தேவனுடைய
பிரியம்
சங்கீதம் 149:4 கர்த்தர் தம்முடைய ஜனத்தின் மேல் பிரியம் வைக்கிறார்; சாந்தகுணமுள்ளவர்ளை இரட்சிப்பினால்
அலங்கரிப்பார்
2021-ஆம் ஆண்டின் சரிபாதிக்குள்
வந்துவிட்டோம். இந்த ஆண்டு இப்படிப் போகும்
என்று நாம் ஒருவரும் எதிர்பார்க்கவில்லை. ஏப்ரல் மே மாதங்கள் நமக்கு ஒரு விடுமுறையின் காலம். சொந்த ஊர், சுற்றுலா தலங்கள் என்று மனமகிழ்ச்சியாய்
நம்முடைய விடுப்பை கழித்துவந்தோம். ஜூன் வந்ததும்
சாலைகள் பள்ளிக்கு செல்லும் பிள்ளைகளின் ஆரவாரத்தினால்
கலைகட்ட தொடங்கும். அந்த நாட்கள் திரும்புமோ? இனி வரவேண்டும் என்று நம்புகிறோம், ஜெபிக்கிறோம்.
சுற்றி நடக்கும் காரியங்கள் நம்மை கலங்கவைக்கிறது. எங்கும் பயம், கவலை, கூச்சல், குழப்பம். அன்பு உறவுகளின் எதிர்பாரா மறைவு தேறின விசுவாசிகளையும்
தடுமாறச் செய்கிறது. இனி சம்பவிப்பது என்ன? வரிசையில் அடுத்து யார்?
பாடுபட்ட பக்தன்
சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக யோபு என்ற ஒரு மனிதன்
வாழ்ந்துவந்தான். தேவனுக்கு பயந்து அவருடைய வழிகளிலே நடந்த ஒரு உத்தமன். நன்மை ஒன்றும் குறைவுபடாத பாக்கியவான். ஒரு குறிப்பிட்ட நாளில் அவனுடைய குடும்பத்தின்
தாக்கின் சூறாவளிக் காற்று அவனுடைய எல்லாவற்றையும் ஒரே நாளில் அழித்துபோட்டது. பேர், புகழ், அந்தஸ்து, சொத்து, சுகம், பிள்ளைகள்
என்று எல்லாமே ஒருசேர தரைமட்டமானது. சரும தொற்றுக்கு ஆளான அவன் தன் இறைநம்பிக்கையை உதறிவிட்டு இறந்திடவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டான். அதனை
அவன் ஏற்கவில்லை, ஆனாலும் அவன் படும் பாடுகளுக்கான காரணத்தை அவனால் புரிந்துகொள்ளமுடியவில்லை. தேவனோடு அவனுக்கு உண்டான ஒரு அற்புத சந்திப்பு அவன்
பார்வையை மாற்றியது. கேள்விகளுக்கு பதில் கிட்டவில்லை
என்றாலும், அவனுடைய உறுதிக்கான பலனை அவன் இரட்டிப்பாய்
பெற்றிட்டான். நம்முடைய நெருக்கத்தின் நாட்களிலும்,
அநிச்சயமான சூழ்நிலையிலும், நாம் புலம்பிக்கொண்டிராமல், தேவனை கேள்விக்கேளாமல், அன்று
யோபு சொன்ன அந்த வாக்கியத்தை நாமும் சொல்லிப் பழகவேண்டும்."தேவரீர் நீர் சகலத்தையும் செய்யவல்லவர். நீர் செய்ய
நினைத்தது தடைபடாது" அன்று யோபு சொன்ன அதே வசனத்தை நாமும் சொல்லிடவேண்டும். ஆம். யோபின் பதில் தேவனுக்கு பிரியமாய் இருந்த காரணத்தினால்
தேவன் அவனை இரட்டிப்பாக ஆசீர்வதித்தார்!
அவருடைய ஜனம், அவருடைய பிரியம்
1 கொரி 10:5
அப்படியிருந்தும், அவர்களில் அதிகமானபேர்களிடத்தில் தேவன் பிரியமாயிருந்ததில்லை, ஆதலால் வனாந்தரத்திலே அவர்கள் அழிக்கப்பட்டார்கள்.
