கொந்தளிக்கும் அலைகள் (6/14)
ஆரோக்கியம்: இலைகளும், இறைமக்களும்
வெளி 22:22…அந்த
விருட்சத்தின் இலைகள் ஜனங்கள் ஆரோக்கியமடைகிறதற்கு ஏதுவானவைகள்.
இந்த நாட்களில், ஒரு வீடு அல்லது குடும்பத்தில் ஒருவருக்காவது,
ஒரு அடுக்குமாடி குடியிருப்பு, ஒரு சமூகம் அல்லது ஒரு தெரு என்று எடுத்தாலும் குறைந்தபட்சம்
ஒருவராவது இதன் பாதிப்புக்கு ஆளாகிறார்கள், ஆளாகி மீள்கிறார்கள் என்றே நினைக்கிறேன். அவரால் சங்கிலியைப் போல் தொற்று தொடர்கிறது. இந்த சங்கிலியை முறிக்கவே அரசாங்கம் முழு ஊரடங்கினை
கொண்டுவந்துள்ளது. அரசின் முயற்சி பலன்தரும் என்று நம்புகிறோம்.
எங்கு திரும்பினாலும் இருமல், முனகல், புலம்பலின் சத்தத்தை
கேட்கமுடிகிறது. மருத்துவமனைகள் இந்த அறிகுறிகளை
உடையவர்களால் நிரம்பிவழிகிறது. செய்திதாள்கள் பலியானோர் எண்ணிக்கையை வெளிச்சம் போட்டு
காட்டுவதில் தீவிரமாய் உள்ளது. ஆராய்ச்சியாளர்கள் இன்னும் புதுபுது அறிகுறிகளை அடையாளங்காட்டுகிறார்கள். ஜெபக்குறிப்புகளில் இதைதவிர வேறு எதற்கும் இடமில்லை.. ஆட்சியாளர்களும் அதிகதிகமாய் இதைப் பற்றியே பேசுகிறார்கள்,
விவாதிக்கிறார்கள்.
இஸ்ரவேலின் வீழ்ச்சியை கண்டு தீர்க்கன் எரேமியா புலம்புகிறான்
: கீலேயாத்திலே பிசின் தைலம் இல்லையோ? இரணவைத்தியனும்
அங்கே இல்லையோ? பின்னை ஏன் என் ஜனமாகிய குமாரத்தி சொஸ்தமடையாமற்போனாள்? (ஏரேமியா
8:22) ஒருவேளை இதன் வரலாற்று பின்னணியை சற்றே ஒதுக்கிவைத்து, தீர்க்கத்தரிசன பார்வையுடன் பார்ப்போமானால், இது நம்முடைய நாட்டின் நிலையை சித்தரிப்பதுபோல்
உள்ளதள்ளவா? தேவ ஊழியன் தனக்கு தானே இக்கேள்வியை
எழுப்புகிறான். தேவனுடைய தீர்க்கத்தரிசியிடமே
இந்த பெருநஷ்டத்திற்கான விடயம் இல்லை. உண்மையில்
இன்றைக்கும் நம்மிடம் இந்த தொற்றுக்கான மருந்தில்லை
(தைலம்) மருத்துவ நிபுணரும் இல்லை (ரண வைத்தியன்).
கடைசிகால சம்பவங்களை பட்டியலிடும் வெளிப்படுத்தின விசேஷம்
புத்தகத்தில் புதிய எருசலேமை பற்றிய ஒரு ஆச்சரியமான விவரணத்தை பார்க்கிறோம். ஜீவ விருட்சம்
என்ற ஒரு மரத்தை நாம் அங்கு பார்க்கிறோம். அந்த மரம் மாதந்தோறும் புதுப்புது கனிகளை
மட்டும் தருவதில்லை, ஆரோக்கியத்தை அளிக்கும் இலைகளும் அதில் உண்டு. அது என்ன மரம்? அது உண்மையான மரமா அல்லது அடையாளக்குறியா?
அந்த மரம் ஜீவனை அல்லது புதுஜீவனை குறிப்பிடுவதாக இருந்தாலும், அந்த விருட்சத்தின் இலைகள் நமக்கு ஆரோக்கியத்தை
கொடுக்கும் என்கின்ற சத்தியத்தை ஊர்ஜிதப்படுத்துகின்றன. மருத்துவரீதியில், நம்முடைய மருந்துகள் அல்லது கசாயங்கள்
அதிகமாய் இலைகள் அல்லது இலைகளின் கலவைகளால் செய்யப்பட்டவை என்பதை நாம் நன்கு அறிவோம். இலைகளுக்கும் அரோக்கியத்திற்கும் ஓர் தொடர்பு உண்டு.
இலைகள் நமக்கு நிழலைத் தருவதோடு தென்றலையும் அனுபவிக்க
உதவுகிறது. வைத்தியன் இல்லையே, பிசின் தைலம்
இல்லையே என்று எரேமியா அங்கலாய்க்கிறான். வெளிப்படுத்தின் விசேஷத்தில் காணப்படும் மரம்
நம்மை போஷிக்கும் கனிகளையும் நமக்கு ஆரோக்கியமளிக்கும் இலைகளை குறித்தும் பேசுகிறது.
தேவனுடைய ஆலயத்தில், சபையில், இராஜ்ஜியத்தில் நாட்டப்பட்ட
மரங்களாக நீங்கள் நானும் இருப்போமானால், நம்முடைய சிறுசிறு அன்பின் கிரியைகளின் மூலம்
நாம் மெய்யாகவே சுகத்தை கொண்டுவரமுடியும்.
வெளிப்படுத்தின விசேஷத்தில் ஆரோக்கியம் என்ற வார்த்தையின் கிரேக்க பதம் தெரேபியா என்றுள்ளது. தெரபி என்றால் சிகிச்சைமுறை.
ஒருவேளை நம்மிடம் குணமாக்கும் தைலமோ, சுகமளிக்கும் மருத்துவர்களோ
இல்லாதுபோகலாம். ஆனாலும் தேவையில் உள்ள மக்களுக்கு
அன்பின் நிழலாக, உற்சாகமளிக்கும் தென்றலாக
நாம் இருக்கலாம். ஒரு அன்பின் விசாரிப்பு.
நம்மால் இயன்ற உதவி. ஒரு மன்றாட்டு ஜெபம்.
ஆரோக்கியமளிக்கும் இலைகளாக, இறைமக்களாக நாம் இருப்போம்!
No comments:
Post a Comment