Sunday, June 6, 2021

சத்தியம்#4 தேவத்தீர்மானம் (இறந்தோரும் இருப்போரும்)

 


 

சத்தியம்#4 தேவத்தீர்மானம் (இறந்தோரும் இருப்போரும்)

அதற்கு இயேசு: மரித்தோர் தங்கள் மரித்தோரை அடக்கம்பண்ணட்டும்; நீ போய், தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கி என்றார் (லூக்கா 9:60).

இராஜாக்களின் புத்தகத்திலே நான்கு குஷ்டரோகிகளை பற்றிய ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை நாம் வாசிக்கிறோம்.   இவர்கள் பட்டணத்தில் வாசலுக்கு வெளியே பிச்சையெடுத்து பிழைத்துவந்தார்கள்.   அந்த நாட்களில் தேசம் இருபெரும் சவால்களை சந்தித்துக்கொண்டிருந்தது.  ஒரு பக்கம் கொடிய பஞ்சம், இன்னொரு பக்கம் தேசத்தை சிறைபிடிக்க காத்திருக்கும் எதிரி நாட்டு படை.  சாப்பிட ஒன்றும் கிடைக்காததால் இந்த நான்கு பேரும், துணிவுகொண்டு, எதிரிகளின் பாளையத்திற்குள் செல்ல முடிவெடுக்கிறார்கள். அவர்களுக்கு ஒன்று புரிந்துவிட்டது.  சாவு நிச்சயம்.  பட்டினியால் வருமா அல்லது எதிரிகளின் பட்டயத்தினால் வருமா என்பதே கேள்வி?  துணிந்தவனுக்கு துக்கம் இல்லை என்பது போல், அவர்கள் புறப்பட்டார்கள்.  கிடைத்தால் சாப்பிடுவோம், இல்லாவிடில் சாவோம் என்று முன்னேறினார்கள்.

கதையில் ஒரு எதிர்பாராத திருப்பம்.   எதிரிகளின் பாளையத்தில் ஒரு ஈ காக்காவும் இல்லை.  உணவுபொருட்களையும், விலையேறப்பெற்ற சகலவித வஸ்துக்களையும் அங்கேயே விட்டுவிட்டு அவர்கள் எங்கு மாயமானர்கள் என்று தெரியவில்லை. அது ஒரு தேவச்செயல். தேவையான பொருட்களை எல்லாம் எடுத்துகொண்டு அங்கேயிருந்து அவர்கள் அமைதியாய் நழுவியிருக்கலாம். ஆனால் அவர்கள் அப்படிச்செய்யவில்லை,  இந்த அச்சர்யமான நற்செய்தியை இராஜாவிடம் சொல்லவேண்டும் என்று தீர்மானித்தார்கள்.

இது நமக்கு  தெரிந்த கதை தான்.  அறியாத மக்களுக்கு சுவிசேஷத்தை அறிவிக்கும் பொறுப்பினை உணர்த்துவதற்கு அடிக்கடி சொல்லப்படும் கதை.

ஆனாலும்,  இருப்போர் அல்லது இன்னும் பிழைத்திருப்போரின் பார்வையில் இதனை நான் இவ்விதமாய் அணுக விரும்புகிறேன்.

 (1) இந்த குஷ்டரோகிகள் ஒரு அநிச்சயமான, ஒரு பாதகமான, உதவி கிடைக்கபெறாத ஒரு சூழலிலே வாழ்ந்துவந்தார்கள் - நாமும் கூட!

 

(2) பஞ்சத்தினால் அநேகர் மடிந்திருக்கலாம். அடுத்தவேளை உணவில்லாத இவர்களுடைய வீட்டு கதவையும் மரணம் தட்டாமல் இல்லை - நம் நிலையும் அப்படியே!

 (3) பிழைத்திருக்கும்படிக்கு இவர்கள் அறிவீனமாய் தோன்றும் ஒரு காரியத்தை செய்ய துணிகிறார்கள்.  எதிரிகளின் கூடாரத்திற்குள் நுழைவது என்பது சிங்கத்தின் வாயில் கையை விடுவது போல்தான்!   தப்பிக்கவே முடியாது.   ஆனாலும், சும்மா இருந்து சாவதை காட்டிலும் ஒன்றை முயற்சித்துத் தான் பார்போமே என்று தீர்மானித்தார்கள் - நாமும் அப்படி செய்தால் என்ன?

 

(4) தேவனுடைய முன்தீர்மானத்தின்படியே  அவர்களுடைய வாழ்க்கை ஆச்சரியமாய் காக்கப்பட்டது.   ஒருவேளை உணவுக்காக அவர்கள் காக்கப்பட்டார்களா? இல்லை, ஜீவகாலம் முழுவதும் சுகித்து வாழ்வதற்கு அவர்கள் காக்கப்பட்டார்கள்.   இராஜாவுக்கு இதனை அறிவிக்கும்படி அவர்கள் காக்கப்பட்டார்கள்.   எதிரிகளின் கையிலிருந்து இவர்கள் தப்பித்துக்கொண்டார்கள் என்றல்ல,  இவர்கள் தேவனால் காக்கப்பட்டார்கள்.  - நாமும் காக்கப்பட்டுள்ளோம், யாரால்?!

இப்பெருந்தொற்று நாட்களில் நாம் நம்முடைய உறவுகளை இழந்தது என்னவோ உண்மைதான். ஒரு ஈடுசெய்யமுடியாத இழப்பு.

பிழைத்திருக்கும் நாம், ஒன்று இந்த வியாதியை வென்றவர்களாய் இருப்போம் அல்லது இதுவரையில் அதன் பாதிப்புக்கு ஆளாகாமல் இருப்போம்.

சாவை எதிர்பார்த்திருந்த அந்த குஷ்டரோகிகளை,  தேவன் ஒரு பெரிதான நோக்கத்துடன் காப்பற்றினார்!

என்னையும் தேவன் இந்த நாட்களில் காப்பாற்றியிருப்பது, என் வாழ்க்கையை அனுபவிப்பதற்கு மட்டுமல்ல,  ஒரு நற்செய்தியை அறிவிப்பதற்கும்.  இயேசுவே ஆண்டவர் என்றும் அந்த அற்புதமான செய்தியை பரைசாற்றுவதற்க்கு.

நாம் பிழைத்திருப்பதற்கு நம்முடைய ஆரோக்கியமா காரணம்? இல்லை. அது அவருடைய தயவு, அவருடைய தீர்மானம். அவருடைய நோக்கம் நம்மில் நிறைவேறும்படிக்கே நாம் பிழைத்திருக்கிறோம்.

குஷ்டரோகிகள் தாமதிக்கவில்லை.   'வாருங்கள் போவோம்' என்றார்கள்.  உங்கள் பிரதியுத்தரம் என்ன?

நாளை….

 

 

No comments:

Post a Comment

I WILL COME | PROMISE | GOD'S SHADOW MINISTRIES | MARCH 2025

  I WILL COME AND HEAL HIM PROMISE | MARCH 2025 Mat hew 8:7   And Jesus saith unto him, I will come and heal him   Dearly beloved...