தம்முடைய ஜனத்தை (இஸ்ரவேலை)ஆசீர்வதிப்பதே கர்த்தருக்கு
பிரியம் என்று வேதம் உரைக்கிறது. அவர்களுக்கு
கஷ்டத்தையும் வேதனையையும் உண்டாக்க அவர் ஒருபோதும் விரும்புவதில்லை. தேவஜனங்கள் அவரை விட்டு விலகும்போது பாடுகளை அனுபவித்தார்களே
ஒழிய மற்றபடியல்ல. அது தேவனால் உண்டானதன்று,
அது அவர்களுடைய கீழ்ப்படியாமையின் பலன். ஆனாலும்,
அவர்கள் மனந்திரும்பி தேவனிடமாய் திரும்பும்போது,
தேவன் அவர்களை குணப்படுத்தி தேசத்திற்கு சேமத்தை அருளவே விரும்பினார். தேவனுக்கு பிரியமல்லாத வழிகளை நாம் தெரிந்தெடுக்கும்போதும்
அல்லது தேவனுக்கு பிரியமாய் நாம் நடந்துகொள்ளாதபோதும் நம்முடைய வாழ்க்கையை குறித்த
தேவதீர்மானங்கள் தடைபடுகின்றன். தேவனுடைய பிள்ளைகள் என்று அறியப்படலாம். விசுவாசிகள் என்ற பட்டப்பெயரையும் பெற்றிடலாம்.
அபிஷேகம் பெற்று அந்நிய பாஷைகளையும் பேசிடலாம். ஆனால் நாம் தேவனுக்கு பிரியமில்லாத ஒரு வாழ்க்கையை
வாழ்ந்துகொண்டிருப்போமானால், வனாந்திரத்தில்
அலைந்து திரிந்து, நாம் போய்சேரவேண்டிய இடத்தை
அடையாமலேயே நம் ஓட்டத்தை முடித்துவிடுவோம்.
அவருடைய ஜனங்களுக்கு தேவன் வாக்குப்பண்ணியுள்ள நன்மைகளும்,
ஆசீர்வாதங்களும் ஒப்பற்றவை. மேலும்
காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை
நோக்கியிருக்கிற நமக்கு
அதிசீக்கிரத்தில் நீங்கும்
இலேசான நம்முடைய
உபத்திரவம் மிகவும்
அதிகமான நித்திய
கனமகிமையை உண்டாக்குகிறது
(2 கொரிந்தியர்
4:17)
இந்த இக்கட்டான
காலத்திலும், கர்த்தர் நமக்கு அருளும் ஒரு
வாக்குத்தத்தம், ஒரு நம்பிக்கையின் வார்த்தை, "கர்த்தர் உன்மேல் பிரியமாய்
இருக்கிறார். கர்த்தர் இரட்சிப்பினால உன்னை
அலங்கரிப்பார்". ஆமென்.
தம்முடைய ஜனத்தின் மேல், உண்மையில், தேவனுக்கு ஒரு அளவற்ற
பிரியம் உண்டு. ஒரு நன்மையையும் அவர்களுக்கு
அவர் வழங்காதிரார். ஆனாலும், இந்த வார்த்தை
நிதர்சனமாக, இந்த வாக்குத்தத்தம் நிறைவேற, அவருடைய ஜனமாய் இருக்கும்படி அழைக்கப்பட்ட நாம்
அவருடைய ஜனமாக நிலைத்திருக்கவேண்டும். இந்த தியானத்திலும், தேவன் தம்முடைய ஜனங்களிடத்தில் எதிர்பார்க்கும்
ஐந்து முக்கிய தகுதிகளை, ஐந்து காரணிகளை
நாம் இப்போது கவனித்திடுவோம். இப்படிபட்டவர்களிடத்தில்
தேவன் தம் பிரியத்தை வைக்கிறார்
(1) அவருக்கு பயப்படுவோர் (துதி, கனம், மகிமை)
தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல்
கர்த்தர் பிரியமாயிருக்கிறார் (சங்கீ 147:11)
தேவனுக்கு பயப்படுவது என்றால் என்ன? அவரை கண்டு அஞ்சுவதா? இல்லை.
அவர் யாராக இருக்கிறார் என்பதை புரிந்துகொண்டு அவரிடத்தில் நாம் வெளிப்படுத்தும்
ஒரு பயபக்தி, ஒரு மரியாதை. சுருங்கச் சொன்னால்,
கர்த்தருக்கு பயப்படுவது என்பது அவருடைய கட்டளைகளை கைகொள்வது, அவருடைய வழிகளிலே நடப்பது, பரிசுத்த வாழ்க்கை வாழ்வது, தீமையை வெறுப்பது போன்றவைகள். இப்படிபட்டவர்களிடத்தின் தேவன் பிரியமாய் இருக்கிறார். பயம் என்ற வார்த்தை வேறு ஒரு பொருளையும் கொண்டது. ஒருவித பீதி, அச்சம், கலக்கம், நடுக்கம். இருள்சூழ்ந்த இந்த நாட்களிலே, அநேகர் பயத்தின்
பிடியில் சிக்கியுள்ளார்கள். வேதம் சொல்லுகிறது, தேவன் மனிதனுக்கு பயத்தின் ஆவியை கொடாமல், அன்பு, பெலன் மற்றும் தெளிந்த புத்தியை தந்துள்ளார்
என்றே சொல்லுகிறது (2 தீமோ 1:7). பயத்தின்
ஆவி பிசாசினிடத்திலிருந்து நமக்கு வருகிறது.
