Wednesday, April 8, 2020

நான் நிச்சயித்திருக்கிறேன்!ஏப்ரல் 2020

நான் நிச்சயித்திருக்கிறேன்!
தேவநிழல் வாக்குத்தத்த செய்தி - ஏப்ரல் 2020

..எந்த சிருஷ்டியானாலும் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்கமாட்டாதென்று நிச்சயித்திருக்கிறேன் (ரோமர் 8:39)
                                                                                                                                                                    கிறிஸ்துவுக்குள் மிகவும் பிரியமான தேவஜனங்களே,
அன்பின் வாழ்த்துக்கள்!
நம்முடைய வாழ்நாட்களில் நாம் இதுவரையில் சந்தித்திராத ஒரு அபூர்வமான, அச்சுறுத்தக்கூடிய, ஆபத்துகள் சூழந்த ஒரு இக்கட்டான பாதையின் வழியாக  பயணித்துக்கொண்டிருக்கிறோம் என்பதில் சந்தேகமே இல்லை!  ஒரு மாதத்திற்கு முன்பாகவும் கூட, இந்த  நோயின் கூறு  பிற தேசங்களில் வேகமாய பரவி வருவதை கேள்விப்படுகையில்,  நம்முடைய நாடும் இப்படியாக பாதிக்கப்படும் என்று யோசிக்கவோ எதிர்பார்க்கவோ இல்லை.  ஆனால் சடுதியில் விளைந்த ஆபத்தை போல் மார்ச்சு மாதத்தின் பிற்பகுதியிலிருந்து, இதன் தாக்கம் காட்டுத்தீயைப் போல் நாடெங்கும் வேகவேகமாய் பரவி,   தேசத்தின் இயங்குவிசையை நிறுத்திப்போட்டது!   நம்முடைய உள்ளத்தில் ஆயிரமாயிரம் வினாக்கள்! எப்போது இது முடியும்?  நோயின் பிடியிலிருந்து நாமும் நம்முடைய குடும்பமும் தப்பிப்போமா?  வேலை, தொழில், வியாபாரத்தின் நஷ்டங்களை எப்படி ஈடுகட்டபோகிறோம்?  ஊரடங்கில் உணவுக்கு வழி ஏது?  தனித்திருக்கையில் தேவைகள் எப்படி சந்திக்கப்படும்? ஓடியோடி உழைப்பதையே உயிர்மூச்சாக கொண்டவர்கள் உயிர்காக்க  வீட்டுக்காவலில் மூச்சுவிடாமல் இருக்கலாகுமோ?  அச்சுறுத்தும் சத்துருவோ பின்னே  ஆரவரிக்கும் ஆழ்க்கடலோ முன்னே என்ற முதுமொழியின்படி சங்கடங்களும், சவால்களும் நம்மை விட்ட பாடில்லை!

முடிவின் ஆரம்பம்!
ஒரு பக்கம் தேவாதிதேவன் தேசேத்தின்மேல் மனமிரங்கி இக்கொள்ளைநோய் அழிக்கப்படவேண்டும் என்று  நாம் நம்மையே தாழ்த்தி, பாவ அறிக்கை செய்து, அழுது, புலம்பி மன்றாடி வேண்டிவருகிறோம்!   ஆம். நம்மேல் மனதுருகுகின்ற  ஆண்டவர், நாம் மண்ணென்று நினைவுகூரும் தேவன் நம்முடைய விண்ணப்பங்களுக்கு செவிகொடுத்து தேசத்திற்கு சேமத்தை கட்டுளையிடுவார்!  வாதைக்கு முடிவுக்கட்டுவார்.  இன்னொரு பக்கம், தீர்க்கத்தரிசன பார்வையுடன் நாம் காரியங்களை கவனிக்கையில், நம்மை சுற்றி நடக்கும் காரியங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு அடையாளமாக, முன்னோடியாக உள்ளது என்பதை நாம் மறுக்கமுடியாது.  உலகத்தையே ஆட்டிப்படைத்திடும் இப்பேர்ப்பட்ட விபத்துகளை, பேரிடர்களை, ஆபத்துகளை, கொள்ளைநோய்களை சுட்டிக்காட்டுகையில் ஆண்டவர் இயேசு சொன்னார் "இவைகள் எல்லாம் வேதனைகளின் ஆரம்பம்.(மத்தேயு 24).  அப்படியானால் இனி வாழ்க்கையில் வேதனையும் திகில் மட்டுமே எதிர்பார்க்கவேண்டுமோ என்ற கேள்வி உண்டாகிறதா? 
நினைவாயிரு! நிச்சயித்திரு! நிலைத்திரு!
நோயின் தொற்று பரவாமல் நம்மை காத்துக்கொள்ள, நம் மாநில முதல்வர் "விழித்திரு, தனித்திரு, விலகியிரு" என்ற ஊக்கவாசகத்தின் மூலம் நமக்கு ஓர் அக்கறையான  அறிவுரையை விடுத்துள்ளார். அதன் நோக்கம் என்ன? நாம் விழித்திருந்து,  நம்மை நாமே தனிமைப்படுத்தி, சமூகத்திலிருந்து விலகியிருந்தால் நோயின் கொடியின் தாககத்திலிருந்து தப்பிக்கலாம், உங்கள் சுகவாழ்வு, உங்கள் ஆரோக்கியம், உங்கள் ஜீவன் உங்களை விட்டு பிரியாதபடிக்கும் காக்கலாம் என்பதே!

