கொந்தளிக்கும் அலைகள் (5/14)
நிதானம்
ஏசாயா 26:3 உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.
மருத்துவ பணியார்கள்,
குறிப்பாக தலைமை மருத்துவர், பணி மருத்துவர், செவிலியர்கள் பற்றி நான் அதிகமாய்
சிந்திப்பதுண்டு. இரவும்பகலும் பாராமல்
உயிர்காக்க, உயிர்மீட்க அவர்கள் எடுக்கும் முயற்சிகளை நாம் சொற்களால்
பாராட்டமுடியாது. ஆக்சிஜன் பற்றாக்குறையினால்,
படுக்கை கிடைக்காததால், சிகிச்சை பலனளிக்காததால் மரிக்கும் நூற்றுக்கணக்கான மக்களை
குறித்த செய்திகளை கேட்பதே நமக்கு மன அழுத்தத்தை, கலக்கத்தை உண்டாக்குகிறது. தங்களுடைய பணத்தை எல்லாம் செலவழித்து, தங்களால்
ஆன முயற்சியை எல்லாம் எடுத்தபின்னும் தங்கள் உறவுகளை மீட்கமுடியாத மக்களுண்டு. பணம் இருந்தும் ஆக்சிஜன் தட்டுப்பாடு அல்லது
மருத்துவமனையில் இடம் கிடைக்காததால் தங்கள் அன்பானவர்களை இழந்தோர் உண்டு. சொந்தங்களை
இழந்த பந்தங்களால அதிர்ச்சியை தாங்கமுடியவில்லை.
யாரை குற்றம்சொல்லுவது? சம்பவத்தை
சகித்துகொள்ளமுடியாமல் அவர்கள் குமுறுகிறார்கள், கூச்சலிடுகிறார்கள்,
புலம்புகிறார்கள்.
சில
இடங்களில் உயிர்காக்க செவிலியர்களும் மருத்துவர்களும் தெய்வமாக
மதிக்கப்படுகிறார்கள், மிகுதியாய் போற்றப்படுகிறார்கள். ஆனால், சில இடங்களில், எதிர்பாராதது
நடக்கும்போது, அவர்கள் உறவினர்களின் உக்கிரத்துக்கு ஆளாகிறார்கள். அடியும் உதையும் வாங்கவேண்டியுள்ளது. வேதனையிலும்
வேதனை இது! உயிர்போகாமல் காக்க அவர்கள் கடவுள்கள்
இல்லையே?!
ஆனாலும்,
அவர்கள் தங்கள் நிதானத்தை, கவனத்தை, பொறுமையை, கடமையுணர்வை
இழந்துவிடக்கூடாது. இழப்பதுமில்லை. ஒரு உயிரை காக்கமுடியாதுபோனாலும்,
எஞ்சியுள்ளவர்களை காக்கவேண்டுமே என்ற தீவிரத்தன்மை
அவர்களை பற்றிக்கொள்கிறது. துரதிருஷ்டவசமாய், செய்தி ஊடகங்கள்
மரித்தவர்கள் எண்ணிக்கை படம் போட்டு காட்டுவதை விட்டுவிட்டு இவர்களால்
மீட்கப்பட்டவர்களின் விவரங்களை ஏன் பட்டியிலடக்கூடாது. மெய்யாகவே முன்களப் பணியாளர்களான நம்
மருத்துவர்கள் நமக்காக யுத்தமுனையில், தங்கள் உயிரையும் தங்கள் குடும்பத்தையும்
பாராமல் போராடுகிறார்கள். எவ்வளவு
நிதானத்துடன் அவர்கள் பணியாற்றவேண்டும்? சிந்தித்துப்பாருங்கள்.
யாருடைய
மனது தேவனை பற்றி இருக்கிறதோ அவனையே அல்லது அவனுக்கே தேவன் பூரண சமாதானத்தை
(நிதானம், அசைவுறாத நிலை) கட்டளையிடுகிறார் என்று வாசிக்கிறோம். ஒருவேளை நம்முடைய மனது தேவனை பற்றிக்கொள்வதை
விட்டுவிட்டு சூழ்நிலைகள், பிரிவு, மரணம் அல்லது தொடரும் அபாயங்களை
சிந்தித்துக்கொண்டிருக்குமானால், நமக்கு சமாதானம் இராது.
புயல்வீசும்
கடலில் அலைமோதும் படகில் இயேசுவானவர் நிம்மதியாய் உறங்கினார். சீடர்கள் தங்கள் கதை முடிந்ததென்றே நினைத்தார்கள். ஆனால் இயேசுவோ அப்படி யோசிக்கவில்லை. அவருடைய மனம் முழுவதும் பிதாவிலும், பிதாவின்
திட்டத்திலும் நிலைத்திருந்ததினால். எந்தவொரு சூறாவளியானாலும், எந்த அலையானாலும்,
எந்த ஆபத்தானாலும் தேவதிட்டங்களை தகர்த்திடமுடியாது என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். அவருடைய அற்புதம் செய்யும் வல்லமையை
காட்டிலும், நான் நினைக்கிறேன், இந்த உறுதியாய் பற்றிக்கொண்டிருந்த மனநிலையே
"அலைகளை அமைதிப்படுத்திற்று" என்று கருதுகிறேன்.
இயேசுவானகர்
இந்த சமாதானத்தை உங்களுக்கு வைத்துவிட்டு சென்றுள்ளார் அல்லவா? (யோவான் 14:27). உங்கள் இருதயங்கள் கலங்காதிருப்பதாக!
No comments:
Post a Comment