வியாதியை குறித்த பயம், மரணத்தை குறித்த பயம், எதிர்காலத்தை குறித்த பயம் என்ற
பல்வேறு பயவுணர்வுகள். "பயப்படாதே"
சொல் வேதாகமத்தில் 365 தடவை வருகிறதாம். வருடத்தில் 365 நாட்கள் என்றால் ஒவ்வொரு நாளும்
நாம் பயப்படாமல் வாழ்வேண்டும். பயம் என்பது
ஒரு இயற்கையான உணர்வென்றாலும், பயம் ஒரு ஆவியாக மாற நாம் இடமளிக்கக்கூடாது. அது நம்முடைய
சுபாவத்தையே மாற்றிப்போடும், ஆட்கொள்ளும் ஒரு காரியமாக அது மாறிவிடக்கூடாது. பூரண அன்பு
பயத்தை புறம்பே தள்ளும்.
கர்த்தருக்கு பயந்து அவருக்கே மகிமை செலுத்துங்கள்!
(2) அவரை நம்புவோர் (உறுதியான விசுவாசம்)
விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான், பின்வாங்கிப்போவானானால்
அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார் (எபிரேயர் 10:38)
கர்த்தருக்கு பயப்படுகிறவன், அவர்மேல் தன் நம்பிக்கையை
வைத்திடுவான். எபிரேயருக்கு எழுதின நிருபத்தில், அதன் ஆக்கியோன் திட்டமும் தெளிவுமாக சொல்லுகிறார் "விசுவாசமின்றி தேவனை பிரியப்படுத்துவது கூடாத காரியம்" என்று(எபிரேயர்
11:6). சந்தேகிக்கிற, கேள்விக்கேட்கிற, கலக்கமடைகிறவனிடத்தில்
தேவன் பிரியமாய் இரார். உங்கள் விசுவாசம் ஒருவேளை அற்பமாகவும், குறைவாகவும் இருக்கலாம். ஆனால் அது பெருகவேண்டும் என்ற ஒரு வாஞ்சை, விருப்பம்
இருக்கவேண்டும். செவிடும் ஊமையுமான ஆவியை
கொண்ட மகனின் தந்தை எப்படி "என் அவிசுவாசம் நீங்கும்படி எனக்கு உதவிசெய்யும்"
என்று கேட்டதுபோல நாமும் விசுவாசத்தை துவக்குபவரும் முடிக்கிறவருமாகிய இயேசுவை நோக்கி
விசுவாசிக்கும் கிருபையருளும்படி வேண்டிக்கொள்ளவேண்டும். விசுவாசிக்கிறவன் மெய்யாகவே தேவமகிமையை காண்பான்
(யோவான் 11:40)
நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம்.
(3) அவருடைய இரக்கத்தை நாடுவோர்(கிரியை அல்ல கிருபை)
தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர்பிரியமாயிருக்கிறார்.