வேதனையின் தோற்றங்களும், உபத்திரவத்தின் உருவங்களும் இந்நாட்களில் அதிகரிக்கவே அதிகரிக்கும் என்ற தீர்க்கத்தரிசன வார்த்தை உண்டு என்றாலும்,  ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து 'முடிவுபரியந்தம் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்' என்றார்.  இந்த வசனத்தில் 'இரட்சிக்கப்படுவான்'  என்ற வார்த்தை நம்முடைய பொதுவான இரட்சிப்பை குறிக்கவில்லை.  இங்கே பயன்படுத்தப்பட்ட கிரேக்க வார்த்தை (sozo) "பத்திரமாய் பாதுகாக்கப்படுவதை" குறிப்பிடுகிறது.  ஆம்!  நிலைத்திருப்பவனே காக்கப்படுவான்!  வேதனைகளின் நடுவிலும் அவன் காக்கப்படுவான் என்பதே அந்த வாக்குத்தத்தம்!  அல்லேலூயா! தேவன் நம்மை ஆக்கினைத்தீர்ப்புக்கென்று நியமிக்காமல், இரட்சிக்கப்படுவதற்கே நம்மை அழைத்திருக்கிறார் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
  
எதிலே நிலைத்திருக்கவேண்டும்? (மத்தேயு 24:12,13)
மத்தேயு 24-ல் கடைசி நாட்களில் நடக்கும் சம்பவங்களை சுட்டிக்காட்டும் போது, வேதனைகளும், உபத்திரவங்களும், பாடுகளும், பிரச்சனைகளும், நிந்தனைகளும் ஒருவனுடைய வாழ்க்கையில் பெருகும்போது இயல்பாகவே விரக்தியும், அங்கலாய்ப்பும், குறைசொல்லுதலும் அவன் இருதயத்தில் அதிகரிப்பதும் உண்மைதான்(வச 12) என்றாலும்,  முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான் என்று ஒரு சாத்தியக்கூறான வார்த்தையினையும் இயேசுவானவர் சொல்லி முடிக்கிறார்.   அங்கே 'நிலைநிற்பது'  உபத்திரவத்தை சகித்துகொள்வதை குறிப்பிடவில்லை, அது 'அன்பிலே' நிலைத்திருப்பதையே குறிக்கிறது.   தேவபிள்ளைகளே, இப்போதும் விசுவாசம், நம்பிக்கை, அன்பு  என்று இம்மூன்றும் நிலைத்திருக்கிறது. ஆனால் இவைகளில் அன்பே பெரியது என்று பவுல் எழுதியுள்ள காரியத்தை நாம் அறிவோம் அல்லவா? (1 கொரிந்தியர் 13).

அன்பில் நிரம்பினவன், அன்பின் கனியை கொடுப்பவன், அன்பிலே நடப்பவன், அன்பிலே நிலைத்திருப்பவனே காக்கப்படுவான்!

