Saturday, April 25, 2020

மூன்றில் நான்கு..(அவர் கண்ணீர்விட்டார்…தொடர்ச்சி) (போதிக்கப்பட்டேன்…தொடர் பதிவு…9/19)


மூன்றில் நான்கு..(அவர் கண்ணீர்விட்டார்…தொடர்ச்சி)(போதிக்கப்பட்டேன்…தொடர் பதிவு…9/19)
தமிழில் இரண்டு வார்த்தைகள்.  இரண்டிலும் மூன்று எழுத்துக்கள். ஒன்று 'அன்பு', இன்னொன்று 'கொடுமை'. 'அன்பு' என்ற வார்த்தையின் இடையினில் ஒரு மெய்யெழுத்து,  ஆம்! அன்பே மெய்யென்று காண்பிக்கும் விதத்தில். 'கொடுமை' என்ற வார்த்தையில் மெய்யெழுத்து இல்லை. கொடுமையில் எந்த மெய்மையும் இல்லை என்று காண்பிப்பதற்கோ?
                                                                                  இன்னும் இரண்டு வார்த்தைகள் உண்டு. ஒன்று 'பாவம்'.  இன்னொன்று 'முடிவு'. பாவம் என்ற வார்த்தையின் கடைசி எழுத்து 'ம்' என்ற மெய்யெழுத்து. பாவம் மெய்யை முடித்துவிடுகிறது. முடிவும் 'ம' வில் தொடங்குகிறது.…பாவம் ஒருவனுடைய முடிவின் தொடக்கமாக மாறிவிடுகிறதோ?   வார்த்தை விளையாட்டு வரம்பு மீறி போகிறதோ?  இனி விளையாட்டை உங்கள் கையிலேயே விட்டுவிடுகிறேன். வார்த்தைகளை வைத்து சுவாரஸ்யமான செய்தியை உருவாக்குங்களேன்!
                                                                                  'ஒரு படம் பல்லாயிரம் வார்த்தைகளுக்கு சமம்' என்ற ஒரு ஆங்கில முதுமொழி உண்டு.  இந்த பதிவில் இணைத்துள்ள படத்தை வார்த்தைகளால் அலங்கரிக்கசொன்னால் என்ன சொல்லுவீர்கள்?  ஒருவர் 'கொடுமை' என்ற வார்த்தையின் உருவம். அதுவும் (ஓரு குறிப்பிட்ட) மனிதஇனத்தின் மேல் இழைக்கப்பட்ட கொடுமை.  இன்னொருவர் 'அன்பு' என்ற வார்த்தையின் சொரூபம். அதுவும் (குஷடமும் குறையுமாய்) உள்ள மனிதஇனத்தின் மேல் காட்டப்பட்ட அன்பு. இப்படத்தில் உள்ள இருவரும் ஒருவரல்ல.  ஆனால் ஒரே விதத்தில் உருவாக்கப்பட்டவர்கள். ஒரே நபரின் வடிவமைப்பானவர்கள்.  இவர்களை பெற்றெடுத்தவர்கள் மனிதர்களாக இருக்காலாம், ஆனால் இவர்களை இவ்வடிவில் வடிவமைத்தவர்  "ஒரே மெய்த்தேவனாகிய' கர்த்தர்.  ஆதியாகமம்  புத்தகம் தேவன் மனிதனை 'தம்முடைய சாயலத்தின்படியும் தம்முடைய ரூபத்தின்படியும்'  உண்டாக்கினார் என்று சொல்கிறது.  நாம் யாராக இருப்பினும், நாம் என்ன செய்தாலும், நாம் எப்படி வாழ்ந்தாலும், நம் வாழ்க்கையில் எந்த நிலைக்கு நாம் உயர்ந்தாலும், அல்லது தாழ்ந்திருந்தாலும்,  நாம் மறுக்கமுடியாத ஒரு  உண்மை என்னவென்றால், நீங்களும் நானும் தேவனுடைய ரூபத்தின்படி உண்டாக்கப்பட்டவர்கள்!              
                                                                                  யூத புரட்சியாளர்களில் சிலர் ஒரு முறை இயேசுவிடம்,  ராயனுக்கு வரியை செலுத்தவேண்டுமா என்று இயேசுவிடம் வினவினார்?   தங்கள் தேவன் தந்த பூமியில் வாழும் இவர்கள் ஏன் ரோம அரசனுக்கு தீர்வை செலுத்தவேண்டும் என்பதே இவர்களின் வாதம்.  ஆனால், இவர்களுக்கு இயேசுவானவர் தந்த பதில் இவர்களை திக்குமுக்காடச்செய்துவிட்டது.   ஒரு நாணயத்தை எடுத்து அதில் பொதிந்துள்ள சொரூபமும்  மேலெழுத்தும் யாருடையது என்று வினவினார்.  அது இராயனுடையது என்றார்கள். அதற்கு அவர் (அவர்களுடைய முகத்தை உற்றுபார்த்து சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன்): அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார்.  இந்த சாதுர்யமான பதில் அங்கிருந்த எத்துனை பேருக்கு புரிந்ததோ தெரியவில்லை.  இராஜாவின் சொரூபம் காணப்படும் பணம் இராஜாவுக்கு சொந்தமென்றால், தேவனுடைய சொரூபத்தை உடையவர்கள் யாருக்கு சொந்தம்…அல்லது யாருக்கு உரியவர்கள்?