(சங்கீ 147:11)
தேவனுடைய இரக்கத்தின்மேலும், அவருடைய அன்புள்ள தயவின்மேலும்
நம்பிக்கை உடையவர்கள் யார்? தேவன் இரக்கமும்,
உருக்கமும், நீடியசாந்தமும், கிருபையுமுள்ளவர் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். தேவன் இரக்கமுள்ளவர் என்ற அறிவை கொண்டிருப்பது ஒன்று,
அந்த அறிவின்மேல் சார்ந்திருப்பது முற்றிலும் வேறொன்று. முந்தைய வசனத்தில், சிலர் குதிரைகளின் பலத்திலும்,
வீரனுடைய கால்களிலும் தங்கள் நம்பிக்கையை கொண்டிருப்பார்கள். அது நம்முடைய கிரியைகள், முயற்சிகள், ஜெபங்கள், காணிக்கைகள் மற்றும் நம்முடைய சொந்த வழிகளை குறிப்பிடுகிறது. பணபெலமும் ஆள்பெலமும் நம்மிடம் இருக்கலாம். ஆனால் அது நம்முடைய பெருமையாக, வலிமையாக, அஸ்திபாரமாக
மாறிவிடக்கூடாது. இந்த நாட்களில் அடிக்கடியாய்
நாம் கேள்விப்படும் ஒரு செய்தி. அதிக சொத்துக்களும், கோடிக்கணக்கான பணமும், மிகுந்த
செல்வாக்கும் கொண்ட மனிதர்களும் புகழ்பெற்ற மருத்துவமனைகளில் இத்தொற்றை வெல்லமுடியாமல்
மரிக்கிறார். மெய்யாகவே, அவர்களுடைய பணமோ,அதிகாரமோ அவர்களை காப்பாற்றமுடியவில்லை. தன் பெலத்தை சாராமல் தேவனுடைய நித்திய இரக்கம்
மற்றும் அவருடைய அன்புள்ள தயவின்மேல் நம்பிக்கை வைத்து அவரையே நோக்கி கூப்பிடும், அவரை
நாடும் மனிதர்மேல் தேவன் எப்போதும் தம் பிரியத்தை
வைக்கிறார். "தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும்" என்று
கூக்குரலிட்ட பார்வையற்ற பர்திமேயுவின் பக்கம் இயேசுவின் கவனம் திரும்பிற்று.
கர்த்தரின் இரக்கங்களை என்றும் பாடுவேன்
(4) மனத்தாழ்மையுடையோர் (இணக்கமுள்ளவர், சமாதானம் விரும்புவோர்)
கர்த்தர் தம்முடைய ஜனத்தின்மேல் பிரியம் வைக்கிறார்;
சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார் (சங்கீ 149:4)
அவர் சாந்தகுணமுள்ளவர்களை, இணக்கமுள்ளவர்களை அல்லது தாழ்மையுடன்
இருப்பவர்களுக்கு 'இரட்சிப்பை அலங்காரமாக உடுத்துகிறார்' என்று வாசிக்கிறோம். பரிசுத்த
வேதாகமம், தாழ்மையுள்ளவர்களுக்கு, சாந்தகுணமுள்ளவர்களுக்கு எண்ணற்ற நன்மைகளை வாக்குப்பண்ணுகிறது. நம்முடைய ஜெபங்கள், உபவாசங்கள், காணிக்கைகள்,
நற்கிரியைகளை இவைகள் எல்லாவற்றிலும் தேவன் நம்முடைய மனத்தாழ்மையில் பிரியப்படுகிறார்.
1 பேதுரு 5:5 சொல்லுகிறது," பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்". நிச்சயமாகவே, நாம் தேவனுக்கு விரோதமாக நிற்கமுடியாது.
நாம் தேவன் பட்சத்தில் இருக்கவேண்டும். தேவன் நம் பட்சத்தில் இருக்கவேண்டும். சாந்தகுணமுள்ளவர்களை
தேவன் எப்படியெல்லாம் அலங்கரிக்கிறார் என்பதை சங்கீதங்களின் புத்தகம் நமக்கு பட்டியலிடுகிறது
(1) தேவனருளும் திருப்தி(22:26)
(2) தேவவழிநடத்துதல்(25:9)
(3) தேவனுடைய சுதந்தரம் (37:11)
(4) தேவசமாதானம் (37:11)
(5) தேவனால் வரும் உயர்வு(147:6).
இந்த ஒவ்வொரு ஆசீர்வாதத்தையும் நீங்கள் சுதந்தரிகக்வேண்டும்
என்பதே தேவனுடைய விருப்பம்! அல்லேலூயா!
சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்.