அன்பு சோதனையை வெல்லும்
அப்போஸ்தலனாகிய பவுல் தான் கடந்து வந்த பாதைகளை, தனக்கு நேரிட்ட சோதனைகளை ரோமாபுரியில் உள்ள விசுவாசிகளுக்கு  எழுதும்போது (ரோமர் 8:35-38),  இதில் எந்த ஒன்றும் தனக்கும் கிறிஸ்துவுக்குமிடையே உள்ள அன்பின் உறவை, பிணைப்பை பிரிக்கமுடியாது என்று உறுதியுடன், உள்ளத்தெளிவுடன், ஊக்கத்துடன் பறைசாற்றுகிறார்
                  
உபத்திரவம், வியாகுலம், துன்பம், பசி, நிர்வாணம், நாசமோசங்கள், பட்டயம் 

அதுமட்டுமா? உலகில் சம்பவித்துகொண்டிருக்கும், இனி சம்பவிக்கபோகும் எந்த ஒரு காரியமானாலும் சரி, எந்த ஒரு அதிகாரம், எந்த ஒரு வல்லமையானலும் சரி,  தேவதூதர்களானாலும் சரி, வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகளானாலும் சரி,  வேறு எந்த சிருஷ்டியானாலும் சரி, வாழ்ந்தாலும் சரி, மாண்டாலும் சரி, இரண்டு காரியங்களை நான் உறுதியாக அறிவேன் என்கிறார்.

(1) அவருடைய அன்பிலிருந்து என்னை பிரிக்கமுடியாது
(2) அவருடைய அன்பு என்னை ஜெயிப்பவனாக்கும்.

இயேசுவை ஏற்றுக்கொண்ட ஒருவனுடைய  வாழ்க்கையில் ஆசீர்வாதமும், உயர்வும், பெயரும், புகழும் தானே பின்தொடரவேண்டும். அதற்காகத் தானே அவனை அவர் அழைத்திருக்கிறார். பின்னை ஏன் இவைகள் என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா?  ஆசீர்வாத்தை மட்டுமே நோக்கும் அறைகுறை கிறிஸ்தவன்.  கிறிஸ்துவின் சாயலாக மாறவேண்டும் என்று எண்ணங்கொண்டவனே அக்மார்க் கிறிஸ்தவன்.   அவன் கிறிஸ்துவை போல் சிலுவை சுமப்பவனும், பாடுகளை இன்பமாக வரவேற்பவனும்,  இன்னல்கள் மத்தியிலும் இறைமகன் இயேசுவின் மேல் பற்றுறுதியும், பாசமும், நேசமும் மிகுந்த ஒருவனாக இருப்பான்.  அவனுடைய நேர்கொண்ட பார்வையை எந்த ஒரு சவாலும், எந்த ஒரு சிருஷ்டியும், எந்த ஒரு கிருமியும் குலைக்கமுடியாது!

அடைக்கப்பட்டாலும் அன்புகூருவோம்
இந்த நிச்சயத்துடன் வாழ தீர்மானிக்கும் நம்முடைய வாழ்க்கையில், சில சமயம் எதிர்பாராத இழப்புகளும், விளங்கிடமுடியா தடைகளும்,  அநியாய சிறைவாசங்களும், வரண்ட வனாந்திரங்களும் வரலாம்.  அயினும் அவரில் அன்புகூருபவர்களுக்கு (ரோமர் 8:28) சகலமும் நன்மைக்கு எதுவாக நடக்கும் என்ற வாக்குத்தத்தம்  நமக்கு உண்டே!

இன்றைக்கு நாம் அனுபவித்துக்கொண்டிருக்கும் 'தனிமைப்படுத்தல்' என்ற சமூகம்-பயணம்-தொழில்-வியாபாரம்-வேலை மற்றும் ஊழியங்களிலிருந்து   பிரிக்கப்பட்ட,  விலக்கப்பட்ட ஓர் காலக்கட்டத்தில், கட்டாயத்தில் வாழந்துகொண்டிருக்கும் இந்நாட்களை போல் வேதத்திலும் சில கதாபாத்திரங்கள், சில தேவமனிதர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அடைக்கப்பட்ட (lock down) நிலையை சந்தித்தனர்.   அடைக்கப்பட்ட நாட்களை இவர்கள் அணுகின விதமே இவர்களுக்கு நன்மை, மேன்மை,  உயர்வு, ஆசீர்வாதத்தை பின் நாட்களில் அருளிச்செய்தது.

