில்லை.    இது  பாதுக்காக்கப்படுதல், விடுவிக்கப்படுதல், குணப்படுதல், பத்திரப்படுத்தப்படுதல் அல்லது எளியமுறையில் சொன்னால், முழுமையாக்கபடுதல் என்று எடுக்கலாம்.  எந்த ஒரு குறைவும், குறையும் இல்லாத ஒரு நிறைவு. 

ஒருவேளை உங்கள் தனிப்பட வாழ்க்கையில், திருமண பந்தத்தில், உங்கள் வேலையில், உங்கள் குடுபத்தில், உங்கள் சுகவாழ்வில், உங்கள் பொருளாதாரத்தில் ஒரு வரண்ட பாதையில் பயணித்துக்கொண்டிருக்கலாம்.   ஒருவேளை அது உங்களுடைய பாவம், மீறுதல், மதியீனம், சாங்கோபாங்கத்தின் விளைவாகவும் இருக்கலாம்.  இன்றோ, தேவனுடைய இரக்கத்தை தவிர உங்கள் வாழ்க்கை வேறு ஒன்றும் மீட்டெடுக்க முடியாத என்று சொல்லத்தக்க நிலையில் நீங்கள் நின்றுகொண்டிருக்கலாம்.   மீட்பதுமட்டுமல்ல உங்களை முழுமையும் ஆக்கவேண்டும்.   ஏதோ ஒரு காரியத்தில், பகுதியில் நீங்கள் தேவனுடைய இரக்கத்திற்காக கெஞ்சிக்கொண்டிருக்கலாம்.  தேவனோ உங்களுடைய வாழ்க்கையில் முழு பகுதியை மாற்றவிரும்புகிறார்!  விட்டுக்கொடுப்பீர்களா?!

2020-ஆண்டின் இறுதி பருவத்திற்குள் வந்துவிட்டோம்.   கொள்ளைநோயும், இழப்பும், வேதனையும், குழுப்பமும்  நிறைந்த ஒரு ஆண்டாகவே இதுவரையில் இது அமைந்துள்ளது.   சிலர் தங்களுடைய அன்பானவர்களை, சிலர் தங்கள் வேலையை, சிலர் தங்கள் வருமானத்தை, சிலர் உறவுகளை, சிலர் நிம்மதியை, சிலர் தூக்கத்தை, ஏன் இன்னும் ஒரு சிலர் தங்களை நம்பிக்கையே இழந்துபோய் இருக்கலாம்.  நெடுங்காலமாய்க் காத்திருக்குதல் இருதயத்தை இளைக்கப்பண்ணும்; விரும்பினது வரும்போதோ ஜீவவிருட்சம்போல் இருக்கும். (நீதி 13:12)

மனதளவில் அல்லது உடலளவிலான ஒரு பெலவீனம், ஒரு சோர்வு, ஒரு விரக்தி உங்களை வாட்டி எடுக்கிறதா? உங்களை முன்னேறிசெல்லமுடியாதபடி தடுத்துக்கொண்டிருக்கிறதா? ஒருவேளை  உங்களுக்கு தெரிந்தவர், உங்கள் நண்பர் இந்த வழியே பயணித்துகொண்டிருக்கலாம்.    இது இறைமகனை நோக்கை விளிக்கவேண்டிய நேரம்: "தாவீதின் குமாரனே எனக்கு இரங்கும்".   இது நம்முடைய பங்கினை நிறைவேற்றும் நேரம்.

யாக்கோபின் தேவன் நிச்சயமாக உங்களுக்கு இரக்கம்செய்வார்!

தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக!

அவருடைய பணியில்,

வினோத் குமார்,

தேவநிழல் ஊழியங்கள்

9840011374, 9840995057

(எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்)

No comments:

Post a Comment

I WILL COME | PROMISE | GOD'S SHADOW MINISTRIES | MARCH 2025

  I WILL COME AND HEAL HIM PROMISE | MARCH 2025 Mat hew 8:7   And Jesus saith unto him, I will come and heal him   Dearly beloved...