                                                                                  கொடுமை-பாவம்-அன்பு
கொடுமை கொடுமையை பிறப்பிக்கும்.  கொடுமையை நாம் கட்டுப்படுத்தாவிடில், கொடுமை தீமையாகி,  தீமை பாவமாகிடும்.  தீமைக்கு ஒரே மாற்றுமருந்து, அன்பு.  உலகத்தின் பாவத்தை சுமந்துதீர்க்க, பாவத்தின் தண்டனையை செலுத்தி தீர்க்க, தேவன் தம்முடைய குமாரனை உலகிற்கு அனுப்பினார்.  தீமையின் ஒட்டுமொத்த அபராதம், அதன் தண்டனை ஒருவர்மேலேயே  ~ ஆண்டவராகியே இயேசு கிறிஸ்துவின்மேல் வந்தது.  ஏதேன் தோட்டத்தில், தேவன் தாம் உண்டாக்கின் சிருஷ்டிப்புக்கு மரணதண்டனை விதித்தார்.   கொல்கோதா மலையில்,  தேவன் தம்முடைய சிருஷ்டிப்புக்கு நித்தியஜீவனை வித்திட்டார்.  அன்பு தேவனுடைய குணாதிசயம் என்று வேதம் நமக்கு சொல்லவில்லை.  தேவன் அன்பாகவே உள்ளார் என்று வேதம் கூறுகிறது (1 யோவான் 4:8).  இந்த அன்பு அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையில் ஆள்தத்துவமாகவும், அவருடைய சிலுவை மரணத்தில் செயல்முறையிலும் நீரூபிக்கப்பட்டது   (1 யோவான் 4:9)
                                                                              இயேசுவானவரின் தோற்றத்தில் தேவன் நமக்கு தம்மை வெளிப்பட்டார். தேவனுடைய அன்பின் பரிமாணம் இன்னதென்பதை இயேசு நமக்கு வெளிப்படுத்தினார்.  இயேசுவானவர் தேவனுடைய தற்சொரூபமும், சாயலும், அன்பின் முதலெழுத்துமானவர்.
                                                                                தான் ஆசையாய் வாங்கித் தந்த விலையேறப்பெற்ற வெள்ளை சட்டையை தன் பிள்ளை அழுக்காக்கினபோது….அப்பா கண்ணீர் விட்டார்…தன்னுடைய சாயல் (அன்பு) உலகத்தால் (மனிதனின் தீமை) கரைப்படும்போது,  இயேசு கண்ணீர்விடுகிறார்….
                                                                                  தேவனுடைய புத்திரன் (அல்லது அவருடைய படைப்பாகிய) ஹிட்லர் (அவருக்குள் நீங்களும் நானும்) தேவனுடைய ஜனத்தை(ஆவியிலும் உண்மையிலும்)கணக்கில்லாமல் கொன்றுகுவிப்பதில் மமதைகொள்ளும்போது, தகப்பனின் ரூபம் கரைபடுகிறது…இயேசுவுக்குள்ளிருந்து பிதாவானவர் கண்ணீர் விடுகிறார்….
                                                                                  நான், அல்லது என் நிலை,  இயேசுவின் கண்களில் கண்ணீரை கொண்டுவருகிறதா?  ஆம். ஒருவேளை நானும் மரித்து அடக்கம்பண்ணப்பட்டு நான்கு நாட்கள் ஆன பின்னரும் கல்லறையில் இருந்தால்…அவர் கண்ணீர்விடுவார்
                                                                  (தொடரும்…)

1 comment:

  1. அருமையான பதிவு அண்ணா, நன்றி!

    ReplyDelete

I WILL COME | PROMISE | GOD'S SHADOW MINISTRIES | MARCH 2025

  I WILL COME AND HEAL HIM PROMISE | MARCH 2025 Mat hew 8:7   And Jesus saith unto him, I will come and heal him   Dearly beloved...