அடைக்கப்பட்ட வனாந்திரத்தில் தேவனுடைய ஜனமாகிய இஸ்ரவேலர்கள் நடந்துகொண்ட விதம் அவர்களுடைய அழிவுக்கு வழிவகுத்தது.  எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு இவர்களுடைய வாழ்க்கை ஒரு தவறான முன்மாதிரி. 

"இவர்  என் நேசகுமாரன் இவரில் நான் பிரியமாய் இருக்கிறேன்" என்று பிதாவினால் அங்கீகாரம் பெற்ற இயேசுவை ஆவியானவர் வனாந்திரத்தில் 40 நாட்கள் அடைத்தார்.  வனாந்திர வாழ்க்கை இயேசுவுக்கு புலம்பலாக, வேதனையாக, வெறுப்பாக அமையவில்லை. மாறாக, வனாந்திரம் அவருக்கு ஜெபபூமியாக மாறிற்று. ஜெபநாட்களின் முடிவில் ஆவியில் பெலங்கொண்ட இயேசுவினால் பிசாசை வெல்லமுடிந்தது. இதுவே நமக்கு மாதிரி.

அடைக்கப்பட்டோர் ஆசீர்வாதமாயினர்
நம்முடைய பரிசுத்த வேதாகமம் அடைக்கப்பட்டவர்களின், சிறைபிடிக்கப்பட்டவர்களின்,  வனாந்திரத்தில் தள்ளப்பட்டவர்களின்  வெற்றி சரித்திரத்தை நமக்கு பட்டியலிட்டும் படம்பிடித்துகாட்டுகிறது. இவர்கள் நமக்கு நன்கு அறிமுகமானவர்களே!  இவர்களும் எதிரபாராத சமயத்தில்,  முன் அறிவிப்பிலாத விதத்தில் தங்கள் வாழ்க்கை பாதையில் ஓர் அடைபடுதலை சந்தித்தனர்!   தேவன்மேல் விசுவாசமும், தேவனிடத்தில் மிகவும் அன்புகூர்ந்த  இவர்களின் இருண்ட நாட்களின்  முடிவு மேனையானதாய், மகிமையாய் இருந்தது. இவர்கள் இந்த இக்கட்டான நாட்களில், இவர்கள் ஒவ்வொருவரும் நமக்கு ஒரு பாடத்தை, நமக்கு ஒரு மாதிரியை, நமக்கு ஒரு செய்தியை முன்வைக்கின்றனர்.  சமபவங்களின் ஆழங்களுக்குள் பயணிக்காமல், இவர்களிய பற்றிய சுருக்கமான குறிப்புகளை மட்டுமே  உங்கள் முன் வைக்கிறேன்!
(1)ஆழ்கடல் பேழையில் அடைக்கப்பட்டார், சந்ததிகளின் தகப்பனானார் (ஆதி 7-9)
தேவன் ஒரு பேழையை  உண்டாக்கும்படி சொல்லி, நோவா மற்றும்  அவனுடைய குடும்பத்தாரை அதிலே பிரவேசிக்கும்படி சொன்னார். தேவனுக்கு கீழ்ப்படிந்த நோவா பேழையில் பிரவேசித்த்தான். வெளியிலிருந்து சாத்தப்பட்ட பேழை எப்போது திறக்கும் என்று நோவாவுக்கு தெரியாது. அவனுக்குள்ளும், நம்மைபோல், கேள்விகள் இருந்திருக்கும். தேவனுக்கு கீழ்ப்படிந்து வாழ்ந்த அவன் தேவனுடைய நேரத்திற்காய் காத்திருந்தான்.  ஒருநாள் தேவன் அவனை நினைவுகூர்ந்தார். பேழையிலிருந்து புறப்பட்டான்.  சந்ததிகளுக்கு ஆசீர்வாதமானான். 
(2) அடிமைவாழ்வில் அடைக்கப்பட்டார், தேசத்தின் அதிபதியானார் (ஆதி 37-43)