(5) நற்காரியங்களை செய்திடுவோர் (கனிவுள்ள தயவினால் உண்டாகும் செயல்கள்)
அன்றியும் நன்மைசெய்யவும், தானதர்மம்பண்ணவும் மறவாதிருங்கள்;
இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார் (எபி 13:16)
கிறிஸ்து இயேசுவுக்குள் நற்கிரியைகளுக்காகவே நாம் உண்டாக்கப்பட்டுள்ளோம்
என்று வேதம் நமக்கு சொல்லுகிறது. மனுஷருக்கு
முன்பாக நம்முடைய ஒளி பிரகாசித்தாலேயொழிய தேவனுடைய நாமம் நம்முடைய வாழ்க்கையில் மகிமைப்படாது. ஒரு கிறிஸ்தவன், ஒரு விசுவாசி, ஒரு அபிஷேகம் பெற்றவன்
தனக்காக வாழும்படி அழைக்கப்படவில்லை. தேவனுக்கு
பயப்படுதல், அவரை நம்புதல், அவர் இரக்கத்தை நாடுதல் மற்றும் தாழ்ந்துபோதல் எல்லாம்
நல்லது. ஆனால், அவைகள் எல்லாம் நம்முடைய பக்திவிருத்திக்கே. இயேசுவின் பிள்ளை இயேசுவைப் போல் இருப்பான். இயேசுவைப் பற்றி வேதம் சொல்லுகிறது, அவர் ஊழியம்
கொள்ளும்படி வராமல், ஊழியம்செய்யவே வந்தார் என்று. கிறிஸ்துவின் சரீரத்திலேயும்,
அதற்கு வெளியிலும் நீங்கள் வெளிப்படுத்தும் உங்களுடைய உதாரத்துவமான கொடுத்தல், தளராத
உழைப்பு, சிந்தித்து செயலாற்றும் நற்காரியங்கள் மிகமிக முக்கியமானவை. ஒருவேளை நம்முடைய தசமபாகம், காணிக்கை, ஆவிக்குரிய
ஜீவியம் போன்றவைகளில் நாம் உண்மையுள்ளவர்களாய் இருக்கலாம். ஆனாலும்,
இவைகளில் பலி காணப்படுகிறதா? வெட்டப்படுதல்,
கொல்லப்படுதல், இரத்தம்சிந்துதல் இல்லாமல் பலி இருக்காதல்லவா? பலி நமக்கு வலியை கொண்டுவரவேண்டும். உங்கள் நற்கிரியைகளில் தியாக உணர்வு இருக்கவேண்டும்.
எகிப்தை விட்டு புறப்பட்டு கானானை நோக்கி பயணித்த இஸ்ரவேல் ஜனங்கள் சொற்பகால அசெளகரியங்களை
பொறுக்க இயலாமல் புலம்பினர். இயேசுவானவர் தன்னுடைய பரலோக செளகரியாங்களை துரந்தாலேயொழிய
பூமியில் பிறக்கமுடியாது. அவர் தேவனுடைய குமாரனாக
இருந்தாலும், ஒரு சாதாரண மனிதனை போல் வாழ்ந்தார்.
தாகத்தையும், பசியையும், களைப்பையும் உணர்ந்தார். அவர் களிகூரவும் அழவும் செய்தார். அவர் நன்மை
செய்பவராகவே சுற்றித் திரிந்தார். "இவர் என் நேசக்குமாரன், இவரில் நான் பிரியமாய் இருக்கிறேன்" என்ற சாட்சியை
தன் பிதாவிடம் திரும்ப திரும்ப பெற்றுக்கொண்டார்.
தீமையை விட்டு விலகி நன்மை செய்.
இயேசுவாக இருந்திடு
இயேசுவானவர்
பூமியில் வாழ்ந்த நாட்களில், இரண்டு தருணங்களில், பிறர் பார்க்கும் வண்ணம் வானத்திலிருந்து
ஒரு சத்தம் உண்டானது. அது, "இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் நான்
பிரியமாயிருக்கிறேன்" என்று பரமதந்தை குமாரன் இயேசுவை பற்றி சொன்ன வார்த்தைகள்.
ஞானஸ்நானம்
எடுக்கும்போது, பிதாவின் சித்தத்திற்கு அவர் தம்மை முழுவதுமாக ஒப்புக்கொடுத்தது வெளிப்பட்டது. மறுரூப அனுபவத்தில் அவர் நியாயப்பிரமாணம் மற்றும் தீர்க்கத்தரிசனங்களின் நிறைவேறுதலாக இருக்கிறார்
என்பது காணப்படுகிறது. பிதாவின் விருப்பத்தை
நிறைவேற்றும் தன் மகன் இயேசுவில் தேவன் மிகவும் பிரியமாயிருந்தார்!
கிறிஸ்தவர்
என்ற பெயரை பெற்றிருப்பது மட்டும் தேவனை பிரியப்படுத்தாது. எப்படி இயேசுவின் வாழ்க்கையும், கீழ்ப்படிதலும் தேவனுக்கு
பிரியமாய் இருந்ததோ, எப்படி இயேசுவின் நாமம் எல்லா நாமங்களை காட்டிலும் மேலான நாமமாக
உயர்த்தப்பட்டதோ, மெய்யாகவே, தேவன் நம்முடைய
வாழ்க்கையை அவருடைய இரட்சிப்பினால், அவருடைய
நன்மையினால், அவருடைய கிருபையினால் அலங்கரிப்பார்.
அல்லேலூயா!
கர்த்தர்
உங்களை ஆசீர்வதிப்பாராக.
அவருடைய பணியில்!
வினோத் குமார்.
தேவநிழல்
ஊழியங்கள்