யாக்கோபின் செல்லப் பிள்ளையை யோசேப்பு தேவனிடத்திலிருந்து ஒரு தரிசனம் பெற்றிருந்தான்.  காலத்தின் கட்டாயமோ அல்லது சகோதரர்களின் வஞ்சகமோ தெரியவில்லை, அவன் அடிமையாக விறகப்பட்டான், அடிமையானவன் அநியாயமாய் சிறையில் அடைக்கப்பட்டான்,  அடைக்கப்பட்டவன் உதவுவார் இன்றி விடாய்த்துபோனான்.   சங்கடங்கள் பல நேர்ந்தாலும்,  துர்க்கீர்த்திக்கு ஆளானாலும் தேவன்பேரில் வைத்த பற்றையும், பாசத்தையும், நம்பிக்கையையும் அவன் இழந்துபோகவில்லை. நாள் ஒன்று வந்தது. அரண்மனை அவனை அழைத்தது.   அடிமை ஒரே இரவில் அதிபதியானான்.  அதிபதி தன் சொந்த குடும்பத்தின் இரட்சகனாய் மாறினான்.
(3)ஆற்றண்டையில் அடைக்கப்பட்டார், ஆதரவற்றவளுக்கு ஆசீர்வாதமானார் (1 இராஜாக்கள் 17)
தேசத்தின் ராஜாக்களை நடுநடுங்க வைத்தவனும், பாகால் தீர்க்கத்தரிசிகளுக்கு சாவுமணி அடித்தவனுமாகிய இஸ்ரவேலின் வல்லமையான தீர்க்கதரிசி எலியாவை தேவன் ஒருமுறை அழைத்து ஒரு ஆற்றண்டையில் ஒளித்துக்கொண்டிரு.   புகழ்பெற்ற ஒரு தீர்க்கத்தரிசியை பார்த்து தேவன் ஒரு ஆற்றுப்படுக்கையில் போய் தங்கியிரு என்கிறார்.  ஏன் என்று தெரியவில்லை?  கர்த்தருக்கு பயந்து அவருடைய வசனத்திற்கு கீழ்படிந்து அதனை அறிவிப்பதே ஊழியமாக கொண்ட் தீர்கத்தரிசி மறுப்பு சொல்லாமல் அந்த வனாந்திர வாழ்க்கைக்கு தன்னை ஒப்புக்கொடுத்தார். ஆற்றங்கரையில் என்ன கிடைக்கும்?  காகங்கள் அவனுக்கு இறைச்சியை கொண்டுவர, அவன் ஆற்றின் தண்ணீரைக் குடித்து பிழைத்துக்கொண்டான்.  மழைபெய்யாத தேசத்தில் ஆற்றுத்தண்ணீரும் வரண்டது.   அங்கிருந்து சாறிபாத் ஊரில் உள்ள ஒரு விதவையினிடம் போ என்றார் ஆண்டவன்.  அடுத்த வேளை உணவுமட்டுமே இருந்த ஒரு ஏழையினிடத்தில் அப்பம் கேள் என்ற கட்டளை பெற்றார்.  உண்மையில் ஒரு வல்லமைபொருந்திய ஊழியன் தன் வாழ்க்கையில் எதிர்பாராத காரியங்கள்.  அடைக்கப்பட்ட நிலையில் அவன் தேவனிடம் வாதாடாமல் தன்னையே முழுவதுமாக ஒப்புக்கொடுத்ததினால் சாகும் நிலைக்கும் தள்ளப்பட்ட ஒரு குடும்பத்திற்கு ஓர் அற்புத செயல்வீரனாக மாறி, அந்த குடும்பத்தையே அப்பட்டணத்திற்கு ஆசீர்வாதமானார்!
(4)ஆபத்தான சிறையில் அடைக்கப்பட்டார்,  இரட்சிப்பின் பாத்திரமானார் (அப்போ 16)
கிறிஸ்து விரோதியாக இருந்த சவுல்  என்கின்ற பவுல் ஆண்டவர் இயேசுவினால்  தொடப்பட்டு, கிறிஸ்துவுக்கு பையித்தியக்காரனாக மாறி  எல்லா இடங்களிலும் இயேசு மேசியா, இயேசுவே இரட்சகார் என்று வைராக்கியமாக பரைசாற்றிக்கொண்டிருந்தார்.   தேவனும் அவரை வல்லமையாக பயன்படுத்த தொடங்கினார். அநேகர் தொடப்பட்டார்கள்.  ஆனால் ஒரு முறை பவுலும் சீலாவும் ஒரு சிலரை இரட்சித்து, ஒரு பெண்மனிக்குள் காணப்பட்ட பொல்லாத ஆவீயை துரத்தினதின் நிமித்தம் பொய்யாக குற்றஞ்சாட்டப்பட்டு,  அடிக்கபட்டு, துன்புறுத்தப்பட்டு, வஸ்திரங்கள் பிடுங்கப்பட்டு, கொடுமையான சிறையில் அடைக்கப்பட்டார்.  கிறிஸ்துவுக்கு உண்மையாய் ஊழியம் செய்த திருத்தொண்டன் பவுல் இப்போது தன் கால்கள் தொழுமரத்தில் கட்டப்பட்ட நிலையில் சிறையில் அகப்பட்டுள்ளான்.  ஒருவேளை நாம் ஆண்டவனுக்கு ஊழியம் செய்த இவனுக்கு இப்படி நடக்கலாகதே என்று நினைக்கலாம்? ஆனால், அடைக்கப்பட்ட பவுலும் அவனுடைய சகாவும் சிறைக்கம்பிகளை கண்டு கலங்காமல்,
 புலம்பாமல், குறைகூறாமல் துதித்து பாடி தேவனை மகிமைப்படுத்தினார்கள்.  அவர்களுடைய துதி அந்த இடத்தில் ஒரு பூமியதிர்ச்சியையே கொண்டுவந்தது.   சங்கிலிகள் அறுப்பட்டன, கதவுகள் திறக்கப்பட்டன.   சிறை அதிகாரியும் அவன் குடும்பமும் அன்று இரவே இரட்சிக்கப்படுகிறது.  அநியாயமாய் அடைக்கப்பட்டவன் இப்போது ஒரு குடும்பத்திற்கே இரட்சிப்பின் தூதுவனாக மாறினான்.
அன்பான தேவஜனங்களே,  ஒருபக்கம் இந்த பெருந்தொற்றுநோயினால் உண்டாகும்  பயமும், இன்னொரு பக்கம் ஊரடங்கு உத்தரவினால் வரும் வசதி, வருமானம், வாய்ப்புகளின் குறைச்சலும் ஒருவித மன உளைச்சலி உங்களை தள்ளியிருக்கலாம்.   அடைபடுவது அல்லது அடைக்கப்படுவது அல்லது தனிமைப்படுத்தப்படுவது நமக்கு ஒரு நூதனமான அனுபவமாக இருக்கவேண்டியதில்லை.
செய்தியின் சுருக்கம் இதுவே:  இரண்டு பிரதான குறிப்புகள். ஒன்றை அறியவேண்டும், ஒன்றை நிச்சயிக்கவேண்டும்.  
(1) அடைக்கப்பட்ட நாம் நோவைப் போல், யோசேப்பை போல், எலியாவைப் போல், பவுலைப் போல் மீண்டுவருவோம்.   நாம் அடைக்கப்பட்டதும், பின்னர விடுவிக்கப்படதும், ஒரு சந்ததிக்கு, ஒரு தேசத்திற்கு, ஒரு பட்டணத்திற்கு, ஒரு குடும்பத்திற்கு ஆசீர்வாதமாக முடியும் என்பதை அறியுங்கள்.
(2) எவ்வளவேனும் அடைப்பட்டாலும் ஆண்டவரகிய இயேசு கிறிஸ்துவின் அன்பிலிருந்து ஒன்றும் என்னை பிரிக்கமுடியாது.  அன்பில் நடக்கும் என்னை ஒருவரும் ஒருக்காலம் அழிக்கமுடியாது.  முடிவுபரியந்தம் அந்த அன்பில் நிலைநின்று காக்கப்படுவேன் என்று நிச்சயிடுத்திருக்கிறேன்.
நினைவாய் இருங்கள், நிலைத்திருங்கள், நிச்சயதிருங்கள்!
கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதித்து காக்கக்கடவர்!
இயேசு கிறிஸ்துவின் பணியில்
இரா.வினோத் குமார்
9840011374, 9840995057
தேவநிழல் ஊழியங்கள்

No comments:

Post a Comment

I WILL COME | PROMISE | GOD'S SHADOW MINISTRIES | MARCH 2025

  I WILL COME AND HEAL HIM PROMISE | MARCH 2025 Mat hew 8:7   And Jesus saith unto him, I will come and heal him   Dearly beloved...